விமர்சனம்>>>ஈகோ!!!

10th of December 2013
சென்னை::ஈஸ்வர் - கோமதி எனும் நாயகன், நாயகி பாத்திரங்களின் நாம கரண(பெயர்) சுருக்கம் தான் ஈகோ. இருவருக்குமிடையேயான ஈகோ தான் மொத்த படமும் கூட!

கதைப்படி புதுமுக ஹீரோ வேலு - ஈஸ்வரும், காமெடியன் பாலாவும், திருட்டு பசங்க. இருவரும் தங்கள் கூட்டாளி திருடர்கள் இருவர் கண்ணிலும் மண்மை தூவிட்டு கொள்ளை அடிச்ச பணம் கொஞ்சத்தோட திருட்டு ரயிலில் ஏறுறாங்க. அதே ரயிலில் நாயகி அனஸ்வரா எனும் கோமதியும், அவரோட கல்லூரி தோழியும் பயணிக்கின்றனர். நாயகியின் கைப்பையில் கல்யாணத்தை நிச்சயிக்க இருக்கும் காஸ்ட்லீ மோதிரம் இருக்கிறது! அதை திருடி செல்லும் திருடனை துரத்தி, மோதிரத்தை பறித்து வரும் நாயகர் ஈஸ்வரும், நண்பர் பாலாவும் அந்த மோதிரத்தை நாயகியிடம் தருவதற்குள் வண்டி புறப்பட்டு விடுகிறது! அந்த வைர மோதிரத்தின் மதிப்பு தெரியாத இருவரும் அதை நாயகி கோமதியிடம் கொடுத்துவிட்டு, தங்கள் பணப்பையை அவரிடமிருந்து வாங்கி வரலாமென கோமதியின் ஊருக்கு போகின்றனர்.

மோதிரத்தை எடுத்து வருபவன் தான் தன் காதலன், அவனை ஓ.கே. செய்தால் தான், நான் ஊர் திரும்புவேன், வீட்டுக்கு வருவேன்... என நாயகி கடுதாசி எழுதியிருக்கும் விவரம் தெரியாமலே நாயகரும், நண்பரும், கோமதி வீட்டிற்கு மோதிரத்துடன் போய்சேர, கோமதியின் பெரிய கூட்டுக்குடும்பம் மொத்தமும் சேர்ந்து ஈஸ்வரை, கோமதியின் காதலராக கருதி இவர்களை கொன்று புதைக்க பாய்கிறது. அந்த பெரிய குடும்பத்தின் கொலவெறியில் இருந்து ஈஸ்வரும், பாலாவும் தப்பி எஸ்கேப் ஆக, படம் பார்க்கும் நாம் சிக்குகிறோம்! அப்பப்பா காமெடி என்ற பெயரில் கடித்து, குதறி, கொன்று புதைத்து விடுகின்றனர். இறுதியில் ஈஸ்வரும், கோமதியும் எப்படி காதலர்கள் ஆனார்கள்?, குடும்பத்தாரின் சம்மதத்துடன் இருவரும் கைகோர்த்தார்களா...? இல்லையா...?, கோமதியின் கரண்ட் காதலர் என்ன ஆனார்.?! என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு லாஜிக் பார்க்காது மேஜிக்காக பதில் அளிக்கிறது ஈகோ படத்தின் மீதிக்கதை!

ஈஸ்வராக நடித்திருக்கும் அறிமுக நாயகர் வேலும், அறிமுகம் என்று சொல்ல முடியாத அளவிற்கு நன்றாகவே நடித்திருக்கிறார்.

கோமதி அலைஸ் அனஸ்வராகவும், முயற்சித்தால் ஹோம்லி நாயகியாக கொடிகட்டப்போவது நிச்சயம்!

வாய் ஓயாமல் பேசும் பாலா, பேசுவதை எல்லாம் காமெடி என கருதி கடிப்பதை குறைத்துக் கொள்வது நல்லது.

லூசு குடும்பமாக வர்ணிக்கப்படும் நாயகியின் தந்தை ரத்னவேலு எனும் வெள்ளை பாண்டி, அண்ணன்கள் சண்முகபாண்டி(ஜாக் பிரபு), சந்தனபாண்டி(லிங்கேஷ்), பாட்டி-ரேவதி, நாயகியின் தங்கை பத்மா (நிகிதா), பெரியப்பா தங்கவேலு (கே.எஸ்.மணியன், இவருக்கும் தங்கபாண்டின்னு பெயர் சூட்டியிருக்கலாமே), அண்ணி தேவி (தேவிகா) உள்ளிட்ட மொத்த குடும்பமும் நிஜமாகவே லூசு குடும்ப எஃபக்ட்டை தருவது ஈகோ படத்தின் பலமா, பலவீனமா என்பதை இப்படத்தின் இயக்குனர் சக்திவேல் தான் சொல்ல வேண்டும்!

ஏ.வி.வசந்தின் ஒளிப்பதிவு, ஏ.எஸ்.அன்பு செல்வனின் இசை, கேபிள் சங்கரின் வசனம் உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள் மட்டுமே ஈகோவை தூக்கி நிறுத்துமா தெரியவில்லை! இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம், எழுதி-இயக்கி இருக்கும் கந்தக்கோட்டை இயக்குநர் சக்திவேலின் எழுத்தில் இருக்கும் புதுமை, காட்சிப்படுத்தலிலும் இருந்திருந்தென்றால் ஈகோ - எவர் கிரீனாக இருந்திருக்கும்! அவ்வாறு இல்லாததால்,
 
ஈகோ - ரொம்ப எக்கச்சக்கமுங்கோ! கொஞ்சம் எரிச்சலுங்கோ!!
tamil matrimony_HOME_468x60.gif

Comments