விடியும் முன்!!!<<விடியும் முன்’ புதிய முயற்சி

29th of November 2013
சென்னை::பூஜா ஒரு சிறுமியுடன் உயிருக்கு பயந்து ஓடிவருகின்ற காட்சியுடன் படம் தொடங்குகிறது. இவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்? இவர்கள் உயிரை கையில் பிடித்து ஓடிவருவதான் காரணம் என்ன? என்பதை விவரிக்கும் விதமாக படத்தின் காட்சிகள் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்க்கப்பட்டு நம் கண்முன்னே காட்சியாக விரிகின்றன.

பூஜா ஒரு விலை மாது. இவள் ஒரு சிறுமியை ஒரு செல்வந்தருக்கு அர்ப்பணிக்க அழைத்துச் செல்கிறார். அங்கு நடக்கும் சம்பவங்கள் அந்த சிறுமி மீது பூஜாவுக்கு பரிதாபத்தை ஏற்படுத்துகிறது. இதனால் அந்த செல்வந்தரை தாக்கி இருவரும் அங்கிருந்து தப்பிக்கிறார்கள்.

இதனை அறிந்த செல்வந்தரின் மகன் தன் அப்பா சாவுக்கு காரணமானவர்களை தேடி அலைகிறான். அவன் விசாரணையில் பூஜா மற்றும் சிறுமியைத் தவிர்த்து பூஜாவுக்கு நெருக்கமானவர்கள் எல்லாம் பிடிபடுகின்றனர். அவர்களை இவன் படுபயங்கரமாக கொலை செய்கிறான்.

இறுதியில் பூஜாவும் சிறுமியும் இவனின் கையில் சிக்குகிறார்கள். செல்வந்தரின் மகன் பூஜாவையும் சிறுமியையும் கொலை செய்தானா? இல்லை பூஜாவும், சிறுமியும் அவனிடமிருந்து தப்பித்தார்களா? என்பதே மீதிக்கதை.

12 வயது குட்டிப் பெண்ணாக வரும் மாளவிகா மணிகுட்டன், நடிப்பில் அசத்தியிருக்கிறார். துடுக்குத்தனமான பேச்சும், குழந்தைத்தனமான பிடிவாதமுமாய் மனசை அள்ளுகிறார். அடுத்து அவருக்கு என்ன நேரும் என்று நொடிக்கு நொடி அனுதாபத்துடன் பதைபதைக்க செய்வதில் அபார வெற்றி பெற்றிருக்கிறார்.

செல்வந்தரின் மகனாக வரும் வினோத் கிஷான் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். தன்னுடைய அப்பாவை தாக்கியவர்களை பிடிக்க இவர் விரிக்கும் வலை சுவாரஸ்யமானது. நடிப்பிலும் மிளிர்ந்திருக்கிறார்.

பாலாவின் ‘பரதேசி’ படத்தில் நடிக்க முதலில் ஒப்புக் கொண்டிருந்த நடிகை பூஜா, ‘விடியும் முன்’ படத்தில் நடிப்பதற்காக ‘பரதேசி’ படத்தை கைவிட்டது மிகச் சரியான முடிவு என்பதை நிரூபித்திருக்கிறார். நடிப்புத் திறனை வெளிப்படுத்த வாய்ப்புள்ள இத்தனை கனமான கதாபாத்திரம் இதுவரை அவருக்குக் கிடைத்ததில்லை. வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்தி, நம் உள்ளத்தில் ஈரம் கசிய வைக்கிறார். இன்றைய சமூகத்தில் நிலவும் மிகச் சிக்கலான – முக்கியப் பிரச்சனை ஒன்றை மிகையாக காட்டாமல் சுவாரஸ்யமாகவும், பிரமாதமாகவும் இயக்குனர் சொல்லியிருக்கிறார்.

விரல்விட்டு எண்ணிவிடும் அளவுக்கு, மிகக் குறைந்த அளவிலான கதாபாத்திரங்களைப் படைத்து, அவற்றில் நட்சத்திர அந்தஸ்து இல்லாத சாதாரண நடிகர் – நடிகைகளை நடிக்க வைத்து, யதார்த்தத்தைக் கெடுக்காத நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, விறுவிறுப்பான சஸ்பென்ஸ் த்ரில்லராக இப்படத்தைக் கொடுத்திருக்கும் இயக்குனர் பாலாஜி கே.குமாருக்கு பாராட்டுக்கள்.

மொத்தத்தில் ‘விடியும் முன்’ புதிய முயற்சி.
tamil matrimony_HOME_468x60.gif

Comments