20th of November 2013
சென்னை::நான்தான் பாலா’ படத்தில் நகைச்சுவை நடிகர் விவேக் சீரியஸான கேரக்டரில் நடிக்கிறார்.
டிரிபிள் எஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஜே.ஏ.லாரன்ஸ் தயாரிக்கும் படம் ‘நான்தான் பாலா’. இந்த படத்தில் நாயகனாக புதிய பரிமாணத்தில் காமெடி நடிகர் விவேக் நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விவேக் நடிக்கும் படம் இது.
இந்தப் படத்தின் மூலம் கண்ணன் இயக்குனராக அறிமுகமாகிறார். இவர், ‘தேசிய விருது’ இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். வெங்கட் க்ரிஷி என்பவர் இசையமைக்கிறார். மணவாளன் ஒளிப்பதிவை கவனிக்கிறார். படத்தில் விவேக் முதன்முறையாக சீரியஸான கேரக்டரில் நடிக்கிறாராம்.
இது குறித்து விவேக் கூறியதாவது: இந்த கதையை பலமாதங்களுக்கு முன்பு நான் கேட்டபோது இந்த கதையை நான் பண்ணலாமா? வேண்டாமா? என்ற அச்சம் என்னுள் எழுந்தது. காரணம் இது ஒரு சீரியஸ் கதை. 25 வருடமாக காமெடியனாக நடித்ததால் சீரியஸ் கேரக்டரில் நடிக்க கேட்டபோது மக்கள் ஒத்துக் கொள்வார்களா? என்ற தயக்கம் இருந்தது. பிறகு கமலின் அறிவுரையின்படியே இந்த கேரக்டரை ஏற்று நடித்தேன்.
என்னுடைய திரை வாழ்க்கையில் இந்த படம் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று உணர்கிறேன். நகைச்சுவை நடிகர்களுக்கு கிடைக்கக்கூடிய கௌரவமாக இந்த படம் இருக்கும். எல்லா காமெடியன்களும் இந்த படத்தை பார்த்து பெருமைப்படுவார்கள். அப்படி ஒரு விஷயத்தை இந்த படத்தில் செய்திருக்கிறேன். இதற்கு உலகநாயகன் கமல் ஹாசனுக்கு பெரிய அளவில் நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறேன் என்றார்.
படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவிருக்கிறது. இந்த விழாவில் கமல் ஹாசன் கலந்து கொள்கிறார்.
Comments
Post a Comment