28th of January 2014
சென்னை::தமிழில் ‘பூ மகள் ஊர்வலம்’, ‘மாயாண்டி குடும்பத்தார்’, ‘கோரிப்பாளையம்’,
‘பாண்டி ஒலிபெருக்கி நிலையம்’ போன்ற படங்களை இயக்கி, மண்மனம் மாறாத குடும்ப
பாங்கான கதையம்சம் உள்ள படங்களை எடுத்து பிரபலம் ஆனவர் இராசுமதுரவன்.
இவர் கடைசியாக ‘சொகுசு பேருந்து’ என்ற படத்தை இயக்கி வந்தார்.
படப்பிடிப்பின் போது வாய்புற்று நோய் காரணமாக இயற்கை ஏய்தினார்.
இந்நிலையில் ‘சொகுசு பேருந்து’ படத்தின் இறுதி கட்ட வேலைகளை முடித்து இசை
வெளியீடு இன்று வெற்றிகரமாக சென்னையில் நடந்தது. இப்படத்திற்கு ஜான்
பீட்டர் இசையமைத்துள்ளார். திரைப்பட இயக்குனர்களான சேரன், விக்ரமன், அமீர்,
ஆர்.கே.செல்வமணி, சீமான், ரவிமரியா, பொன்வண்ணன் உள்ளிட்டோரும்,
தயாரிப்பாளர்களான சிவா, ராஜன், நடிகர் மயில்சாமி, நடிகை சரண்யா பொன்வண்ணன்
மற்றும் படக்குழுவினர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இப்படத்தின் ஆடியோ வெளியீடு இராசுமதுரவனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அமைந்தது.
நடிகர் மயில்சாமி பேசும் போது, இராசுமதுரவனுக்கு பவானி என்ற மனைவியும்
நேசிகா, அனிஷ்கா என்ற மகள்களும் உள்ளனர். இவர்கள் குடும்பம் தற்போது
மிகவும் கஷ்டப்பட்டு வருகிறது. கடன்களில் சூழ்ந்துள்ளது. இக்குழந்தைகளின்
எதிர்காலத்திற்கு அவர் எதுவும் சேர்த்து வைக்காமல் சென்று விட்டார்.
இவர்களின் முன்னேற்றத்திற்காக ஒரு தொகையை நான் தருகிறேன் என்று கூறினார்.
நடிகர் மற்றும் இயக்குனர் அமீர் பேசும்போது, வாழ்க்கையில் இறப்பு என்பது
இரண்டு விதமாக இருக்க வேண்டும். ஒன்று முதிர்ச்சி, மற்றொன்று விபத்து.
இறப்பு நமக்கு இயற்கையாக அமைந்ததாக இருக்கவேண்டும், நாமாக தேடிபோகக்கூடாது.
மது, சிகரெட், குட்கா போன்றவற்றிற்கு நான் இரையாக கூடாது. இராசுமதுரவனின்
இறப்பு நமக்கு வாழ்க்கை பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளது. இவரது இறப்பே நம்
திரையுலகில் கடைசி இறப்பாக இருக்கவேண்டும். இதுபோன்று இறப்புகளை நாம்
தவிர்க்க வேண்டும் என்று கூறினார்.
விழாவில் பேசியவர்கள் அனைவரும் இராசுமதுரவனுக்கு அஞ்சலி செலுத்தி, அவர்கள்
குடும்பத்திற்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்வதாக உறுதி அளித்தனர்.
::
Comments
Post a Comment