29th of November 2013
சென்னை::சமீபத்தில் நடந்த ஒரு திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் வைரமுத்துவின் பேச்சு ஊடக மக்களிடையே கடும் வெறுப்பையும் எதிர்ப்பையும் சம்பாதித்திருக்கிறது.அந்த விழாவில் வைரமுத்து பேசியதாவது,
இந்த மூன்று ஆண்டுகளில் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது.
ஒரு பெரிய ஹீரோவின் படம், கடந்த ஐந்து வருடங்களாக எப்படிப் பார்க்கப்படுகிறது என்று கணக்கெடுத்திருக்கிறோம். முதலில் ஒரு படம் வெளியான போது அந்த படத்தை ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேர் பார்த்திருக்கிறார்கள். அதே ஹீரோ நடித்து இரண்டு வருடம் கழித்து வந்த இன்னொரு படத்தை ஒரு லட்சத்து இருபதாயிரம் பேர் பார்த்திருக்கிறார்கள். அதற்கடுத்த படத்தை தொண்ணூராயிரம் பேர் பார்த்திருக்கிறார்கள். இப்படி படம் பார்ப்பவர்களின் எண்ணிக்க்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வந்திருக்கிறது.
பல வருடங்களுக்கு முன்னர் படம் பார்க்கும் போது இருந்த கொண்டாட்டம், இன்று குறைந்து விட்டது. அதற்குக் காரணம் இணையதளம், தொலைக்காட்சி ஆகிய ஊடகங்கள்தான்.
தமிழ் சினிமா என்ற ஊடகத்தை இன்று இந்த ஊடகங்களே நசுக்குகின்றன. இந்த ஊடகங்களுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப் போகிறீர்கள் என்பதை தயாரிப்பாளர் சங்கம் விவாதித்து முடிவு செய்ய வேண்டும், ” என்று பேசினார்.
வைரமுத்துவின் இந்த பேச்சு நிகழ்ச்சிக்கு வந்திருந்த இணையதள, தொலைக்காட்சி பத்திரிகையாளர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
ஹீரோக்களின் பின்னால் தமிழ் சினிமா என்றுமே சென்றதில்லை இல்லை, கதைகளின் பின்னால்தான் ஹீரோக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அது மட்டுமல்ல, இன்று திரையரங்குகளில் கட்டணம் என்பது குடும்பத்துடன் சென்று பார்க்க முடியாத அளவிற்கு வெகுவாக உயர்ந்துள்ளது. இப்படி பல காரணங்கள் உள்ள நிலையில் ஊடகங்களைக் குறி வைத்து வைரமுத்து பேச என்ன காரணம்…
இன்று பாட்டெழுத பலர் வந்து விட்ட நிலையில், அவர்களை இன்றைய தொலைக்காட்சி மற்றும் இணையதளங்கள் பாராட்டி எழுதி வருகின்றன. இவை வருவதற்கு முன்னால் வாலி, வைரமுத்து ஆகியோர் மட்டுமே அதிகமான பாடல்களை எழுதி வந்தனர். இவர்கள் அரசாட்சி செய்து கொண்டிருந்த கோட்டையை உடைத்துக் கொண்டு பல புதிய பாடலாசிரியர்கள் வந்திருக்கின்றனர்.
இன்று சினிமா என்பது பல புதியவர்களுக்கு கதவுகளை திறந்து விட்டிருக்கிறது.
எந்த இயக்குனரிடமும் உதவியாளராக இல்லாதவர்கள் கடந்த சில ஆண்டுகளாக பல வெற்றிப் படங்களைக் கொடுத்து வருகின்றனர்.
ஊடகங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று பேசும் வைரமுத்து போன்றவர்கள் தமிழ் சினிமாவைக் கெடுக்கும் பல கேவலமான படங்களை தயாரிப்பவர்களைத் தடுக்க முடியுமா…
சில நாட்களுக்கு முன் நடைபெற்ற ‘மதயானைக் கூட்டம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் பேசும் போது, சமீபத்தில் வெளிவந்த ஒரு படத்தை 66 கோடி ரூபாய் செலவு செய்து எடுத்திருக்கிறார்கள். இது போன்ற படங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் எடுக்க முன் வரக் கூடாது. இப்படிப்பட்ட படங்களை எடுத்து சினிமாவை சீரழிக்க வேண்டாம், ” என்று பேசியிருந்தார்.
கேயார் குறிப்பிட்டுள்ள அந்த படத்தில் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் வைரமுத்து. பல இணையதளங்களில் அந்த படத்தை கடுமையாக விமர்சித்து விமர்சனங்கள் வெளிவந்தன. அதனால், அந்த படத்தின் பாடல்களும் வெளியில் தெரியாமலேயே போய்விட்டது. இதற்குப் பதிலளிக்கும் விதமாகத்தான் மேற்குறிப்பிட்ட விழாவில் வைரமுத்து பேசியதாகத் தெரிகிறது.
நல்ல படங்களை என்றுமே வரவேற்பவர்கள் நாங்கள் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.
விமர்சனங்களை உங்களைச் செதுக்கும் உளிகளாகத்தான் பார்க்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாத ஒன்று அல்ல. மக்கள் மன்றத்திற்கு வந்த பின் விமர்சிக்கப்படாத எந்த படைப்புமே சிறந்த படைப்பு அல்ல…
இது மக்களாட்சி நடைபெறும் நாடு. கருத்துச் சுதந்திரம் என்பது அனைவருக்கும் பொதுவானது. அதை யாரும் பறித்து விட முடியாது.
Comments
Post a Comment