சென்னை::திட்டமிட்டபடி, வரும் 28ம் தேதி, மலேசியாவில் நடக்க உள்ள இசை நிகழ்ச்சியில் பங்கு கொள்வேன் என, மலேசிய ரசிகர்களுக்கு, பத்திரிகையாளர்கள் மூலம் இளையராஜா உறுதி அளித்துள்ளார். பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி, வரும் 28ம் தேதி நடக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான ரிகர்சலில் அவர் ஈடுபட்டிருந்த நிலையில், நேற்று காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்ட் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக அவர் மலேசிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டார் என தகவல்கள் பரவின. இதனால், மலேசிய ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவல் அறிந்ததும், இளையராஜாவின் மகனும், இசையமைப்பாளருமான யுவன்சங்கர்ராஜா, மொபைல்போன் மூலம் இளையராஜாவை, மலேசிய பத்திரிகையாளர்களிடம் பேச வைத்தார். இளையராஜா பேசியதை, பத்திரிகையாளர்கள் அனைவரும் கேட்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அவர்களிடம் பேசிய இளையராஜா, திட்டமிட்டபடி, மலேசியாவில் வரும் 28ம் தேதி என்னுடைய இசை நிகழ்ச்சி நடக்கும். எனவே, ரசிகர்கள் ஏமாற்றம் அடைய வேண்டாம், என கூறினார். இந்த தகவலை, மலேசிய பத்திரிகைகள் இன்று முக்கிய செய்தியாக பிரசுரித்துள்ளன. இந்நிலையில், தீவிர சிகிச்சையில் இருந்து, சாதாரண வார்டுக்கு இளையராஜா இன்று மாற்றப்பட்டார். நாளை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என, தகவல்கள் கூறுகின்றன.
Comments
Post a Comment