ரஜினி உருக்கம்: கோச்சடையான் கடவுள் எனக்கு கொடுத்த பரிசு!!!

26th of April 2014
சென்னை::ரஜினி நடித்துள்ள கோச்சடையான் அனிமேஷன் படத்தின் ஆடியோ விழா முதலில் சென்னையில் நடந்ததையடுத்து, அதன் இந்தி பதிப்புக்கான ப்ரமோஷன் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. அதில் அமிதாப்பச்சன் கலந்து கொண்டார். அதையடுத்து இப்போது தெலுங்கு பதிப்புக்கான ப்ரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்துள்ளது. இந்த விழாவில், தனது மனைவி மற்றும் மகள் செளந்தர்யாவுடன் ரஜினி பங்கேற்றுள்ளார். மேலும், ராமா நாயுடு, தாசரி நாராயணராவ், மோகன்பாபு உள்பட சில நடிகர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
 
இந்த விழாவில் ரஜினி பேசுகையில், இரண்டரை வருடத்துக்கு முன்பு ராணா என்ற படத்தில் நடிக்கயிருந்தேன். அப்போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அதையடுத்து நான் நடிக்க கூடாது என்று மருத்துவர்கள் கூறி விட்டனர். அந்த நேரத்தில் என் மகள் செளந்தர்யா இந்த கோச்சடையான் கதையை சொல்லி அதை அனிமேஷன் படமாக எடுக்கலாம் என்று சொன்னார்.
 
எனக்கு டெக்னாலஜி பற்றி எதுவும் தெரியாது என்பதால் தயங்கினேன். ஆனால் பின்னர் நண்பர்கள் பலரும் கொடுத்த தைரியத்தில் நடிக்க சம்மதம் சொன்னேன். ஆக, இப்போது படம் ரிலீசுக்கே ரெடியாகி விட்டது. படத்தை பார்த்த நான் ஒரு ரசிகனாக அந்த கதையோடு கலந்து விட்டேன். அந்த அளவுக்கு அனிமேஷன் படம் போல் இல்லாமல் நிஜ படம் போலவே காட்சிகள் கோர்க்கப்பட்டிருக்கிறது. அதோடு, உயிரோடு இல்லாதவர்களை வைத்துதான் இதுபோன்ற அனிமேஷன் படங்களை எடுப்பார்கள். ஆனால் நான் உயிரோடு இருக்கும்போதே இப்படியொரு படத்தில் நடித்திருக்கிறேன். அதை நினைக்கும்போது மனதுக்கு ஒரு மாதிரியாகவே இருந்தது. இருப்பினும், படம் பார்த்தபிறகு அந்த எண்ணம் மாறி விட்டது.
 
மேலும், ஏற்கனவே நான் நடித்த எந்திரன், கோச்சடையான் போன்ற படங்களில் டெக்னாலஜி பற்றி நன்கு தெரிந்த கமல்தான் நடித்திருக்க வேண்டும். அதுதான் சரியாக இருந்திருக்கும். ஆனால் டெக்னாலஜி பற்றி எதுவுமே தெரியாத எனக்கு அந்த வாய்ப்புகள் கிடைக்கிறது என்றால் அதை கடவுள் எனக்கு கொடுத்த பரிசு என்றுதான் சொல்ல வேண்டும்.
 
இவ்வாறு ரஜினி பேசியுள்ளார்.
 

Comments