என்னை பழிவாங்க விஷால் திட்டம் - பாலா!!!! nan sigappu manithan audio launch-stills!!!

13th of March 2014
சென்னை::.விஷால் நடிப்பிலும் தயாரிப்பிலும் இயக்குனர் திரு இயக்கியிருக்கும் ’நான் சிகப்பு மனிதன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று(13.03.14) காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இயக்குனர்கள் பாலா, ஹரி, விஷ்ணுவர்தன், விஜய் மற்றும் விஷாலின் நெருங்கிய நண்பர்களான விஷ்ணு, விக்ராந்த், சாந்தனு, ஜித்தன் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்ட இவ்விழாவில், வழக்கமான வாழ்த்துகள் மட்டுமல்லாமல் சுவாரஸ்யமான பேச்சுக்களும் இடம்பெற்றன. 
 
இயக்குனர் பாலா பேசியபோது “நான் சிகப்பு மனிதன்’ திரைப்படத்தின் ஹீரோ எப்போதும் தூங்கிக் கொண்டே இருக்கிறார். எனக்கென்னவோ இது என்னை பழிவாங்க விஷாலும், திருவும் இணைந்து யோசித்த திட்டம் என்றே தோன்றுகிறது. நான் தான் எப்பொழுதும் தூங்கிக்கொண்டே இருப்பேன். காலையில் ஷூட்டிங்கிற்கு ஸ்பாட்டிற்கே 11 மணிக்குத் தான் செல்வேன். இரவு 7.30 மணிக்கு ஷூட்டிங் என்றால் விடியற்காலைக்கு சற்று முன்பு தான் செல்வேன்” என்று கலகலப்பாக பேசினார். 
விஷால் பேசியபோது “ இயக்குனர் பாலாவுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். அவன் - இவன் படத்தில் நடித்த சமயத்தில் நான் பலவற்றைக் கற்றுக்கொண்டேன். நான் இரண்டு ஹீரோக்களில் ஒருவனாக நடித்தேன் என்பதை விட 17 நாட்கள் ஒரு ஹீரோயினாக வாழ்ந்தேன் என்று சொல்லலாம். ஆரம்பத்தில் எதுவும் தெரியாவிட்டாலும் நாளாக நாளாக நான் ஒரு பெண்ணாகவே மாறிவிட்டேன். ஷூட்டிங்கின் போது கொஞ்சம் கிளாமராக தெரியவேண்டும் என்று கேமராமேன் சில கரெக்‌ஷன் செய்யச்சொன்னபோது, நடிகைகள் இந்த சமயத்தில் எப்படி உணர்கிறார்கள் என்பதை மனமாற உணர்ந்தேன். தற்போது நடித்துக்கொண்டிருக்கும் நடிகைகளுக்கும் சரி, முன்பு நடித்த நடிகைகளுக்கும் சரி... அனைவருக்கும் நான் தலைவணங்குகிறேன்” என்று கூறினார்.

Comments