சுருதிஹாசனின் சினிமா வாழ்க்கை தொடர்பாக நான் கவலைப்பட்ட காலம் எல்லாம் போய்விட்டது. இனி சுருதி சினிமா உலகில் சாதனைகள் படைப்பதில் தன் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும்: கமல்!!!
25th of November 2013
சென்னை:: நடிகர் கமலஹாசன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:–
சுருதிஹாசனின் சினிமா வாழ்க்கை தொடர்பாக நான் கவலைப்பட்ட காலம் எல்லாம் போய்விட்டது. இனி சுருதி சினிமா உலகில் சாதனைகள் படைப்பதில் தன் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சுருதி 10 படங்களில் நடித்து முடித்துள்ளார். அவர் பல்வேறு மொழி தயாரிப்பாளர்களின் படங்களில் நடித்து வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
சுருதியை பொருத்தவரை அவர் தன் முழு திறமையையும் வெளிப்படுத்தி நடிக்கிறார். எனக்கு தெரிந்த வரை அவரது நடிப்பு சிறப்பாக உள்ளது. ஒரு காலத்தில் நான் என்னைப் பற்றியும் சுருதியைப் பற்றியும் கவலைப்பட்டது உண்டு. ஆனால் இப்போது அத்தகைய கவலை எல்லாம் போய் விட்டது. இனி சுருதி தன்னை சரியான பாதையில் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இப்போதைக்கு என்னிடம் உள்ள ஒரே கவலை இதுதான்.
எனது இன்னொரு மகள் அக்ஷராவும் சினிமா உலகிற்கு வர உள்ளார். அவர் ‘பா’ இயக்குனர் பால்கியின் இயக்கத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். அக்ஷராவும் நடிக்க வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. அவருக்கு இப்போதே என் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது மகள்களுக்கு நான் நடிப்பு பற்றி சொல்லி கொடுப்பதில்லை. அதற்கான அவசியமும் இல்லை. எப்போதாவது மிகவும் அரிதாக ஆலோசனை வழங்குவேன்.
அவர்களது நடிப்பாற்றல் பெரும்பாலும் டிஎன்ஏ மூலக் கூறுகளில் இருந்து வந்துள்ளது. மீதம் உள்ளது அவர்களது திறமையாக கருதுகிறேன். எனவே அவர்கள் திரை உலகில் நடிகைகளாக மேம்பட்டதில் எனக்கு எந்த பங்களிப்பும் இல்லை. அவர்களுக்கு நான் எந்த பயிற்சியும் அளிக்கவில்லை. அவர்களது திரை உலக வாழ்க்கையை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்று நான் வழி காட்டியதும் இல்லை. அவர்களாகவே அவர்களது திரை உலக வாழ்வை நிர்ணயித்துக் கொண்டுள்ளனர்.
தற்போது நான் விசுவரூபம் 2–ம் பாகம் உருவாக்குவதில் தீவிரமாக உள்ளேன். விசுவரூபம் முதல் பாகத்துக்கு ஏற்பட்ட எதிர்ப்பு போன்று இரண்டாம் பாகத்துக்கு ஏற்படாது என்று நம்புகிறேன். இப்போது எல்லா அரசியல் கட்சியினரும் எல்லா தகவல்களையும் அறிந்து மதி நுட்பமுடையவர்களாக உள்ளனர். எனவே முன்பு ஏற்பட்டது போன்று எந்த நிகழ்வும் ஏற்படாது என்று நம்புகிறேன்.
இவ்வாறு கமலஹாசன் கூறினார்.
Comments
Post a Comment