28th of December 2013
சென்னை::வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவிடயத்தில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையும் கனவுகளும் இருக்கத்தான் செய்கின்றன. கனவுகளின் அடைவுப்பாதை மிகவும் கடினமானவை அப்பாதையைத்தாண்டி தனது இலக்கை எட்டிப்பிடிப்பவன்தான் வரலாற்றில் சாதனையாளன் பட்டியலில் இடம்பிடிக்கின்றான். தோல்வியைக்கண்டு தொடை நடுங்குபனல்ல சாதனையாளன். முடியும் என்பதை மூச்சாய்க் கொண்டு செயற்படுபவன்தான் சாதனையாளன்.
2009 ஆம் ஆண்டு இந்தியா சென்ற எனக்கு நடிகர் விஜய்யின் வீட்டுக்குள் செல்வது எட்டாக்கனியாய் போனது பின்னர் அதே வீட்டுக்கு விமானநிலையத்துக்கு கார் அனுப்பி அழைத்தார் இசையமைப்பாளர் விஜய் அன்டனி. முயற்சி செய்தால் நிச்சயம் கனவுகளை அடையலாம் என்கின்றார்
தப்பெல்லாம் தப்பே இல்லை
சரியெல்லாம் சரியே இல்லை
தப்பை நீ சரியாய் செய்தால்
தப்பு இல்லை தப்பு இல்லை
சரியெல்லாம் சரியே இல்லை
தப்பை நீ சரியாய் செய்தால்
தப்பு இல்லை தப்பு இல்லை
பாடல் புகழ் கவிஞர் பொத்துவில் அஸ்மின். அவர் மெட்ரோ நியூஸுக்கு வழங்கிய செவ்வி இங்கே.
கேள்வி : பாடல் எழுதும் ஆர்வம் எப்போது தோன்றியது
பதில் : சிறு வயதில் இருந்து பாடல் எழுதும் ஆர்வம் இருந்தது தான். சுமார் 3 வருடங்கள் ஆசிரியராக பணியாற்றிய காலப்பகுதியில் மாணவர்களுக்கு பாடல் எழுதிக் கொடுத்துள்ளேன் அவற்றுக்காக மாணவர்கள் பரிசில்களும் பெற்றுள்ளார்கள்.
நண்பர்களோடு இருக்கும் போது இந்திய சினிமாப் பாடல்களை எனது கற்பனையில் நகைச்சுவையாக எழுதுவேன். இவை கூட பாடல் எழுதுவதற்கு பயிற்சியாக அமைந்தது என்று நினைக்கின்றேன். தனியார் தொலைக்காட்சியில் நடாத்தப்பட்ட போட்டி ஒன்றின் மூலம்தான் நான் பாடலாசிரியராக அறிமுகமானேன். அந்நிகழ்வில் ஒரு சந்தர்ப்பத்தில் இந்தியா செல்லும் வாய்ப்பு கிட்டிய போதே பல சினிமாத்துறை சார்ந்தவர்களின் அறிமுகம் கிடைத்தது.
கேள்வி : 'நான்' திரைப்படத்தில் உங்கள் பாடல் இடம் பெற்றது பற்றி குறிப்பிடுங்கள்.
பதில் : இந்திய சினிமாத்துறையில் இந்தியர்கள் இடம் பிடிப்பதே பெரிய சவாலாகவுள்ளது. அங்கு பலர் இத்துறையில் சாதிக்க வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். இப்படியான போட்டி மிக்க ஒரு துறையில் எனக்கு வாய்பு கிடைத்தது என்பதை நான் பெரிய சாதனையாகவே கருதுகின்றேன்.
