நடிகை வனிதா தனது 3-வது திருமணம் பற்றி பரபரப்பு பேட்டி

8th of February 2014
சென்னை::அடிக்கடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் நடிகை வனிதா விஜயகுமார், நேற்று முன்தினமும் திடீரென்று கமிஷனர் அலுவலகத்துக்கு வந்ததால் இந்த முறை என்ன வெடிகுண்டு போட வந்திருக்கிறாரோ என்று பெரும் பரபரப்பு நிலவியது.

ஆனால் எதிர்பார்த்தது போல் எதுவும் நடக்கவில்லை. மாறாக, தான் தயாரிக்கும் ஒரு படத்தின் படப்பிடிப்புக்கு அனுமதி கேட்க வந்ததாக வனிதா சொல்ல, ஏதோ பெரிய கலவரம் நடக்கப்போகிறது என்று எதிர்பார்த்தவர்களுக்கு பெருத்த ஏமாற்றமாகி விட்டது.

சரி என்னதான் படமெடுக்கிறார் வனிதா விஜயகுமார்? என்று விசாரித்தபோது, எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் என்ற பெயரில் ஒரு படம் தயாரிக்கிறாராம் வனிதா. நடன மாஸ்டர் ராபர்ட் இந்த படத்தை இயக்குகிறாராம். அது எந்த மாதிரியான படம் என்பதை சொல்ல மறுத்த வனிதா, சினிமா உலகின் ஜாம்பவான்களின் பெயரில் உருவாவதால் இந்த படத்தை பெருமையோடு தயாரித்து வருகிறேன் என்கிறார்.

மேலும். இதற்காக பொது இடங்களில் 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ளது. அதனால்தான் கமிஷனரிடம் அதற்கான அனுமதி கோரியிருக்கிறேன் என்று கூறினார்.
 
நடிகர் விஜயகுமார்_நடிகை மஞ்சுளா தம்பதியின் மூத்த மகள் நடிகை வனிதா, போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு அடிக்கடி வந்து, புகார் மனுக்களை கொடுத்து, திடுக்கிடும் செய்திகளை கொடுப்பார். தனது முதல் கணவர் நடிகர் ஆகாசையும், 2_வது கணவர் ஆந்திர மாநில தொழில் அதிபரையும் பிரிந்துவிட்டார்.
 
ஒரு மகன், ஒரு மகளுக்கு தாயான நடிகை வனிதா, தற்போது 3_வதாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டை திருமணம் செய்து கொள்ளப்போவதாக, சமீபத்தில் அறிவித்தார். இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டார். ஆனால், ராபர்ட்டை அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற தகவலையும் வனிதா சொன்னார்.

இந்த நிலையில், நேற்று  காலை 10.30 மணி அளவில், நடிகை வனிதா, திடீரென்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். கமிஷனர் அலுவலகத்திற்குள் வேகமாக சென்ற நடிகை வனிதா, போன வேகத்தில் வெளியே வந்தார். நிருபர்கள் அவரை சூழ்ந்துகொண்டு பேட்டி கேட்டனர்.
 
அப்போது அவர் கூறியதாவது:_
 
இதற்கு முன்பு பலமுறை கமிஷனர் அலுவலகத்திற்கு, எனது குடும்ப பிரச்சினைக்காக வந்துள்ளேன். இந்த முறை தொழில் ரீதியாக வந்துள்ளேன். வனிதா பிலிம் புரொடக்ஷன்ஸ், என்ற பெயரில் தந்தையும், தாயாரும் படக்கம்பெனி ஒன்றை ஏற்கனவே தொடங்கி இருந்தனர். சிவாஜி, ரஜினி ஆகியோரை வைத்து, அந்த படக்கம்பெனி சார்பில் படம் எடுத்தனர். பின்னர், படத்தயாரிப்பை நிறுத்திவிட்டனர்.
 
நான் இப்போது, அந்த படக்கம்பெனி சார்பில், மீண்டும் படம் ஒன்றை தயாரிக்க முடிவு செய்துள்ளேன். இதற்கு எனது தந்தை நடிகர் விஜயகுமார் அனுமதி கொடுத்துவிட்டார். நான் தயாரிக்கப்போகும் இந்த படத்திற்கு எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் என்று பெயர் சூட்டி உள்ளேன். தமிழ்பட உலகின் ஜாம்பவான்களின் பெயரில், இந்த படத்தை எடுப்பதில் நான் பெருமை அடைகிறேன்.
 
இந்த படத்தின் டைரக்டர் பொறுப்பை டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் ஏற்றுள்ளார். தயாரிப்பு மற்றும் இணை இயக்குனர் பொறுப்பை நான் ஏற்றுள்ளேன். இந்த படத்தின் படப்பிடிப்பு, தொடர்ந்து 20 நாட்கள் நடக்க உள்ளது. படப்பிடிப்பு நடத்த போலீஸ் அனுமதி தேவைப்படுகிறது. அதற்காக அனுமதி கேட்டு, கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தேன்.
 
டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டை, நான் அதிகாரப்பூர்வமாக இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இப்போது குடும்ப பிரச்சினை வேண்டாம். தொழில் பிரச்சினை பற்றி மட்டும் பேசுவோம்.
இவ்வாறு வனிதா தெரிவித்தார்.

ஆக, ரஜினி கமலையே இணைத்து படமெடுக்க நினைத்த அனைத்து முயற்சிகளும் தோற்றுக்கொண்டிருக்க, வனிதாவோ, எம்ஜிஆர், சிவாஜி. ரஜினி, கமல் என அனைவரையும் இணைத்து படமெடுத்து புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments