புதுயுகத்தின் 'இனியவை இன்று!!!!!

3rd of April 2014
சென்னை::ஒவ்வொரு காலை நேரத்தையும்  கலகலப்பாகவும், கருத்து செறிவுடனும் மாற்ற உதவுகிறது புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்  
'இனியவை இன்று' நிகழ்ச்சி.

தமிழைப் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள், நாம் பார்த்துப் பழகிய பல விஷயங்களின் ஆதி முதல் அந்தம் வரையான கதைகள், இலக்கிய மற்றும் திரை உலகைச் சேர்ந்த பலரது வீட்டு நூலகங்கள் மற்றும் அவர்கள் ரசித்த புத்தகங்கள், இவற்றோடு ஒவ்வொரு நாளின் முக்கியத்துவம் பற்றி விருந்தினர்களோடு கலகலப்பான உரையாடல் கொண்ட நிகழ்ச்சி இந்த இனியவை இன்று.

நிகழ்ச்சியின் முதல் பகுதி விருந்தினர்களுக்கானது. 24 மணி நேரத்தில் கடந்து போகும் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு நல்ல விஷயத்துக்கான விழிப்புணர்வையும், மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான நோக்கத்தையும் கொண்டிருக்கிறது. தேசிய கல்வி நாள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம், பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம், பஞ்சாயத்து ராஜ் தினம் என இருக்கும் இந்த ஒவ்வொரு நாளையும் மையமாகக் கொண்டு அதற்கேற்ற விருந்தினர்களுடன் கலந்துரையாடல் செய்வதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது இந்த பகுதி.  எல்லாத் தளங்களில் இருந்தும் இதற்கான விருந்தினர்கள் கலந்து கொள்கிறார்கள்.

அடுத்த பகுதி புத்தகங்கள் வாசிப்புக்கான பகுதி. பல துறை சார்ந்த பிரபலங்கள் அவர்கள் ரசித்த புத்தகங்கள் பற்றிப் பேசுகிறார்கள். அதோடு நிறுத்திக் கொள்ளாமல் அவர்களுக்கு புத்தக வாசிப்பு பழக்கம் ஏற்படக் காரணமான சம்பவங்கள், புத்தக வாசிப்பு ஏற்படுத்திய அனுபவங்கள் பற்றிப் பேசும் போது அது இன்னும் நெருக்கமான அனுபவமாக அமைகிறது.

இன்னொரு பகுதி நம் தாய்மொழி தமிழுக்கானது. ஒவ்வொரு நாளும் வேறு வேறு நபர்கள் தமிழ் மொழி பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களைச் சொல்கிறார்கள். அதில் முனைவர் அரசேந்திரன் தரும் வேர்ச்சொற்கள் தொடர்பான பகுதி மிகவும் சுவரஸ்யமாக இருக்கிறது. நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு சொல்லின் மூலமும் வியப்பை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது.

மாளவிகாவும், மணிமாறனும் தெருக்கூத்து, பவழப்பாறைகள், பேனா, அருவி, பல்லுயிர்ச்சூழல், மெட்ரோ ரயில்கள், என்று நாம் அறிந்த பல விஷயங்கள் பற்றி ஆதி முதல் அந்தம் வரை அலசும் பகுதியும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. இதற்கு டிராட்ஸ்கி மருது குழுவின் கார்ட்டூன்கள் பலம் சேர்க்கின்றன.

ஒரு வானொலியில் நிகழ்ச்சிகள் வழங்கப்படும் பாணியில் இந்நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் ஆனந்தியும், வருணும் கலகலப்பாக நிகழ்ச்சியைக் கொண்டு செல்கின்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் இவர்கள் சொல்லும் இணையதளத்தை தேடிப் பார்க்கத் தூண்டுகிறது. இந்த நிகழ்ச்சி வாரத்தின் ஏழு நாட்களிலும் காலை 8.00 மணி முதல் 9.00 மணி வரை புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

Comments