இயக்குனர் ஜீவா சங்கர் இயக்கத்தில் இசைமைப்பாளர் விஜய் அன்டனி தனது புதிய படம் ஒன்றில் புதிய பாடல் ஆசிரியர் ஒருவரை அறிமுகப்படுத்தும் நோக்கில் சர்வதேச ரீதியில் போட்டி ஒன்றை நடாத்தினார். இது இந்திய ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது இவ்விடயம் பற்றி எனது சகோதரன் (சித்தப்பாவின் மகன்) கலீஜ் என்பவர்தான் எனக்கு சொன்னார்.
நான் அதற்காக அப்லை பன்னினேன். விஜய் அன்டனி கொடுத்த டியூன், காட்சிக்கேட்ப நான் பாடலை எழுதி அனுப்பினேன். சில மாதங்களின் பின்னர் எனது பாடல் தெரிவானது. விஜய் அன்டனி அழைப்பு ஏற்படுத்தி இந்தியாவுக்கு வரவேண்டும் என சொன்னார். அதன் பிறகு அங்கு சென்று படத்தில் இடம் பெற்ற பாடலை எழுதினேன். பாடலும் பெரும் வரவேற்பை பெற்றது. பாடல் வெளியீட்டு விழாவிலும் நான் பங்கு பற்றினேன்.
அதனைத் தொடர்ந்து எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனாலும் நான் இலங்கையில் இருப்பதால் அதிகமான வாய்ப்புகள் கைநழுவிப்போயின. ஆனாலும் தற்போது ஒர் இரு வாய்ப்புகள் கிடைத்துள்ளன. எனது முதலாவது திரைப்படப்பாடல் எனக்கொரு விசிடிங்கார்ட் அதன் மூலம் எனக்கு பலரது அறிமுகம் கிடைத்துள்ளது.
கேள்வி : விஜய் அன்டனியுடன் இணைந்து நான் திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவம், மறக்கமுடியாத சம்பவம் ஏதும்?
பதில் : பிரபல இசையமைப்பளரான விஜய் அன்டனி நான் என்ற திரைப்படத்துக்கு பின்னர் சலீம் என்ற ஒரு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். மிகவும் எளிமையாக நண்பனைப்போல் அவர் பழகினார். அவரது வீட்டில் இருந்துதான் நான் பாடலை எழுதினேன். காட்சியை காட்டிவிட்டு பாடலை எழுதச் சொன்னார். சுமார் காலை 8 மணிக்குச் சென்ற நான் இரவு 10 மணி வரைக்கும் பாடலை எழுதிக் கொண்டிருந்தேன். சுமார் 50 பாடல்களுக்கான பாடல் வரிகளை நான் எழுதினேன். இடைக்கிடையில் வந்து தனக்கு பிடித்த பாடல் வரிகளை மார்க் பண்ணிவிட்டு சென்றார்.
இறுதியில் பாடல் சிறப்பாக வந்துள்ளது. நீங்கள் நாளை நாடு திரும்பலாம் என்று சொன்னார் திடீர் என்று இரவு 12 மணிக்கு அழைப்பேற்படுத்தி இப்போது ஐடியா மாறி விட்டது திரும்ப பாடல் எழுத வேண்டும் என்றார். ஓகே சேர் என்று சொல்லிவிட்டு நான் அடுத்த நாள் காலை பாடலை எழுதினேன். திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் சுமார் 1 மணிநேரத்துக்குள் எழுதப்பட்ட பாடலே.
கேள்வி : 20,000 போட்டியாளர்களோடு போட்டியிட்டு 'நான்' திரைப்படத்தில் பாடல் எழுத வாய்ப்பு கிடைக்குமென்று நினைத்தீர்களா?
பதில் : உண்மையில் இது ஒரு சர்வதேச போட்டி. சரவதேச ரீதயில் பலரும் இதற்காக போட்டியிட்டனர். இதனால் 20,000 போட்டியாளர்கள் பங்கேற்றதாக விஜய் அன்டனி சொன்னார். நாங்கள் பாடல் எழுதி 7-8 மாதங்களின் பின்னர் தான் பெறுபேறு வெளியிடப்பட்டது.
