13th of November 2013
சென்னை::காமெடி நடிகர் குள்ளமணி தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெறுகிறார். அவரது சிறுநீரகங்கள் செயல் இழந்தன.நவாப் நாற்காலி படம் மூலம் அறிமுகமானவர் குள்ளமணி என்கிற சுப்பிரமணி (61). எம்ஜிஆர், சிவாஜி படங்களில் நடித்துள்ள இவர், ரஜினி, கமல் படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலம் ஆனார்.
கரகாட்டக்காரன் படத்தில் பழைய காரை கவுண்டமணி, செந்தில் தள்ளிக்கொண்டு வரும்போதெல்லாம் பழைய இரும்பு பித்தளைக்கு பேரீச்சம்பழம் என சைக்கிளில் கூவியபடி வருவார் குள்ளமணி. ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இந்த காட்சி, குள்ளமணிக்கு பெயர் பெற்றுத் தந்தது. குள்ளமான தோற்றமே இவரது காமெடி கேரக்டர்களுக்கு பலமாக அமைந்தது. குள்ளமணிக்கு ராணி என்ற மனைவி, மகாலட்சுமி (3) என்ற மகள் உள்ளனர். இவரது மனைவி சில நாட்களுக்கு முன் சொந்த ஊர் சென்றிருந்தார். கே.கே. நகரில் உள்ள வீட்டில் வசித்து வந்த குள்ளமணி, கடந்த 2 நாட்களாக வீட்டின் கதவை திறக்கவில்லையாம்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் நேற்று அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு நினைவு இழந்த நிலையில் குள்ளமணி காணப்பட்டார். உடனே அவரை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்து அவரது மனைவி மருத்துவமனைக்கு வந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள குள்ளமணியின் 2 சிறுநீரகமும் செயல் இழந்துவிட்டது. அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
Comments
Post a Comment