திரை விமர்சனம்>>>>பிரியாணி!!!

22nd of December 2013
சென்னை::ஹாங் ஓவர் என்ற ரெசிபி புத்தகத்தை வைத்துக்கொண்டு, தன்னுடைய ஸ்டைலில் இந்த 'பிரியாணி' யை சமைத்திருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.

தான் பார்க்கும் பெண்களை மட்டும் அல்லாமல், தனது நண்பர் பிரேம்ஜி பார்க்கும் பெண்களையும் சேர்த்து அல்லும்,  பிளே பாயாக வலம் வரும் கார்த்தி, தனது நிறுவனத்தின் புதிய கிளை திறப்பிற்காக தனது நண்பர் பிரேம்ஜியுடன் ஆம்பூர் செல்கிறார். ஆம்பூர் செல்லும் இருவரும் அனைத்து பணிகளையும் முடித்துக்கொண்டு சென்னை திரும்பும் போது சரக்கடிக்கிறார்கள். பிறகு பிரியாணி சாப்பிட நினைக்கும் கார்த்தி, எங்கேயோ தேடி ஒரு பிரியாணி கடையை கண்டுபிடித்து பிரியாணி சாப்பிட, அங்கே வரும் மாண்டி தாக்கேரின் அழகில் மயங்க, அவரை பின் தொடர்கிறார்கள்.

வழியில் மாண்டி கார் ரிப்பேர் ஆக, அவருக்கு லிப்ட் கொடுக்கும் கார்த்தி, பிரேம்ஜி இருவரும் மாண்டியின் அழைப்பின் பேரில், அவர் தங்கிய ஓட்டலில் அவருடைய ரூமிலே தங்குகிறார்கள். இரவு முழுவதும் குடி, ஆட்டம், பாட்டம் என்று இருக்கும் கார்த்தியும், பிரேம்ஜியும் மறுநாள் காலை என்ன நடந்தது என்றே தெரியாத நிலையில் எங்கேயோ இருக்கிறார்கள். பிறகு ஓட்டல் ரூமிற்கு சென்று பார்த்தால் அங்கு அனைத்து பொருட்களும் உடைந்த நிலையில், ரத்தக் கரையுடன் இருக்கிறது.

இதற்கிடையில் அங்கு வந்த தொழிலதிபர் நாசர் கடத்தப்பட்டார் என்றும், அவர்களை கார்த்தி, பிரேம்ஜி இருவரும் கடத்தி விட்டார்கள் என்றும் செய்திகள் பரவுகிறது. இதனால் அதிர்ச்சிக்குள்ளாகும் இருவரும் போலீசாரிடம் இருந்து தப்பித்துவர, மேலும் ஒரு அதிர்ச்சியாக அவர்களது காரில் மரணம் அடைந்த நாசரின் உடல் இருக்கிறது.

இரவு முழுவதும் போதையில் இருந்த இருவருக்கும் என்ன நடந்தது? என்றே புரியாமல் இருக்க, அங்கு என்ன நடந்தது? ஏன் அப்படி நடந்தது? என்ற உண்மையை இயக்குநர் வெங்கட் பிரபு காரசாரமாக கார்த்தி - பிரேம்ஜியுடன் ரசிகர்களுக்கும் சேர்த்து புரியவைக்கிறார்.

சீரியஸ் காட்சிகளில் வரும் சிரிப்பு காட்சிகள், கெளரவ தோற்றத்தில் சில நடிகர்கள் என்று வெங்கட் பிரபுவின் அக்மார்க் ரெகுலர் பார்மேட்டில்டில் இந்த பிரியாணி சமைக்கபப்ட்டிருந்தாலும், எதிர்பாராத திருப்பங்கள், விறுவிறுப்பான காட்சிகள் மூலம் சுவையாக தயாரிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து தரப்பினருக்கும் பிடித்தமான நடிகராக நடித்து வந்த கார்த்தி, இந்த படத்தில் பெண்களை கவ்வும் பிளே பாயாக நடித்துள்ளார். அதே நையாண்டி சிரிப்பு, நக்கலான் பேச்சு இருந்தாலும், பெண்களிடம் வழிந்து அவர்களை கரக்ட் பண்ணுவது என்ற புதிய முயற்சியில் கார்த்தி வெளுத்து வாங்குகிறார்.

ஹன்சிகாவுக்கு பெரிய வேலை ஒன்றும் இல்லை. இரண்டு காட்சிகளில் கார்த்தியுடன் சண்டைப் போடுவது, ஒரு பாடலில் நடனம் ஆடுவது என்று குறைந்த வேலை தான். ஆனால், அதே சமயம் மாயா கேரட்கரில்  வரும்  மாண்டி  தாக்கருக்கு மெயின் கதாபாத்திரம். படமே இவரால் தான் சூடுபிடிக்கிறது.