வெற்றியை நோக்கித்தான் நமது இலக்கிருக்க வேண்டும். தோல்வியை பற்றி யோசிக்க கூடாது. எனவே எனக்கு நம்பிக்கை இருந்தது. 10 பேர் அதில் தெரிவு செய்யப்படுவார்கள். அதில் முதலாமவருக்கு படத்தில் வாய்ப்புக் கொடுக்கப்படும் என்று சொல்லப்பட்டிருந்தது. அப்பத்து பேருக்குள் நான் வருவேன் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது.
கேள்வி : திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளீர்களாமே? அனுபவம் எப்படி?
பதில் : 'பொம்பை வெல்வட்' என்ற ஹிந்தித் திரைப்படம் ஒன்று அத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முற்று முழுதாக இலங்கையிலேயே இடம் பெற்றது ரன்பீர் கபூர் மற்றும் அனுஷ்கா ஷர்மா நடித்த திரைப்படம் அது. இலங்கை கலைஞர்களையும் அதில் பங்குபற்ற வைக்க வேண்டும் என்ற நோக்கில் மேக்கப் டெஸ்ட் (ஒப்பனை சோதனை) வைத்திருந்தார்கள். அதற்கு நான் அப்லை பண்ணினேன் வாய்ப்பும் கிடைத்தது.
1960 ஆம் ஆண்டு காலக் கதையாகவே அது இருந்தது. நடிகருக்கு பக்கத்தில் இருந்து திரைப்படம் பார்ப்பது போன்ற ஒரு சிறிய காட்சியில் நடிக்க எனக்கு வாய்ப்புக் கிடைத்தது.
உண்மையில் மேக்கப் செய்து சுமார் 4-5 மணிநேரம் உட்கார வைத்தார்கள். முழுமையாக தோற்றத்தை மாற்றி 1960, 1970 காலப்பகுதி ஸ்டைலுக்கு எங்களின் தோற்றத்தையே மாற்றி விட்டார்கள். நடிக நடிகைகள் பலரை காணவாய்ப்புக் கிடைத்தது. எனக்கு திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசையில்லை. ஆனால் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டேன்.
கேள்வி : அண்மையில் வெளியிடப்பட்ட உங்கள் கவிதை நூலுக்கு 'பாம்புகள் குளிக்கும் நதி' என பெயர் வைத்த நோக்கம்
பதில் : ரத்தமில்லாத யுத்தம் என்றுதான் முதலில் பெயர் வைத்திருந்தேன். கவிப்பேரரசு வைரமுத்துவிடம் எனது அணிந்துரைக்காக சென்றிருந்த போது எனது தலைப்புகளை வாசித்து விட்டு 'பாம்புகள் குளிக்கும் நதி' என்ற தலைப்பை வாசித்து விட்டு ஆஹா பிரமாதம் என்று கூறினார். இத்தலைப்பை வைக்கவா? என்று கேட்டேன் இல்லை அது உங்கள் விருப்பம் என்றார்.
பின்னர் எனது நண்பர்கள் சிலரிடமும் தலைப்பை தெரிவு செய்து தருமாறு கொடுத்தேன். அதில் நண்பர் மாவனல்லை ரிஷான் ஷரீப் சென்னார், இந்த 'பாம்புகள் குளிக்கும் நதி' என்ற தலைப்பு நன்றாக இருக்கும் என்று. கவிப்பேரரசும் அதனை சொல்லிருந்தார். எனவே பலரது ஆலோசனைகளையும் பெற்று இறுதியாக நான் முடிவெடுத்தேன், இத்தலைப்பு பொருத்தமாக இருக்குமென்று. எனவே இப்பெயரை தலைப்பாக வைத்தேன்.
கேள்வி : அண்மையில் இந்தியாவில் உங்கள் நூல் அறிமுக விழா இடம் பெற்றது. அந்த நிகழ்வு பற்றி குறிப்பிடுங்கள்.
