தமிழ் சினிமாவில் வியாபாரிகள் சரியில்லை - தயாரிப்பாளர் ஆதங்கம்!!!

17th of December 2013
சென்னை::தமிழ் சினிமாவில் சரியான வியாபாரமும், சரியான வியாபாரிகளும் இல்லை, அதனால் சிறு முதலீடுப் படங்களை எடுப்பவர்கள் ரொம்பவெ சிறமப்படுகிறார்கள் என்று இசையமைப்பாளராக அறிமுகமாகி, தற்போது இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வரும் எஸ்.எஸ்.குமரன் ஆதங்கப்பட்டார்.

எச் 3 சினிமா என்ற நிறுவனம் தயாரிக்கும் படம் 'சாய்ந்தாடு சாய்ந்தாடு'. மருத்துவத் துறையில் நடைபெறும் குற்றச் செயல்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை கஸாலி இயக்கியுள்ளார். சிறு கதை ஆசிரியரும், பத்திரிகையாளருமான கஸாலிக்கு இதுதான் முதல் படம்.

ஏ.ஜே.அலிமிர்சா இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களை இயக்குநர் கஸாலி எழுதியுள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று, சென்னை பிரசாத் லேபில் வெளியிடப்பட்டது. இதில் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கேயார் வெளியிட தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி சிவா,  தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா,  இயக்குநர் சமுத்திரக்கனி,  அருணாச்சலம் ஸ்டுடியோ எம் ஜெயக்குமார்,  நடிகர்கள் சுப்பு பஞ்சு, செளந்தரராஜா, அஜய் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

வரவேற்புரையுடன் படம் உருவான விதத்தைப் பற்றிப் பேசிய தயாரிப்பாளர் கே.எம்.ஜெகபர். "தம்பி கஸாலி எழுதிய சிறுகதைகளைத் தொகுப்பாக வெளியிட்டோம் அப்போது சேரன் வந்திருந்தார், தொடர்ந்து தமிழ்த்திரைப்படக் கலைஞர்களை வளைகுடா நாடுகளுக்கு அழைத்து கலை நிகழ்ச்சிகள் நடத்தினோம், அப்போது உருவானது தான் சினிமா ஆர்வம். அதே வேளையில் தம்பியும் நல்ல கதையை வைத்துக் கொண்டு முயற்சி செய்ய சாய்ந்தாடு சாய்ந்தாடு உருவாகிவிட்டது." என்றார்.

கேயார் பேசும் போது, "முன்பெல்லாம் கலைஞர்களுக்கு வீடுகொடுக்கமாட்டார்கள், ஏன் தண்ணீர் கூட கொடுக்கமாட்டார்கள்… ஆனால், அதனை முதன் முறையாக மாற்றிக்காட்டியவர் எம்.ஜி.ஆர், அவர் வந்த பிறகுதான் கலைஞர்களும் சமுதாயப் பொறுப்பு மிக்கவர்கள் என்கிற எண்ணம் மக்களுக்கு வந்தது. சாய்ந்தாடு சாய்ந்தாடு படத்தினையும் ஒரு சமூக உணர்வோடு மருத்துவத்துறையில் நடைபெறும் ஒரு அவலத்தைச் சுட்டிக்காட்டி இயக்கியிருக்கிறார் இயக்குநர் கஸாலி. படம் வெற்றிபெற வாழ்த்துகள்." என்று பேசிய கேயார், "வளைகுடா தொழிலதிபர் தயாரிப்பாளர்கள் இங்கு இருக்கும் சிறிய தயாரிப்பாளர்களுடன் சேர்ந்து படங்கள் தயாரித்தால் அவர்களுக்கும் லாபத்தில் ஒரு பங்கு கிடைக்கச் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இயக்குநர் சமுத்திரக்கனி பேசும்போது, "ஒரு பத்திரிக்கையாளராகத்தான் கஸாலியைத் தெரியும். திடீரென்று ஒரு படம் இயக்கப்போகிறேன் என்றார் அவர். யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றவில்லை அதனால் எனது படத்தில் பணியாற்று. அப்புறம் படம் இயக்கலாம் என்று சொன்னேன். அதற்குப் பிறகு ஆளையே காணோம், இதோ நான் எந்தப் படத்தில் அவரைப் பணியாற்ற அழைத்தேனோ அந்தப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடந்த 10 நாட்களில் அவரும் அவருடைய படத்தினை முடித்து விட்டுப் பாடல்கள் வெளியிட்டிருக்கிறார் என்றால் அவரது அசாத்தியமான தன்னம்பிக்கையைப் பாராட்டியே ஆகவேண்டும்." என்றார்.

