24th of February 2014
சென்னை::லீஸுக்கு கிடைத்த ஒரு தியேட்டரை திருமண மண்டபமாகவோ, ஷாப்பிங் காம்ப்ளக்ஸாகவோ உருமாறிவிடாமல் பார்த்துக் கொள்ளத் துடிக்கும் இளைஞனின் போராட்டமே இந்த ‘பிரம்மன்’
சென்னை::லீஸுக்கு கிடைத்த ஒரு தியேட்டரை திருமண மண்டபமாகவோ, ஷாப்பிங் காம்ப்ளக்ஸாகவோ உருமாறிவிடாமல் பார்த்துக் கொள்ளத் துடிக்கும் இளைஞனின் போராட்டமே இந்த ‘பிரம்மன்’
சினிமாதான் வாழ்க்கை என்று ஊரின் தியேட்டரில் உள்ள ரீல் பெட்டியைக் கடத்திக்கொண்டு போய் நண்பர்களுக்குப் படம் காட்டும் இரண்டு சிறுவர்களின் கனவுகளோடு தொடங்குகிறது படம்.
அந்தச் சிறுவர்களில் ஒருவன் சிவா (சசிகுமார்). நண்பனுடன் (சந்தானம்) சேர்ந்து ஊரில் உள்ள மாடர்ன் தியேட்டரை லீஸுக்கு எடுத்து நடத்துகிறான். பழைய படம் மட்டுமே ரிலீஸ் ஆகும் அந்தத் தியேட்டருக்குப் பெரிதாகக் கூட்டம் வருவதில்லை. வருமானம் ஈட்டித் தராத அந்தத் திரையரங்கால் ஒரு கட்டத்தில் ஐந்து லட்சம் கடனாளி ஆகிறான் சிவா. சிறு வயதில் தன்னோடு சேர்ந்து தியேட்டரில் ரீல் பெட்டி கடத்திய நண்பன் குமார் (நவீன் சந்திரா) இப்போது பெரிய இயக்குநராக இருப்பது ஞாபகம் வருகிறது. அவனைப் பார்த்து உதவி கேட்கலாம் என்று சென்னைக்குப் புறப்படுகிறான்.
அங்கு அவனுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்க, அதன் மூலம் பணம் கிடைக்கிறது. நண்பனையும் சந்திக்கிறான். ஆனால் அவனுக்கு இவனை அடையாளம் தெரியவில்லை. அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களால் சிவா பெரும் இழப்புக்கு ஆளாகிறான். அவன் நண்பனுக்கு உண்மை தெரியவரும்போது அவன் அதை எப்படி எதிர்கொள்கிறான்?
ஆதரவற்ற திரையரங்கம் என்னும் பின்புலத்தில் கதையை அமைத்த விதத்தில் புது இயக்குநர் சாக்ரடீஸ் கவனிக்கவைக்கிறார். ஆனால் காதல், நாயகனின் போராட்டம், அவனுக்கு ஏற்படும் திருப்பங்கள் ஆகியவற்றை அழுத்தமாகச் சொல்லத் தவறிவிட்டார். திருப்பங்களில் நம்பகத்தன்மை இல்லை. சென்டிமெண்ட் காட்சிகளை மட்டும் கொஞ்சம் கவனமாகச் செதுக்கியிருக்கிறார்.
தன் பால்ய நண்பனிடம் தான் யார் என்பதை நாயகன் சொல்லாததற்கான காரணம் அழுத்தமாகச் சொல்லப்படவில்லை. எனவே அவன் தியாகமும் வலியும் பார்வையாளர்களைப் பாதிக்கவில்லை. காதலியையும் விட்டுக் கொடுக்கத் தயாராவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அது, தன் காதலியும் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதை அவன் ஏன் யோசிக்கவில்லை?
பெரிய இயக்குநரான அந்த நண்பன் ஏன் இவ்வளவு சொரணையில்லாமல் நடந்துகொள்கிறான்? தன் காதலை அங்கீகரித்த வீட்டார், வேறு கல்யாணத்துக்கு முயற்சி செய்யும்போது நாயகி ஏன் மௌனமாக இருக்கிறாள்? நாயகனைத் தவிர மற்றவர்களை டம்மியாக்கினால்தான் நாயகனின் பாத்திரம் எடுபடும் என்று இயக்குநர் நினைக்கிறாரா?
சமீபத்திய படங்களில் ஹீரோ, ஹீரோயின்களுக்கான காட்சிகளை விட அவர்கள் பெற்றோர்களுக்கு அமையும் காட்சிகள் நன்றாக இருக்கின்றன. இந்தப் படத்திலும் அப்படியே. நாயகி புதுமுகம் லாவண்யா அழகுப் பதுமையாக வருகிறார். உணர்ச்சிகரமான காட்சிகளில் கொஞ்சம் நடிக்கவும் முயற்சி செய்கிறார்.
தான் கோயிலாக நினைத்த தியேட்டரில் பலான படம் ஓடுவதைப் பார்த்து சசி, சந்தானத்தை அடிக்கும்போது அவர் கொடுக்கும் ரியாக்ஷன் அவர் அடிக்கும் காமெடியைக் காட்டிலும் சிறப்பு.
இணை இயக்குநராக வரும் சூரி,தண்ணீர் தெளிப்பதைப்போல அங்கும் இங்கும் காமெடியை வீசியிருக்கிறார். அவர் நடிப்பில் மெருகு ஏறியிருக்கிறது. குறிப்பாக அவர் அறிமுகமாகும் காட்சியில் தேவி பிரசாத் இசைக்கு இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். எடிட்டிங் பற்றிப் பேச எதுவுமில்லை.
கடைசிக் காட்சியில் காதல், நட்பு, சென்டிமெண்ட் இப்படி எல்லாமும் ஒரு சேர குவிந்து நிற்கும் நிலையில் நண்பன் ஹீரோவைக் கட்டிப் பிடித்து, ‘நீதாண்டா என் பிரம்மன்’ என்று தலைப்புக்குக் காரணம் கற்பிப்பது படத்தின் பெரிய காமெடி.
முரடர் ப்ளஸ் நட்பின் திரு உருவம் என்பதுதான் சசிகுமாரின் சதா ஃபார்முலா சாக்ரடீஸ் அவரை மென்மையானவராகக் காட்டியிருக்கிறார். ஆனால் நட்பு விஷயத்தை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறார். புதுப்புது டிசைன்களில் உடை, வெளிநாட்டு லொக்கே ஷன்களில் நடனம் ஆகியவற்றைத் தவிர சசிக்கு வித்தியாசமாகச் செய்ய எதுவும் இல்லை. அவரது சோக நடிப்பும் வலுவற்ற காட்சிகளால் எடுபடாமல் போகிறது. இனியாவது புதிய பாத்திரங்களைத் தேடியாக வேண்டும் என்ற எச்சரிக்கை மணியை இந்தப் படம் பலமாக அடிக்கிறது.
Comments
Post a Comment