பதில் : முகநூல் (பேஸ்புக்) மூலம் எனக்கு பல இந்திய நண்பர்கள் அறிமுகமானார்கள். அவர்களின் உதவியுடனும் இணை இயக்குனர் வேடியப்பனின் ஒருங்கிணைப்பில் டிஸ்கவரி புத்தக இல்லத்தில் இந்நிகழ்வு இடம் பெற்றது. கலைமா மணி வீ.கே.டி பாலன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் இலங்கையில் இருந்து கவிஞர் ஜனூஸ் மற்றும் புரவலர் அப்துல் கையூம் ஆகியோருடன் கலந்து கொண்டேன். அங்கே பல கலைத்துறை சார்ந்தோர், திரைப்படத்துறை சார்ந்தோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நூல் அறிமுகத்தை இயக்குனர் சிபி சங்கர் செய்தார். அது ஒரு சிறிய அறிமுக விழாதான். ஆனாலும் அதனை நான் பெரியதோர் அறிமுக விழாவாக கருதுகின்றேன். என்னுடைய நூல் மட்டுமல்ல இலங்கையில் உள்ள நூல்கள் இங்கு அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இங்குள்ள நூல்கள் இலங்கையில் அறிமுகமாகின்றன. ஆனால் இலங்கை எழுத்தாளர்களின் நூல் இங்கு அறிமுகமாவது குறைவு. எனவே அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என எனது ஏற்புரையில் குறிப்பிட்டேன்.
அவ்வாறு இந்தியாவில் தமது நூல்களை அறிமுகப்படுத்த ஆர்வம் உள்ளவர்களுக்கான ஒத்துழைப்பை என்னால் பெற்றுக்கொடுக்க முடியும்.
கேள்வி : மரபு, புதுக்கவிதைகளைத் தாண்டி பின்நவீனக் கவிதைகள் இப்பொழுது எழுதப்படுகின்றன. அவைபற்றிய உங்கள் புரிதல் எப்படி?
பதில் : நாங்கள் சோறு சமைக்கின்றோம். அதில் புரியாணி சமைத்தாலும் கஞ்சி சமைத்தாலும் அதனை நாம் உண்ன வேண்டும். எங்களோடு உள்ளவர்களும் அதனை உண்ண வேண்டும்.
இதனை சமைப்பது காட்சிக்கு வைப்பதற்கல்ல. இதுபோலதான் இலக்கியமும். இலக்கியம் என்பதே இலட்சியம் என்ற சொல்லில் இருந்துதான் ஆம்பிக்கின்றது. எனவே அதனைச் செய்வதில் எமக்கு ஒரு இலக்கு இருக்க வேண்டும். யாருக்கும் விளங்காதவகையிலே இருன்மையான முறையில் எழுதி எந்தப்பயனுமில்லை. என்னாலும் அவ்வாறான கவிதைகளை எழுத முடியும். அதனுடாக எனது சிந்தனைகளை கருத்துக்களை சாதாரண மக்கள் மத்தியில் நான் எப்படி கொண்டு செல்ல முடியும்?
கவிதை சோறு போடாது. கவிதை சோறுபோடச் சொல்லும். எனவே கவிதை ஒரு ஆயுதம் அதனை சரியாக பயன்படுத்த வேண்டும். மளுங்கிப்போன கத்திகளை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. நாம் படைக்கின்ற படைப்பு சாதாரண வாசகரை சென்றடைய வேண்டும். சிலர் சொல்வார்கள் நாங்கள் படைக்கின்றவை சாதாரன வாசகர்களுக்கல்ல உயர்மட்ட வாசகர்களுக்கென்று, என்னைப் பொறுத்த மட்டில் நான் பாமரனின் பாடகன். எனது கருத்துக்களும் சிந்தனைகளும் அவர்களைச் சென்றடைய வேண்டும்.
