'போங்கடி நீங்களும் உங்க காதலும்' இசை வெளியீட்டு விழா: ஆண்களை திட்டிதான் காட்சிகள் உள்ளன: ராமகிருஷ்ணன்!!!

22nd of November 2013சென்னை::பெண்களை இழிவுபடுத்தும் வகையில் ஒரு காட்சி கூட கிடையாது என்று இயக்குனரும் நடிகருமான ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
'குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’, ‘கோரிப்பாளையம்’ போன்ற படங்களில் நடித்தவர் ராமகிருஷ்ணன். இயக்குநர் சேரனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ராமகிருஷ்ணன், இயக்குனராவதற்கு முன்பு 'குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்' என்ற படத்தின் மூலம் ஹீரோவாகிவிட்டார். இந்தப் படம் தோல்வியடைந்ததால் அவருக்கு தொடர்ந்து நாயகன் வாய்ப்பு எதுவும் அமையவில்லை.
 
இந்நிலையில் ராமகிருஷ்ணன் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு 'போங்கடி நீங்களும் உங்க காதலும்' என்ற படத்தை இயக்குவதோடு அதில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். பல வெற்றிப் படங்களைத் தயாரித்த கே.ஆர்.கே மூவிஸ் கே.ஆர்.கண்ணன் தயாரிக்கும் இப்படத்தில் நாயகிகளாக மனம் கொத்திப் பறவை படத்தில் நடித்த ஆத்மியா, மற்றும் காருண்யா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஜெயப்பிரகாஷ், இமான் அண்ணாச்சி, சாமிநாதன், சென்ட்ராயன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். படத்திற்கு கண்ணன் இசையமைத்துள்ளார்.
 
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இயக்குநர் பாக்யராஜ் இசையை வெளியிட, தயாரிப்பாளர் கேயார் பெற்றுக் கொண்டார். விழாவில் பேசிய படத்தின் நாயகனும், இயக்குனருமான ராமகிருஷ்ணன், “படத்துக்கு ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’ என்று டைட்டில் வைத்திருந்தாலும், இது பெண்களுக்கு எதிரான படம் இல்லை. இன்னும் சொல்லப்போனால் பெண்களை அக்கறையோடு எச்சரிக்கும் வகையில் இந்தத் தலைப்பு அமைந்துள்ளது. பெண்களை இழிவுபடுத்தும் வகையில் ஒரு காட்சி கூட கிடையாது.
 
பெண்களை உயர்வாகவே சித்தரித்துள்ளேன். ஆண்களை திட்டிதான் காட்சிகள் உள்ளன. பெண்கள் தொடர்ந்து தவறான நபர்களை நம்பி மட்டுமே தங்கள் வாழ்க்கையை ஒப்படைக்கின்றனர். ஒருமுறை அனுபவப்பட்ட பிறகும் கூட மீண்டும் அதே தவறைச் செய்கின்றனர். அதை ஒரு பெற்றோரின் பார்வையில் சொல்லும் படம்தான் இந்த போங்கடி நீங்களும் உங்க காதலும். நீண்ட போராட்டத்துக்குப் பிறகுதான் எனக்கு இந்தப் படத்தோட வாய்ப்பு கிடைத்தது.
 
இந்தப் படத்தின் கதையை தயாரிப்பாளரிடம் சொன்னப்போது அது அவருக்கு பிடித்துவிட்டது. உடனே, ஹீரோ யாரா இருந்தாலும் பரவாயில்ல கதைமேல எங்களுக்கு நம்பிக்கை இருக்குன்னு சொன்னாங்க. அப்படித்தான் நான் இந்தப் படத்தின் வாய்ப்பை பெற்றேன்” என்றார். விழாவில் இயக்குனர்கள் சேரன், விக்ரமன், கரு.பழனியப்பன், மிஷ்கின், சமுத்திரகனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்
                    tamil matrimony_HOME_468x60.gif

Comments