2013 – டாப் 10 படங்கள்!!!

3rd of January 2014
சென்னை::2013ல் 157 படங்கள் வெளிவந்திருக்கின்றன. இதில் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற படங்கள் பத்து சதவீதம் இருந்தால் ஆச்சர்யம் தான். டாப் லிஸ்ட்டில் இருக்கும் பத்து படங்களை மட்டும் நாம் பார்க்கலாம். இது கமர்ஷியல் வெற்றியாக மட்டுமே இல்லாமல் ரசிகர்களின் மனதைத்தொட்ட படங்களையும் சேர்த்துத்தான்.
விஸ்வரூபம்
பெயருக்கேற்ற மாதிரி எதிர்ப்பட்ட தடைகளை எல்லாம் கடந்து எதிர்த்தவர்களுக்கும் சேர்த்து, மூர்க்கமான போராட்ட குணத்துடன் வெளியிலும் விஸ்வரூபம் காட்டினார் கமல். படம் ஆரம்பித்த இருபதாவது நிமிடத்தில் கமல் எடுக்கும் விஸ்வரூபம் முதன்முதலாக படம் பார்க்கவந்தவர்களை உறைய வைத்திருக்கும். பாட்ஷா, ரன் படங்களுக்குப்பின் யூகிக்கமுடியாத கோணத்தில் ஒரு ஆக்‌ஷன் பிளாக் ரசிகர்களை அதிரவைத்தது என்றால் அது இந்தப்படத்தில்தான்.
சிங்கம்-2
ஒரு படத்தின் இரண்டாம் பாகம் எப்படி எடுக்கப்பட வேண்டும் எப்போது எடுக்கப்படவேண்டும் என தெரியாமல் தடுமாறிக்கொண்டிருந்த தமிழ் சினிமாவுக்கு தடம் மாற்றிக் காட்டியது ‘சிங்கம்-2’. படம் பார்ப்பவனை இது ஏன் எப்படி என யோசிக்கவிடாமல், இரண்டுமணி நேரமும் ஆச்சர்யத்தில் வாய்பிளக்க வைத்து அனுப்பிய சாகசம் ஹரி-சூர்யா கூட்டணிக்கு மட்டும்தான் சேரும்
ஆரம்பம்
பில்லா-2வில் அஜித்திற்கு ஏற்பட்ட சரிவை மீண்டும் நிமிர்த்தியது ‘ஆரம்பம்’. அஜீத், ஆர்யா, நயன்தாரா, டாப்சி. ராணா என நட்சத்திரப்பட்டாளத்தை வைத்து ஹைடெக்கான ஆடுபுலி ஆட்டம் ஆடியிருந்தார் விஷ்ணுவர்தன். ஈகோ பார்க்காத, அலட்டல் இல்லாத அஜித்தின் நடிப்பு படம் முழுதும் அப்ளாஸை அள்ளியது.
சூதுகவ்வும்
ஒரு சீரியஸான் கதையை ஹீரோயிசம், குத்துப்பாட்டு, பஞ்ச் வசனங்கள் எதுவும் இல்லாமல் எவ்வளவு ஜாலியாக சொல்ல முடியுமோ அவ்வளவு ஜாலியாக சொல்லி இருந்தார்கள். இதுவரை தமிழ் சினிமா டெரராகக் காட்டிய ஆள் கடத்தலை ஜாலி கலாட்டாவாகப் படைத்து முதல் படத்திலேயே கவனம் ஈர்த்திருக்கிறார் அறிமுக இயக்குனர் நலன் குமரசாமி. 40 வயது மதிக்கத்தக்க வயதான தோற்றத்தில் விஜய் சேதுபதி வித்தியாசமான நடிப்பு கதைக்கு பக்கபலமாக நின்றது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம்
வியக்கவைகும் கதை இல்லை, திகைக்க வைக்கும் மிகப்பெரிய ஸ்டார் வேல்யூ இல்லை, ஆனால் 100 நாள் ஓடியது என்றால் அதற்கு நேர்த்தியாக திரைக்கதை அமைத்திருந்த பொன்ராம் தான் முதல் காரணம், சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா, சத்யராஜ், சூரி என அனைவரும் தங்களது நூறுசதவீத உழைப்பைக் கொடுக்க, கூடவே இமானின் இன்னிசையும் தோள்கொடுக்க ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ கம்பீரமாக நிமிர்ந்து நின்றது.
