கிருஷ்ண தேவராயராக வடிவேலு நடிப்பதா? தெலுகு மக்கள் பேரவை கண்டனம்!!!

18th of March 2014
சென்னை::சிரிப்பு நடிகர் வடிவேலு, கிருஷ்ண தேவராயராக நடிக்கக் கூடாது; மீறி நடித்தால், போராட்டத்தில் குதிப்போம்' என, தமிழ்நாடு தெலுகு மக்கள் பேரவை, எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சிரிப்பு நடிகர் வடிவேலு, 'ஜெகஜ்ஜால புஜ பல தெனாலிராமன்' என்ற படத்தில், கிருஷ்ண தேவராயராக நடித்து வருகிறார். படம், விரைவில் வெளிவர உள்ளது. இந்த நிலையில், 'கிருஷ்ண தேவராயராக, வடிவேலு நடிக்கக் கூடாது' என, தமிழ்நாடு தெலுகு மக்கள் பேரவை, கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த, பேரவை மாநிலத் தலைவர், பாலகுருசுவாமியின் அறிக்கை: கிருஷ்ண தேவராயரை இழிவுபடுத்தும் வகையில், வடிவேலு, சில காட்சிகளில் நடித்து இருப்பதாக தெரிகிறது. சிரிப்பு நடிகர் வடிவேலு நடிப்பது, கிருஷ்ண தேவராயரை இழிவு படுத்துவதோடு, உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான தெலுங்கு மக்களை இழிவுபடுத்தும் செயல். ஆட்சேபம் தெரிவித்து நடிகர் வடிவேலு, தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் மற்றும் இயக்குனர் யுவராஜ் தயாளனுக்கும் கடிதம் எழுதியுள்ளோம். 'படத்தை வெளியிடக்கூடாது' என, சினிமா தணிக்கைத் துறைக்கும் கடிதம் அனுப்பியுள்ளோம்.
 
அதையும் மீறிபடத்தை வெளியிட முயற்சித்தால், தமிழ்நாடு தெலுங்கு மக்கள் பேரவை தொண்டர்களால், நடிகர் வடிவேலு வீடு முற்றுகையிடும் தேதி விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்து உள்ளார்.
 

Comments