விமர்சனம் » ஜன்னல் ஓரம்!!!


5th of December 2013
சென்னை:: மலையாலப் படங்களைப் போல பல ஹீரோக்கள் இணைந்து, கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்துள்ள படம் தான் 'ஜன்னல் ஓரம்'.

பழனி டூ பண்ணைக்காடு வழித்தடத்தில் பயணிக்கும் அரசு பேருந்தின் ஓட்டுநர் தான் பார்த்திபன், நடத்துனர் விமல். இரவில் பண்ணைக்காடு சென்றடையும் பேருந்து, அங்கேயே இருந்து மறுநாள் காலை பண்ணைக்காட்டில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பழனிக்கு வருகிறது. மாலை மீண்டும் பண்ணைக்காடு பயணிக்கும் பேருந்து இரவில் அங்கேயே செட்டில், பேருந்தின் ஓட்டுநரும், நடத்துனரும் பண்ணைக்காட்டு வாசிகள் இல்லை என்றாலும், அவர்களுக்கென்று அங்கே ஒரு கெஸ்ட் ஹவுஸ் இறுக்கிறது. அதிலேயே தங்கிக்கொள்ளும் அவர்கள், அந்த ஊர் வாசிகள் போலவே அங்கு உலா வருகிறார்கள்.

பண்னைக்காட்டு பெண்ணான மனிஷாவுடன் விமலுக்கு காதல், அதே பண்ணைக்காட்டு டீ கடைகாரரின் பெண்ணுடன் பார்த்திபனுக்கு காதல். பண்ணைக்காட்டில் வசிக்கும் பூர்ணா, தனது அப்பாவின் நண்பர் ராஜேஷின் வீட்டில் வசிக்கிறார். ராஜேஷின் மகனுக்கும், பூர்ணாவுக்கும் இடையே காதல் மலர்ந்து இருவருக்கும் திருமணமும் ஏற்பாடுகிறது. பண்ணைக்காட்டு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவர் ரமணா, அங்குள்ள டேமில் ஆபரேட்டராக பணிபுரிந்துகொண்டு, ஊர் மக்கள் சொல்லும் வேலைகளை தட்டாமல் செய்யும் கதாபாத்திரத்தில் விதார்த். இப்படி கதாபாத்திரங்களை கொண்டே திரைக்கதை நகர்கிறது.

மலை கிராமமான பண்ணைக்காட்டுக்கு பேருந்தும் ஓட்டும் பார்த்திபன், பேருந்து ஸ்டேரிங்கில் இருந்து கையை எடுத்தவுடனே, மது பாட்டிலை பிடிக்கிறார். இப்படி குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதையே பழக்கமாக கொண்டுள்ள பார்த்திபன், ஒரு முறை கொஞ்சம் ஓவராக குடித்துவிட, பேருந்தை விமல் ஓட்டி வருகிறார். இரவு நேரத்தில் தீடீரென்று ராஜேஷின் மகன் பேருந்து முன் வந்து விழுகிறார். அடிபட்டு ரத்த வெள்ளத்தில் இருக்கும் அவரை, எதிரே வரும் ஜூப் ஒன்றில் ஏற்றிவிட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறிவிட்டு விமலும், பார்த்திபனும் செல்கிறார்கள்.

பார்த்திபனின் தங்கைக்கு திருமணம் என்பதால், போலீஸ், கோர்ட் என்று அலைவதில் இருந்து தப்பிப்பதற்காக இந்த விஷயத்தை ஊர் மக்களிடம் சொல்லாமல் மறைத்துவிடுகிறார்கள். பிறகு மருத்துவமனையில் சென்று பார்த்திபனும், விமலும் அடிபட்டவரை தேடும் போது, அப்படி யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்பது தெரியவருகிறது. இதற்கிடையில், அந்த நபர் மலை மீது இருந்து விழுந்து மரணம் அடைந்துவிட்டதாக தகவல் வருகிறது.

குற்ற உணர்ச்சியால் குமுறும் பார்த்திபனும், விமலும் இதை ஊர் மக்களுக்கு தெரியாமல் மறைக்க முயற்சிக்க, எப்படியோ இந்த விஷயம் ஊர் மக்களுக்கு தெரிந்து பெரும் கலவரம் ஏற்பட, விமல் சிறைக்கு செல்கிறார். அதன்பிறகு நடக்கும் திருப்புமுனை நிறைந்த சம்பவங்கள் தான் படம்.

பண்ணைக்காடு, அந்த ஊர் மக்கள், அவர்களுடைய தின விருந்தாளிகளான பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் என்று முழுக்க முழுக்க கதாபாத்திரங்கள் மீது தான் முழு படமும் நகர்கிறது. படத்தின் பலமே நடிகர்களும் அவர்கள் தங்களுடைய பணியை அளவாக செய்திருப்பதும் தான்.

விமல், விதார்த், ரமணா என்று தனி தனி ஹீரோக்களாக நடித்துக்கொண்டிருப்பவர்கள் இந்த படத்தில் ஒன்றாக இணைந்து நடித்திருக்கிறார்கள். விதார்த்தின் கதாபாத்திரம் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு அமைந்துள்ளது. சிங்கம் புலியின் டைமிங் வசனமும், அதற்கு ஈடு கொடுத்து பேசும் விமலும் அசத்துகிறார்கள்.பூர்ணா, மனிஷா, ராஜேஷ் என்று படத்தில் நடித்த அனைவர்களும் அளவோடு நடித்துள்ளார்கள்.

வித்யாசாகரின் இசையில் பாடல்கள் அனைத்தும் முனு முனுக்க வைக்கிறது.

மாபெரும் வெற்றி பெற்ற மலையாளப் படம் 'ஆர்டினரி' படத்தின் தமிழ் ரீமேக் தான் இப்படம். மலையாளக் கதையை எந்த விதத்திலும், கெடுக்காமல் உள்ளதை உள்ளபடியே ரசிக்கும்படி கொடுத்துள்ளார் கரு.பழனியப்பன்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments