திரை விமர்சனம்>>>>தலைமுறைகள்!!!

22nd of December 2013
சென்னை::பல வருடங்களுக்கு முன்பு பாலுமகேந்திரா, இயக்கத்தில் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான கதையின் நேரம் தொடரில், பாலுமகேந்திரா சொல்ல மறந்த கதை ஒன்றை தற்போது 'தலைமுறைகள்' என்ற தலைப்பில் திரைப்படமாக இயக்கியுள்ளார்.

அப்பாவை எதிர்த்துக்கொண்டு கிறிஸ்துவ மதப் பெண்ணை திருமணம் செய்துகொள்கிறார் சசி. (இயக்குநர் சசி அல்ல, டிவி மற்றும் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடிக்கும் சசி) இவரும், இவருடைய மனைவியும் சென்னையில் பெரிய மருத்துவர்களாக இருக்கிறார்கள். திடீரென்று கிராமத்தில் உள்ள சசியின் அப்பாவான பாலுமகேந்திராவுக்கு திடீர் உடல் நிலை சரியில்லாமல் போக, சசி, தனது மனைவி மற்றும் பிள்ளையுடன் கிராமத்திற்குப் போகிறார்.

காதல் திருமணம் செய்துகொண்டதால், சசியை வெறுக்கும் பாலுமகேந்திரா, தனது பேரனைப் பார்த்ததும், அனைத்தையும் மறந்து அவர்களை ஏற்றுக்கொள்கிறார். இதற்கிடையில் வீட்டில் அப்பா - அம்மா இருவரும் ஆங்கிலமே பேசுவதால், பையனுக்கு தமிழ் சுமாராகத் தான் தெரியும். அதேபோல, தமிழ் வாத்தியாரான பாலுமகேந்திராவுக்கு ஆங்கிலம் சுமாராகத்தான் தெரியும். இந்த இருவரும் தங்களுடைய சுமாரான மொழிகளை வைத்துக்கொண்டு எப்படி பழகுகிறார்கள். தாத்தாவிடம் இருந்து பேரன் கற்றுக்கொண்டது என்ன என்பதுதான் படத்தின் முடிவு.

வித்தியாசம், நவீன தொழில்நுட்பம், விறுவிறுப்பான காட்சிகள் என்று சினிமா வேகமாக பயணிக்க, தனது பொருமையான பயணத்தை பாலுமகேந்திரா மீண்டும் தொடங்கியிருக்கிறார்.

வியாபார ரீதியிலான படம் இல்லை என்றாலும், என்னமோ சொல்லப் போகிறார்கள், என்று ரசிகர்களை எதிர்ப்பார்க்க வைக்கிறது படம்.

நடிகர்கள் அனைவரும் பாலுமகேந்திராவின் மூலம் தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர்கள். அதனால், அவர்களுடைய நடிப்பு, பாலுமகேந்திராவின் படங்களில் கதாபாத்திரங்கள் எப்படி நடிக்குமோ அப்படியே இருக்கின்றன. அதிகமாக பேசவில்லை என்றாலும், அவர்கள் நிற்பது பார்ப்பது என்று, தாங்கள் பாலுமகேந்திரா தயாரிப்புகள் என்று நிரூபித்திருக்கிறார்கள்.

இப்படத்தை தயாரித்த இயக்குநர் சசி, கெளரவ தோற்றத்தில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் நடித்துள்ளார். பாலுமகேந்திராவின் பேரனாக நடித்துள்ள சிறுவன் கவர்கிறான். கிராமத்து மனிதர்கள், பாதிரியார் என்று படத்தில் உள்ள மற்ற நடிகர்ளும் இயல்பாகவே வந்து போகிறார்கள்.

கேமராவுக்கு பின்னால் நடித்துக்கொண்டிருந்த பாலுமகேந்திரா, முதல் முறையாக இப்படத்தில் கேமராவுக்கு முன்னால் நடித்துள்ளார்.

ஒளிப்பதிவு, இயக்கம், படத்தொகுப்பு என அனைத்துமே பாலுமகேந்திரா தான். பிலிமில் படம் எடுத்துக்கொண்டிருந்த பாலுமகேந்திரா முதல் முறையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாறியிருக்கிறார். இருப்பினும் அவருடைய அதே பாணி இந்த படத்திலும் தெரிகிறது. இருப்பதை அப்படியே காட்டும் பாலுமகேந்திரா, எந்த இடத்திலும் இயல்பு நிலையை மாற்றாமல் காட்சிகளை எதார்த்தமாக படமாக்கியிர்க்கிறார். 35 எம்எம்மில் மீண்டும் காட்சிகளைப் பார்ப்பது கொஞ்சம் புதுசாகத்தான் இருந்தது.

படத்தில் பாடல்கள் இல்லை, பின்னணி இசை மட்டுமே. தேவையான இடத்தில் மட்டுமே இளையராஜா தனது கைவரிசையை காட்டியிருக்கிறார். மற்ற இடங்களில் செடி, நீர் உள்ளிட்ட இயற்கை சப்தங்களை நிறப்பியிருக்கிறார்.

நமது அடுத்த தலைமுறைகளுக்கு நாம் எதை சொல்லிக்கொடுக்க வேண்டும், அவர்களுக்கு யார் எதை சரியாக சொல்லிக் கொடுப்பார்கள் என்பதை இப்படத்தின் மூலம் சொல்லியிருக்கும் பாலுமகேந்திரா, ஜாதி என்பதை அடுத்த தலைமுறைகளுக்கு சொல்லிக் கொடுக்க கூடாது என்பதை, தனது கதாபாத்திரத்தின் மூலமாகவே மிக அழுத்தமாக சொல்லியிருக்கும் இடம் அருமை, இந்த ஒன்றுக்காகவாது இப்படத்தை ஒரு முறை பார்க்கலாம்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments