ரஜினியைச் சந்தித்தார் மு.க.அழகிரி!!!

14th of March 2014
சென்னை::நேற்று டெல்லியில் பிரதமரை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்திய முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, இன்று காலை திடீரென்று நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார்.

மு.க.அழகிரி இன்று காலை திடீரென போயஸ் தோட்டத்துக்கு வந்திருந்தார். அவர் தனது மகன் துரை தயாநிதியுடன் நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்குள் சென்றார். இன்று காலை 10.20க்கு வந்த அவர், மகனுடன் தனியாகச் சென்று சந்தித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று பிரதமர் மன்மோகன்  சிங்கை திடீர் என சந்தித்து மு.க.அழகிரி பேசியுள்ளார். காங்கிரஸ் தலைவர்கள் சிலரையும் அவர் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், சில நாட்களுக்கு முன்னர் அவர் மதிமுக பொதுச் செயலர் வைகோவையும் சந்தித்துப் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், ரஜினியை சந்தித்துவிட்டு வெளியே வந்த மு.க. அழகிரி, ரஜினிகாந்த் எனது நீண்ட கால நண்பர். அவரை சந்தித்து நலம் விசாரித்து வாழ்த்து சொல்லவே வந்தேன். என் மகன் நடிக்கும் அடுத்த படம் தொடர்பாக பேசிவிட்டு, அவரது ஆசியைக் கோரினேன். ரஜினியின் கோச்சடையான் பட பாடல்களைக் கேட்டேன். மிகவும் நன்றாக இருந்தது. கவிஞர் வைரமுத்துவின் பாடலும், ரஜினி பாடிய விதமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனைச் சொல்லி, அவரிடம் பாராட்டினேன். மற்றபடி வேறு எந்த அரசியல் பேச்சும் அவரிடம் பேசவில்லை என்று கூறினார்...  
 

Comments