மரபுக்கவிதை என்பது தான் தமிழுகுரிய கவிதைகள் நவீனமாக இருக்கட்டும், பின்நவீனமாக இருக்கட்டும் அவை அனைத்தும் மேலைத்தேயத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. மேலத்தேயத்தில் இருந்து வந்தவை உயர்வானவை எனக்கருதுவது ஒரு வகையான அரசியல்.
நான் அனைத்துமுண்னி என்று தான் சொல்ல வேண்டும். மரபுக் கவிதைகளையும் வாசிப்பேன் புதுக்கவிதைகளையும், எல்லாக்கவிதைகளையும் வாசிப்பேன், இரசிப்பேன். எப்போதுமே தனித்துவமாகவே யோசிப்பேன்.
கேள்வி : வாழ்கையின் இலக்கு என்ன?
பதில் : எனது சில இலட்சியங்களை அடைந்துள்ளேன். இன்னும் நிறையவே அடைய வேண்டியுள்ளது. அவற்றுக்காக போராடிக் கொண்டிருக்கின்றேன். நாம் எப்போதுமே இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். அப்போது தான் நம்மால் வெற்றியை எட்டிப்பிடிக்கலாம் நீ எதுவாக நனைக்கின்றாயோ நீ அதுவாகவே மாறிப்போகிறாய்.
கேள்வி : இத்துறையில் சாதிக்கவிரும்பும் இளம் வயதினருக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்?
பதில் : ஆசைகளை மாத்திரம் மனதுக்குள் வைத்துக் கொண்டிருந்தால் போதாது. அதனை நோக்கி நாம் செல்ல வேண்டும். இந்திய சினிமாவில் சாதிக்க வேண்டும் என இலங்கையில் பலருக்கும் ஆசை உள்ளது. ஆனால் அதனை அப்படியே வைத்துக் கொண்டிருந்தால் அடைய முடியாது.
நானும் கிராமத்தில் இருந்து வந்தவன்தான். இன்று சினிமாவில் பாடல் எழுதி அத்துறை சார்ந்த பலரின் அறிமுகம் எனக்கு கிடைத்துள்ளது என்றால் அது எனது விடா முயற்சி என்று தான் சொல்வேன். எங்களிடம் திறமை இருந்தும் முயற்சி செய்யாவிட்டால் எம்மால் எதனையும் அடைய முடியாது.
இசைத்துறையில் சாதிக்க விரும்புவர்கள் தமக்கான தயார்படுத்தல்களை செய்து கொள்ளவேண்டும். இந்தியாவில் உள்ள போட்டியாளர்களுக்கு மத்தியில் நம்மை அடையாளப்படுத்தி ஒரு இடத்தை பிடித்துக்கொள்ள நிறையவே போராடவேண்டும்.
கவிதை எழுதுவதற்கும் சினிமாவுக்கு பாடல் எழுதுவதற்கும் பலத்த வேறுபாடுள்ளது. எனவே இத்துறையில் ஆர்வம் உள்ளவர்களை பயிற்றுவிக்கும் நோக்கில் சில பயிற்சி பட்டறைகளை ஏற்பாடு செய்ய எத்தனித்துள்ளேன். எனவே எவஎயளஅinளூபஅயடை.உழஅ எனும் மின்னஞ்சல் முகவரி, றறற.மயஎiபெநசயளஅin.வம எனும் இவ்விணையத்தளம் மற்றும் 0771600795 எனும் தொலைபேசி இலக்கத்துடனும் என்னை தொடர்பு கொண்டு பயிற்சி நெறி பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
கேள்வி : உங்கள் அடைவுகளுக்கு குடும்பத்தினர் எவ்வாறு ஊக்கம் அளித்தனர்.
