பெங்களூர் திரைப்பட விழாவில் தமிழ்ப் படங்கள் புறக்கணிப்பு: சர்ச்சையில் கமல்!!!

28th of December 2013
சென்னை::ஒரு தமிழ் திரைப்படத்தைக் கூட திரையிடத் தேர்ந்தெடுக்காமல் புறக்கணித்த பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவை கமல்ஹாசன் தொடங்கி வைக்கலாமா என்ற கேள்வி தமிழ்த் திரையுலகினர் மத்தியில் எழுந்துள்ளது.
ர்நாடக அரசின் செய்தித்துறை, கர்நாடக சலனசித்ரா அகாடமி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இத்திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சி கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் பெங்களூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவை நடிகர் கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் நடிகரும் கர்நாடக அமைச்சருமான அம்பரீஷ், நடிகர் சுதீப், நடிகையும் எம்.பி.யுமான ரம்யா, ராதிகா பண்டிட் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஈரானிய திரைப்பட இயக்குநர் பௌரான் டேரக்ஷன்டே, ஜெர்மன் திரைப்பட இயக்குநர் ஹெயின்ஸ் ஜார்ஜ் பெட்வீடஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர். விழாவின் முதல் நாளில் குர்தீஷ் இயக்குநர் கர்ஷன் கடர் இயக்கிய 'பெகாஸ்' திரைப்படம் திரையிடப்பட்டது.
சமீப காலமாக இந்திய அளவில் பெரிதாக கவனத்தை ஈர்த்துவரும் தமிழ் திரைப்படம் ஒன்று கூட இவ்விழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்படவில்லை.
இதுகுறித்து பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவின் ஏற்பாட்டாளர்களிடம் கேட்டபோது, "கர்நாடகாவை சேர்ந்த 12 பேர் கொண்ட குழு தேர்வு செய்த திரைப்படங்களையே திரையிடுகிறோம்'' என்றனர்.
இதனிடையே தமிழ் திரைப்படங்களை புறக்கணித்த பெங்களூர் திரைப்படவிழாவை கமல்ஹாசன் தொடங்கி வைக்கலாமா என்றும் கேள்வி எழுந்துள்ளது.
சினிமாவிற்கு மொழி இல்லை; மதமில்லை; ஜாதியில்லை எனக் கூறிவரும் வேளையில், பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ்த் திரைப்படங்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டது தமிழ்த் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக இவ்விழாவிற்கு வந்துள்ள தமிழக திரையுலகினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments