18th of March 2014
சென்னை::சாக்லெட் ஹீரோ இமேஜை உடைக்க போராடுகிறேன் என்றார் ஜெயம் ரவி.சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் ‘நிமிர்ந்து நில்‘ படத்தை அடுத்து ‘ஜெயம்‘ ராஜா இயக்கும் படத்தில் நடிக்கிறார். அவர் கூறியதாவது:
பேராண்மை, ஆதி பகவன், நிமிர்ந்து நில் என ஆக்ஷன் படங்களில் நடித்தும் சாக்லெட் ஹீரோ இமேஜ்தான் தொடர்கிறதே என்கிறார்கள். இமேஜ் வட்டத்துக்குள் நான் சிக்க விரும்பாவிட்டாலும் அந்த இமேஜ் என்னிடம் ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது. அதை உடைக்கத்தான் போராடிக்கொண்டிருக்கிறேன். காதல் ஹீரோ, ஆக்ஷன் ஹீரோ என இரண்டு வகை கதாபாத்திரத்திலும் என்னை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
என்னைப்போல் டபுள் இமேஜ் எந்த ஹீரோவுக்கும் கிடையாது. சாக்லெட் பாய் ஹீரோதானே என்று சமுத்திரக்கனியோ, ஜனநாதனோ, அமீரோ என்னை ஒதுக்காமல் ஆக்ஷன் ஹீரோவாகவும் நடிக்க முடியும் என்று தேர்வு செய்ததே எனக்கு கிடைத்த வெற்றி.
அடுத்து ஜெயம் ராஜா இயக்கும் படத்தில் நயன்தாராவுடன் நடிக்கிறேன். எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சந்தோஷ் சுப்ரமணியம்போல் இதுவும் காதல் கலந்த குடும்ப கதைதான். என்னுடன் நடித்த நடிகைகளில் எனக்கு ரொம்ப பிடித்தவர் ஜெனிலியாதான். ஈகோவே இல்லாத அவரது குணம் என்னை கவரும். இதனால் மற்ற ஹீரோயின்கள் கோபப்படுவார்கள் என்று பயப்படவில்லை. இவ்வாறு ஜெயம் ரவி கூறினார்.
Comments
Post a Comment