பதில் : எனது சிறிய தந்தை ஒரு கவிஞராக இருந்தார். அதன் தாக்கம் இருந்தது என்று சொல்லாம். எனது தந்தை உதுமாலெப்பை (தற்போது மரணித்துவிட்டார்) அவர் நல்ல பத்திரிகை வாசிப்பாளன். அவர் அதன் தலைப்புச்செய்திகளை வாசிக்கச் சொல்வார் நான் தவறு விடும் போது குட்டி ஒழுங்காக வாசிக்கச் சொல்வார்.
அன்று கைபிடித்து வாசிக்கப் பழக்கியதுதான் என்னை நல்லதோர் வாசகனாக மாற்றியது. வாசி வாசிக்கப்படுவாய் எழுது எழுதப்படுவாய் என்பது உண்மை. நான் சிறுவயதில் கவிதை எழுதும்போது தந்தை சொல்வார், கவிதை சோறு போடாதென்று. ஆனால் இன்று எனது தந்தை இருந்திருந்தால் நிச்சயம் மிக்க மகிழ்வுற்றிருப்பார் எனது அடைவுகளைக்கண்டு.
கேள்வி : இளம் வயதில் சில அடைவுகளை தொட்டுவிட்டீர்கள். இதற்கு திறமை தவிர வேறு எது காரணங்கள் இருக்கின்றனவா?
பதில் : சாதனைக்கு வயது தேவையில்லை. 80 வயதில் குழந்தை பெற்றவர்களும் இருக்கின்றனர். 15 வயதில் பட்டம் பெற்றவர்களும் இருக்கின்றனர். எனவே எதற்கும் வயது தேவையில்லை முயற்சியிருந்தால் யாராலும் சாதிக்கலாம்.
பலர் பல கதைகளை சொல்வார்கள், நம்மை ஓரம்கட்டுபவர்களும் சமூகத்தில் இருப்பார்கள். ஆனால் அவர்களை பெரிது படுத்தாது எமது இலக்கை நோக்கி நகரவேண்டும்.
கேள்வி : இலங்கைக் கலைஞர்களை இலங்கை இரசிகர்கள், வாசகர்கள் வரவேற்பளிப்பதில்லை என்ற விமர்சனம் குறித்து உங்கள் கருத்து?
பதில் : இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை என்பார்கள். இந்தியா என்பது நமது தந்தை நாடு என்று சொல்லவேண்டும். எனவே எமது வாசகர்கள் இந்தியாவின் சாயலுக்கு பரீட்சியமானவர்கள். எனவே இந்தியாவின் தரத்துக்கு நம்மிடம் எதிர்பார்கின்றனர். எனவே அதற்கேற்ப நாம் எமது வாசகர்களுக்கு கொடுக்க வேண்டும்.
புதியவற்றை கொடுக்கப் போனால் அதை வாசகன் ஏற்றுக் கொள்ளமாட்டான். எனவே வாசகருக்கு பிடித்தவற்றை நாம் கொடுக்க வேண்டும். இலங்கை வாசகனுக்கு மத்தியில் வைரமுத்து தாக்கம் செலுத்தியளவுக்கு இலங்கை கவிஞன் ஒருவன் தாக்கம் செலுத்தவில்லை.
அதேநேரம் நமது நாட்டில் உள்ள கலைஞர்கள் சர்வதேச ரீதியில் அறியப்பட்டிருப்பார்கள். ஆனால் அவனை பக்கத்து விட்டுக்காரனுக்கு தெரிந்திருக்காது. இது அந்தக்கலைஞன் செய்த தவறுதான். படைப்பாளிகள் தமது வாசகர்களின் மனதைப் புரிந்து படைப்புகளை கொடுக்க கொடுக்க வேண்டும். அதேநேரம் வாசகர்களும் படைப்பாளிகளுக்கான ஆதரவை வழங்கவேண்டும்.
நேர்காணல்: எம்.ஜே. பிஸ்ரின் முஹம்மத்.
Comments
Post a Comment