இயக்குநர் நடிகர் பாண்டியராஜன் பேசும் போது, "பொதுவாக சாதனையாளர்களை வீட்டில் உள்ளவர்கள் அங்கீகரிப்பதில்லை, அந்த நிலையில் தனது தம்பியின் திறமையை அறிந்து தானே படத்தினைத் தயாரிக்க முன் வந்திருக்கிறார் என்றால் உண்மையில் தயாரிப்பாளர் எம் ஜெகபர் போற்றுதலுக்குரியவர்." என்றார்.
 
தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவும் நடிகர் சுப்பு பஞ்சுவும், "சிறிய படங்கள் தாம் திரைப்படத்துறையின் முதுகெலும்புகள்… அவைகள் தாம் திரைப்பட உலகை வாழவைக்கின்றன." என்று பேசினார்கள்.

இந்தப்படம் வெற்றிபெற்றால் தொடர்ந்து 5 படங்கள் தயாரிக்க இருப்பதாகவும், வளைகுடா நாடுகளில் வசிக்கும் மேலும் பல தொழிலதிபர்களைத் திரைப்படத்தயாரிப்புக்குக் கொண்டு வருவதாகவும் தயாரிப்பாளர் எம் ஜெகபர் சொன்னதை நினைவுகூர்ந்தார் நடிகர் செளந்தரராஜா.

இசையமைப்பாளரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான எஸ்.எஸ்.குமரன் பேசுகையில், "படம் நன்றாக எடுக்கிறோம். அதைப் பார்த்துவிட்டு பத்திரிகையாளர்களும் பாராட்டி எழுதுகிறார்கள். ஆனால், வியாபாரம் என்று வந்துவிட்டால், சிறிய முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைப்பதில்லை. ஏன் என்றால் இங்கு சரியான வியாபார யுக்தி இல்லை. சரியான வியாபாரிகளும் இல்லை. அதனால், கஸாலி, பாராட்டுகளை பெற்றவுடன் இல்லாமல், படத்தை வியாபார ரீதியாக வெற்றி பெற என்ன என்னா செய்ய வேண்டும் என்பதிலும் கவனமாக இருக்க வேண்டு." என்றார்.

சாய்ந்தாடு சாய்ந்தாடு படத்தின் இசையமைப்பாளர் அலிமிர்ஸா பேசுகையில், "பழைய பாடல்களைப் போல பாடல்வரிகளில் உணர்ச்சிகள் இல்லாமல் போனதற்கு, இசைக்கலைஞர்களுடன் சேர்ந்து திரும்ப திரும்ப பாடகர்கள் ஒத்திகை பார்த்த பழக்கம் மறைந்துவிட்டதே காரணம் என்று சுட்டிக்காட்டிய இசையமைப்பாளர் இன்றைய பாடகர்களிடம் வணிக எண்ணமே மேலோங்கியிருக்கிறது. ஒத்திகையெல்லாம் பார்க்காமல், காகித்தத்தைப் பார்த்தே பாடிவிடுகிறார்கள்…. பெரிய பாடகர்களோ சிறிய இசையமைப்பாளர்களிடம் மெட்டுக்களை வாங்கியபிறகு தான் பாடவே வருகிறார்கள்… இதில்வேறு வார்த்தைகள் சரியாகக் கேட்கவில்லை என்கிற குற்றச்சாட்டுகள்… இப்படி எல்லாவற்றையும் போராடி ஜெயித்து தான் புதிய இசையமைப்பாளர்களால் படங்களுக்கு இசையமைக்க முடிகிறது." என்று ஆதங்கப்பட்டார்.

முன்னதாக சாய்ந்தாடு சாய்ந்தாடு படத்தில் இடம்பெற்ற சாய்ந்தாடு சாய்ந்தாடு பாடலும் டிரையலரும் திரையிடப்பட்டன. தொடர்ந்து வளரும் கலைஞர்களை ஊக்கு விக்கும் விதமாக அரபிக்குதிரை, கஜல் மழை ஆகிய பாடல்களுக்கு ஜான் & பீட்டர் குழுவினர் மேடையில் நடனமாடினர். பாடகி பத்மலதா அன்பும் அறிவும் என்கிற பாடலை மேடையில் பாடினார்.

tamil matrimony_HOME_468x60.gif

Comments