வில்லனாக நடிக்கவும் ரெடி - அஜித்தின் தம்பி பாலா பேட்டி!!!

15th of January 2014
சென்னை::
சென்னை,ஜன.15 (டி.என்.எஸ்) 'வீரம்' படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்தவர்களில் ஒருவர் பாலா. இவர் படத்தில் அஜித்துக்கு தம்பி என்றாலும், உண்மையில் வீரம் பட இயக்குநர் சிவாவின், கூட பிறந்த தம்பி ஆவார். பாலாவை ஏற்கனவே தமிழ் ரசிகர்கள் நன்கு அறிவர். ஆனால், பல ஆண்டுகள் கோடம்பாக்கத்தை மறந்த பாலா, மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிஸியான ஹீரோவாக வலம் வருகிறார்.

மலையாளத்தில் 40க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ள பாலா, இன்னமும் அங்கு முன்னணி ஹீரோ தான். ஆனால், பாலா தமிழர் தான். அவருடைய அறிமுகமும் தமிழில் தான் நடந்தது. இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் 'காதல் கிசு கிசு' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர், தொடர்ந்து 'அன்பு' என்ற படத்தில் நடித்தார். இரண்டுப் படங்களும் சரியாக போகாததால், தமிழக ரசிகர்கள் பாலாவை கண்டுக்கொள்ளவில்லை, இதனால், பக்கத்து மாநிலங்களில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தற்போது அங்கு முன்னணி ஹீரோவாக வலம் வரும் பாலாவுக்கு, தாய் மொழியான தமிழில் வெற்றி பெறவில்லையே என்ற ஏக்கம் ரொம்பவே இருக்கிறது.

இந்த நிலையில் தான், அவருடைய அண்ணன் இயக்குநர் சிவா, வீரம் படத்தில் அஜித்தின் தம்பியாக ஒரு வேடம் இருக்கிறது நடிக்கிறீயா என்று அவரிடம் கேட்க, உடனே ஓகே சொன்ன, பாலா, வீரம் படத்தில் வாலாக இருந்தாலும், தனது வேலையை செவ்வனே செய்துள்ள பாலா, நம்மிடம் பேசுகையில், "என் சொந்த அண்ணன் சிவா, தமிழில் ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆகி, பிறகு தெலுங்கில் ஒரு படம் இயக்கினார். அது சூப்பர் ஹிட். அவரும் ஐதரபாத்திலேயே செட்டில் ஆகிட்டார்.

ஆனால், எங்க இரண்டு பேருக்குமே சொந்த தாய்மொழியான தமிழில் வெற்றி பெற முடியவில்லை என்கிற ஏக்கம் இருந்தது. அப்புறம் அவருக்கு சிறுத்தை மாபெரும் வெற்றியைக் கொடுத்தது. இப்போது வீரம். இந்த படத்துல அஜீத்துக்கு தம்பியா நடிக்கணும். வர்றீயா என்று அவர் கேட்டவுடன் எனக்கு ஒரே ஆனந்தம். சட்டுன்னு வந்துட்டேன். இந்த படத்தை பார்க்கறதுக்காகவே சீனாவுல செட்டில் ஆகிட்ட என் அக்கா வந்திருந்தாங்க. பல வருஷம் கழிச்சு எங்க குடும்பம் ஒண்ணு சேர்ந்து இருக்கோம். நேற்று இரவு ஐந்து மணி வரை ஒரே அரட்டையடிச்சுட்டு அதிகாலையில் தான் உறங்கவே போனோம். வீரம் படம்தான் தனித்தனியா இருந்த எங்களை இவ்வளவு கால பரபரப்புக்கு பிறகு ஒன்று சேர்த்திருக்கு. அதற்காக அஜீத் சாருக்கு நன்றி சொல்லணும்.

நடிப்புக்கு ஹோப் உள்ள கதாபாத்திரமாக இருந்தால், தமிழில் வில்லனாக கூட நடிக்க நான் ரெடியாக இருக்கிறேன். அதுவும் அஜீத் சார் படத்தில் தொடர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைச்சா நான் லக்கி. ஏன்னா தாய் மொழியில் ஜெயிக்கணும். அதுதான் எனக்கு சந்தோஷம்." என்று வெற்றி சந்தோஷத்தோடு பேசிய, பாலா தற்போது தமிழில் சில கதைகளை கேட்டு வருகிறாராம்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments