17th of November 2013
சென்னை::கிளாப் போர்டு மூவிஸ் சார்பில் வினாயக் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் படம் 'மகாபலிபுரம்'. இந்தப் படத்தின் மூலம் இயக்குனர் சாண்டி இயக்குனராக அறிமுகமாகிறார். இவர், இயக்குனர் பூபதி பாண்டியனுடன் பல படங்களில் இயக்குனராக பணியாற்றியவர்.
கர்ணா, ரமேஷ், வெற்றி, வினாயக் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்க, விர்ட்டிகா, அஞ்சனா ராய் ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். இந்த படத்திற்காக ஒரு பாடல்காட்சியை படமாக்குவதற்காக ஆளில்லாத தனித்தீவுக்கு போன படக்குழுவினர் மாலையில் திரும்பி வரும்போது திடீரென சீறி எழுந்த அலைகளால் நடுக்கடலில் மிரண்டு தவித்து உயிர் தப்பியிருக்கிறார்கள்.
நிஜத்தில் நடந்த இந்த பரபரப்பு சம்பவம் குறித்து 'மகாபலிபுரம்' பட இயக்குநர் டான் சாண்டி கூறுகையில், "தமிழகத்தின் சுற்றுலா தலங்களில் மிக முக்கியமானது மகாபலிபுரம். இந்த இடத்தை சுற்றிலும் பல கிராமங்கள் இருக்கிறது. மகாபலிபுரத்தில் அங்கே வசிப்பவர்களும், அந்த இடத்தை சுற்றிப்பார்க்க நமது நாட்டு சுற்றுலா பயணிகளும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருவார்கள். ஒரே இடத்தில் பலதரப்பட்ட மக்களை அங்கே சகஜமாக பார்க்க முடியும்.
அப்படி வரும் பலதரப்பட்ட மக்களை பற்றிய கதைதான் 'மகாபலிபுரம்'. 5 பேர் இந்த கதையில் வலம் வருகிறார்கள். அங்கே படப்பிடிப்பு நடத்தவேண்டுமானால் தில்லியில்தான் அனுமதி வாங்க வேண்டும். ஏகப்பட்ட கண்டீஷன்கள் போடுவார்கள். அதையும் தாண்டி அனுமதி வாங்கி முழு படப்பிடிப்பையும் மகாபலிபுரத்திலேயே நடத்தியிருக்கிறோம்.
ஒரே ஒரு பாடல் காட்சிக்காக பாங்காங் போனோம். பாங்காங்கை சுற்றிலும் பல குட்டித்தீவுகள் இருக்கிறது. அதில் பல ஆளில்லாத தீவுகள். பகலில் மட்டும் அங்கே ஆட்கள் நடமாடுவார்கள். மாலை நெருங்கியதும் நாம் கரைதிரும்பி விட வேண்டும்.
அப்படி ஒரு ஆளில்லாத தீவில் பாடல் காட்சியை படமாக்கி முடித்து மாலையில் கரை திரும்ப படக்குழுவினர் அனைவரும் பெரிய படகில் கரைக்கு வந்துகொண்டிருந்தோம். நடுக்கடலில் படகு வரும்போது திடீரென ஏற்பட்ட கடல் சீற்றத்தால் அலைகள் வழக்கத்தைவிட மிக உயரமாக எழும்பி படகு பயங்கரமாக ஆடியது.
படக்குழுவில் இருந்த அனைவருமே பயத்தில் மிரண்டு விட்டோம். கரை திரும்ப முடியுமா என்பதே சந்தேகமாக இருந்தது, நல்லவேளை எப்படியோ சமாளித்து எந்த சிக்கலும் இல்லாமல் பத்திரமாக கரை திரும்பினோம்.
இது முழுவதும் திரில்லர் கலந்த காமெடி கதை. 46 நாட்களில் படத்தை முடித்திருக்கிறோம். படத்தின் கதை மகாபலிபுரத்தில் நடந்த கதைதான். படத்தை முடிக்கும்போது விழிபுணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒரு தகவலை சொல்லியிருக்கிறோம்." என்றார்.
முகமூடி', 'யுத்தம் செய்' படங்களின் இசையமைப்பாளர் கே இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளார்.
Comments
Post a Comment