22nd of January 2014
சென்னை::பழம்பெரும் நடிகரும், தெலுங்கு முன்னணி ஹீரோ நாகார்ஜூனாவின் தந்தையுமான நாகேஸ்வராராவ் இன்று காலமானார். 1950களில் இருந்து பல வருடங்கள் தெலுங்கு சினிமா உலகின் சூப்பர்ஸ்டாராக வலம் வந்த இவர் சில தமிழ்ப்படங்களிலும் நடித்திருக்கிறார். அவரது மறைவு திரையுலகினரையும் அவரது ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்புதான் அவர் கேன்சரால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதற்காக சிகிச்சையும் மேற்கொண்டு வந்தார் நாகேஸ்வரராவ். “1974ல் ஒருமுறை எனக்கு ஹார்ட் அட்டாக் வந்தபோது சிகிச்சை அளித்த டாக்டர்கள் இன்னும் 14 ஆண்டுகள்தான் அதாவது 1988 வரைதான் உயிரோடு இருப்பேன் என்று சொன்னார்கள். ஆனால் அதையும் தாண்டி இதோ 25 வருடங்கள் வாழ்ந்துவிட்டேன். அதேபோல இந்த கேன்சரையும் வெல்லும் மன உறுதி எனக்கு இருக்கிறது” என்று ரசிகர்களுக்கு அப்போது தைரியம் கூறினார் நாகேஸ்வரராவ். ஆனால் காலதேவன் அவரை நம்மிடம் இருந்து பிரித்து அழைத்துச் சென்றுவிட்டான்.
நாகேஸ்வரராவ், அவரது மகன் நாகார்ஜூனா, அவரது பேரன் நாக சைதன்யா ஆகியோருடன் இணைந்து தற்போது ‘மனம்’ என்ற படத்தில் நடித்து வந்தார். அப்பா-மகன் பேரன் மூவரும் இணைந்து நடிப்பது உலக சினிமாவிலேயே இதுதான் முதன் முறை. இந்தப்படம் வெளிவருவதற்கு முன்பே அவரை மரணம் தழுவிக்கொண்டது துரதிர்ஷ்டவசமானது.
Comments
Post a Comment