தமிழ் படத்தில் நடிக்க ஆசை: இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன்!!!

12th of November 2013
சென்னை::ராகேஷ் ரோஷன் டைரக்டு செய்து, அவருடைய மகன் ஹிருத்திக் ரோஷன் கதாநாயகனாக நடித்த இந்தி படம், கிரிஷ்-3. இந்த படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ.203 கோடி வசூல் செய்து இருக்கிறது. கிரிஷ்-3 படம் சென்னை உள்பட பல இடங்களில் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் ரசிகர்களை சந்திப்பதற்காக ஹிருத்திக் ரோஷனும், அவருடைய தந்தை ராகேஷ் ரோஷனும் சென்னை வந்தார்கள். இருவரும் சத்யம் தியேட்டரில் ரசிகர்கள் முன்பு தோன்றினார்கள். ஹிருத்திக் ரோஷனை நேரில் பார்ப்பதற்காக ரசிகர்கள்-ரசிகைகள் கூட்டம் அலைமோதியது. ரசிகர்கள் மத்தியில், ஹிருத்திக் ரோஷன் பேசியதாவது:-

உங்கள் அன்பை நேரில் பார்த்து நெகிழ்ந்து போனேன். நீங்கள் என் மீது காட்டிய பாசத்தில் எனக்கு மூச்சு திணறி விட்டது. மனசெல்லாம் நிறைந்து இருக்கிறது. பேசுவதற்கு வார்த்தைகள் வரவில்லை. இதுபோன்ற அன்பை உலகில் நான் எங்கும் பார்த்ததில்லை.

இவ்வாறு ஹிருத்திக் ரோஷன் பேசினார்.

அதன்பிறகு ஹிருத்திக் ரோஷன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு ஹிருத்திக் ரோஷன் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- சூப்பர் ஹீரோவாக நடித்திருக்கும் நீங்கள் சூப்பர் ஹீரோயின் என்று யாரை சொல்வீர்கள்?

பதில்:- என் அம்மா, மனைவி, சகோதரி ஆகிய மூன்று பேரும் சூப்பர் ஹீரோயின்கள்தான்.

கேள்வி:- ஷாருக்கான் தனது படங்களில் தமிழ் நடிகர்களை நடிக்க வைக்கிறார். தமிழ் வசனங்களை பேசுகிறார். அதுபோல் நீங்களும் உங்கள் படங்களில் தமிழ் நடிகர்களை நடிக்க வைப்பீர்களா, தமிழ் வசனங்களை பேசுவீர்களா?

பதில்:- என் அடுத்த படத்தில் நிச்சயமாக தமிழ் நடிகர்களை நடிக்க வைப்பேன். தமிழ் வசனங்களை என் படங்களில் பயன்படுத்துவேன்.

கேள்வி:- தமிழ் ரசிகர்கள் மீது அன்பு கொண்ட நீங்கள் தமிழ் படத்தில் நடிப்பீர்களா?

பதில்:- நேரடி தமிழ் படம் ஒன்றில் என்னை நடிக்க அழைத்தால், நிச்சயமாக நடிப்பேன். அது, என் அடுத்த படமாக கூட இருக்கலாம். தமிழ் படங்களில் நடிக்க நான் ஆசையாக இருக்கிறேன்.

மேற்கண்டவாறு ஹிருத்திக் ரோஷன் பதில் அளித்தார்.

பேட்டியின்போது, கிரிஷ்-3 படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்ட வினியோகஸ்தர் சிபு, ஒளிப்பதிவாளர் திரு ஆகிய இருவரும் உடன் இருந்தார்கள்.

tamil matrimony_HOME_468x60.gif
 

Comments