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா
ஒரு ஸ்மார்ட்டான காமெடிப் படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நல்ல உதாரணமாய் வெளிவந்தது ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’. வரிக்கு வரி சிரிக்கவைக்கும் காமெடியும் ‘சுமார் மூஞ்சி குமார்’ ஆகவே மாறிவிட்ட விஜய் சேதுபதியின் நடிப்பும் படத்திற்கு ப்ளஸ் என்றால் பாடல்கள் டபுள் ப்ளஸ் ஆக அமைந்தது.
மூடர்கூடம்’
‘நான்கு முட்டாள் திருடர்களைப் பற்றிய ஒரு சின்ன லைன்தான் ‘மூடர்கூடம்’ படத்தின் மொத்த கதையும். ஆனால், இந்த கதையை காமெடியாக, கலர்ஃபுல்லாக, அதேசமயம் வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் இயக்கி இருந்தார் பசங்க’ பாண்டிராஜின் சிஷ்யரான நவீன். இந்தப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு, இயக்குனர் மணிரத்னத்தையும் ஷங்கரையும் படம் பார்க்க தூண்டியதுடன் பார்த்துவிட்டு மனம் விட்டுப் பாராட்டவும் வைத்தது.
தங்க மீன்கள்
குழந்தைகளின் உலகமே தனியானது. அதை குழந்தைகளின் மனநிலையுடன் அவர்களுக்கு சரிசமமாக இறங்கிப்பார்த்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும் என்பதை அழுத்தமாக சொன்ன படம்தான் தங்க மீன்கள். எந்தவித வியாபார நோக்கமும் இல்லாமல் குடும்பத்துடன் பார்க்கவேண்டிய, அதிலும் கட்டாயம் குழந்தைகளுடன் சென்று பார்க்கவேண்டிய ஒரு படமாக தங்க மீன்களை எடுத்த ராமை எவ்வளவு பாராட்டினாலும் தகும். யுவன் சங்கர் ராஜாவின் இசையில் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ பாடல் நம்மை இன்னும்கூட தாலாட்டுகிறது.
ஆதலால் காதல் செய்வீர்
அவ்வப்போது பேப்பரில் படித்துவிட்டு அடுத்தநாளே மறந்துபோகும் செய்திதான்.. ஆனால் படிக்கிற வயதில் ஆண், பெண் இருவருக்கிடையே ஏற்படும் ஈர்ப்பு தவறான திசையில் பயணித்தால் என்ன ஆகும் என்பதை இரண்டரை மணி நேர படமாக… இல்லையில்லை பாடமாக எடுத்திருந்தார் சுசீந்திரன்.
பாண்டியநாடு
தொடர் தோல்விகளால் துவண்டுபோயிருந்த விஷாலுக்கு ‘பாண்டியநாடு’ படத்தின் வெற்றி மிகப்பெரிய உற்சாகத்தை அளித்திருக்கிறது. அதேபோல ‘ஆதலால் காதல் செய்வீர்’ படத்தில் கிடைத்த வெற்றியை இந்தப்படத்தின் மூலம் தொடர்ந்து தக்கவைத்திருக்கிறார் சுசீந்திரன். தெளிவான திரைக்கதை, கதையோடு பின்னிக்கொண்டு அளவு மீறாத ஆக்‌ஷன், பொருத்தமான கதபாத்திரத் தேர்வு என அனைத்தும் இந்தப்படத்தில் சரிவிகிதத்தில் அமைந்திருந்ததும் படம் 50 நாட்கள தாண்டி ஓடவும் காரணமாக அமைந்தன


tamil matrimony_HOME_468x60.gif

Comments