15th of November 2013
சென்னை::2005- ஆம் ஆண்டு ரிலீசான ‘கற்க கசடற’ என்ற படத்தின் மூலம் கதாநாயக நடிகராக அறிமுகமானவர் – விக்ராந்த்.
பெயரில் விக்ரம் பாதி, விஜயகாந்த் பாதி என்ற கலவை இருந்தாலும்…இவர்களிருவருக்கும் விக்ராந்துக்கும் எந்த சம்மந்தமுமில்லை. சம்மந்தம்…விஜய் உடன் மட்டும்தான். யெஸ்..விக்ராந்த் விஜய்யின் தம்பி. அதாவது விஜய்யின் அம்மா ஷோபாவின் தங்கை ஷீலாவின் மகன் இவர்.
எனவே கற்க கசடற படத்தில் அறிமுகமானபோது, நடிகர் விஜய்யின் தம்பி என்ற அடையாளத்தோடுதான் அறிமுகமானார் விக்ராந்த்.
கற்க கசடற படத்துக்குப் பிறகு நினைத்து நினைத்துப் பார்த்தேன், நெஞ்சத்தைக் கிள்ளாதே, எங்கள் ஆசான், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக என்று அரை டஜன் படங்களில் நடித்தும் கூட இன்றுவரை அவரால் ஒரு முன்னணி நடிகராக உயர முடியவில்லை.
தற்போது தன் அண்ணன் சஞ்சீவி இயக்கத்தில் பிறவி என்ற படத்தில் நடித்து வரும் விக்ராந்த், விஷாலின் பாண்டிய நாடு படத்தில் சிறு வேடத்திலும் நடித்திருக்கிறார். கதாநாயகனான விக்ராந்த் இப்படியொரு வேடத்தில் நடிக்க ஒரே காரணம்….விஷால் உடனான நட்பு. நட்பு என்பதைவிட சகோதர பாசம் என்பதுதான் சரியான வார்த்தை.
பாண்டியநாடு’ சக்சஸ் மீட்டில் பேசிய விஷால் “இந்தப்படத்துல என் தம்பி விக்ராந்த்துக்கும் ஒரு கேரக்டர் குடுங்க என்று டைரக்டர் சுசீந்திரனிடம் நான் கேட்டேன். உடனே அவர் ஒப்புக்கு ஒரு கேரக்டரை கொடுக்காமல் நிஜமாகவே ஒரு நல்ல கேரக்டரை கொடுத்தார். இன்று விக்ராந்த் நடித்த சீன்களைப் பார்த்து ரசிகர்கள் கை தட்டும்போது எனக்கு சந்தோஷமா இருக்கு. விக்ராந்த்தை ஹீரோவாக வைத்து எனது சொந்தக் கம்பெனியில் ஒரு படத்தை தயாரிக்கப் போகிறேன்” என்றும் சொன்னார்.
இதுகுறித்து விக்ராந்திடம் கேட்டபோது,
உண்மையிலேயே சொல்றேன். விஷால் என்னை ஹீரோவா வெச்சு படம் பண்றார்ங்கிறதுக்காக சொல்லலை. நானும் விஷாலும் 12 வருஷமா ப்ரெண்ட்ஸா இருக்கோம். என்னோட அப்பா, அம்மா, என்னோட மனைவி, குழந்தைக்கப்புறம் அவனுக்குத்தான் எனக்கு ஏதாவது செய்யணும்னு தோணிருக்கு. அதனாலதான் என்னை வெச்சி படம் பண்றேன்னு சொல்றார். மத்தபடி எனக்கு யாருமே கெடையாது.”
ஒரு படத்துக்கு 15 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கிக் கொண்டு, தமிழ்சினிமாவில் பிரபல ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் அவரது அண்ணனான விஜய் அவருக்கு எந்த உதவியும் செய்யவில்லை, அதனால்தான் எனக்கு விஜய்யெல்லாம் அண்ணனே கிடையாது, விஷால்தான் உண்மையான அண்ணன் என்ற அர்த்தத்தில் விரக்தியோடு விக்ராந்த் பேசினார். அவர் பேசியபோது அவரது கண்கள் கலங்கின.
Comments
Post a Comment