4th of January 2014
சென்னை::விஜய் இப்போது நடித்து வரும் ஜில்லாவைத் தொடர்ந்து ஐங்கரன் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருப்பது தெரிந்த விஷயம்.
இதனைத் தொடர்ந்து அவர் நடிக்கவிருப்பது தன் மக்கள் தொடர்பாளர் பி.டி.செல்வகுமார் தயாரிக்கும் படத்தில். விஜய்யின் பி.ஆர்.ஓவாக நீண்ட காலம் பயணித்து வருபவர் பி.டி.செல்வகுமார். தன் சினிமா மற்றும் பத்திரிகை தொடர்பான விஷயங்களை பி.டி.செல்வகுமாருடன் கலந்தாலோசித்து செய்வது விஜய்யின் வழக்கம்.
மக்கள் தொடர்பாளராக இருந்தாலும் இன்னொரு பக்கம் இயக்குநர் ஏ.வெங்கடேஷிடம் உதவியாளராகவும் இருந்து சினிமா இயக்கத்தில் பயிற்சி பெற்ற பி.டி.செல்வகுமார், டி.பி.கஜேந்திரன் இயக்கத்தில் ‘பந்தா பரமசிவம்’ படத்தைத் தயாரித்தவர்.
அத்துடன் கடந்த வருடம் வினய் நாயகனான ‘ஒன்பதுல குரு’ படத்தைத் தயாரித்து, இயக்குநராகவும் ஆனார். ஆரோக்கியமான சினிமா வளர்ச்சியில் இப்போது விஜய்யை வைத்துப் படம் தயாரிக்கும் நிலைக்கு வளர்ந்திருக்கிறார் பி.டி.எஸ்.
தன் வளர்ச்சிக்கு உதவியவர்களை என்றும் மறவாத விஜய், சமீபத்தில் தன் ஆரம்பகால தயாரிப்பாளர்களுக்கு ஐந்து லட்சம் நிதி உதவி செய்தார். இப்போது அதனைத் தொடர்ந்து தன் மக்கள் தொடர்பாளருக்கு ஒரு படத்தில் நடிக்கவிருப்பது மற்ற ஹீரோக்களுக்கு நல்ல முன்னுதாரணம்.
இந்தப் படத்தின் இயக்குநர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்..!
Comments
Post a Comment