வெங்கட் பிரபு கதை எழுதுகிறாரோ இல்லையோ, தம்பிக்காக ஒரு கதாபாத்திரத்தை அனைத்துப் படங்களிலும் ரெடி பண்ணிடுகிறார். அதுவும், இரண்டாவது ஹீரோ என்று சொல்லக்கூடிய அளவுக்கு  படம் முழுவதும் பயணிக்கும் பிரேம்ஜி, தன்னுடைய கதாபாத்திரத்தை நிறைவாகவே செய்திருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கும் ராம்கிக்கு நல்ல கதாபாத்திரமாக இருந்தாலும், ஏதோ ஊறுகாய் போல பயன்பட்டிருக்கிறார். போலீஸ் அதிகாரியாக வரும் ஜெயப்பிர
 
காஷ், சி.பி.ஐ அதிகாரியாக வரும் சம்பத், மற்றொரு போலீஸ் அதிகாரியான பிரேம், தொழிலதிபரான நாசர் என்று பெரிய நட்சத்திரங்களாக இருந்தாலும், அனைவரும் திரைக்கதைக்கு ஏற்ப பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

மெளன குரு படத்திற்குப் பிறகு உமா ரியாஸ்கானுக்கு நல்ல வேடம் கிடைத்திருக்கிறது. பெண் வில்லிகள் சண்டைப்போடும் காட்சிகளைப் பார்த்து எவ்வளவு நாளாச்சு. உமா ரியாஸின், ஆக்ஷன் காட்சிகள் திரையரங்கையே அதிர வைக்கிறது.

யுவன் சங்கர் ராஜாவின் 100வது படம் இது. ரசிகர்கள் யுவனிடம் எதிர்ப்பார்த்த அளவில் 50 சதவீதம் கூட இல்லை என்பதுதான் உண்மை. யுவன், இசையமைக்கும் படங்களில் ஏதாவது இரண்டு பாடல்களாவது ஹிட் ரக பாடல்களாக இருக்கும். ஆனால், இதில் ஒரு பாடலும், ஏன், ஒரு பல்லவி கூட நன்றாக இல்லை.

கதை என்னவோ பழையதாக இருந்தாலும், தனது திரைக்கதை யுக்தியின் மூலம் வெங்கட் பிரபு அதை புதியதாக்கியுள்ளார். இதற்கு முன் இருந்த தனது படங்களில் பாதிப்பு இதில் தெரியக்கூடாது என்பதற்காக ரொம்பவே மெனக்கெட்டுள்ள வெங்கட் பிரபு, முதல் பாதியில் தனது அத்தனைப் படங்களையும் ஞாபகப்படுத்துகிறார். இருப்பினும், இரண்டாம் பாதியில் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்களினால் படத்தை வேறு ஒரு தலத்திற்கு எடுத்துச்சென்று நிமிர வைக்கிறார்.

கெளரவ தோற்றத்தில் நடித்த ஜெய்யை அறிமுகப்படுத்துவது, கார்த்தி செய்யும் தவறுகளுக்கு பிரேம்ஜி மாட்டிக்கொள்வது, ஓட்டல் ரூமில் நடந்ததை கார்த்தி விவரிக்கும்போது, பிரேம்ஜியை வைத்து கதை சொல்வது என படத்தை ரசிப்பதற்கு ஏகப்பட்ட காரணங்கள் இருக்கின்றன. இருப்பினு, ஏதோ ஒன்று குறைவது போல, ஒரு சில குறைகளை தவிர்த்து இன்னும் மெருகேற்றியிருந்தால் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக வந்திருக்கும்.

பிரியாணி இரண்டாம் பாகம் எடுப்பதற்கு ஏற்றவாறு படத்தை முடிக்கிறாரோ, என்று எண்ணும் நேரத்தில், இன்னும் இருக்கிறது, என்று அமர வைக்கும் வெங்கட் பிரபு, படத்தின் கிளை கதை ஒன்றையும், அதன் க்ளைமாக்ஸ் ஒன்றையும் காண்பித்து ரசிகர்களை திருப்தி படுத்திவிடுகிறார்.

இந்த 'பிரியாணி' யில் சில மசாலாக்கள் மிஸ்ஸானாலும், சாப்பிடுவதற்கு ஏற்றவாறே உள்ளது.
tamil matrimony_HOME_468x60.gif

Comments