21st of November 2013
சென்னை::இணைய தளங்களில் வெளிப்படையாக ரசிகர்களுடன் தொடர்பு கொள்ளும் நடிகைகள் அராஜக ரசிகர்களின் தாக்குதலுக்கு ஆளாவது அதிகரித்துள்ளது.கமல்ஹாசன் மகள் ஸ்ருதி ஹாசன் நேற்று முன்தினம் மும்பை வீட்டில் மர்ம நபர் ஒருவரால் தாக்குதலுக்கு ஆளானார். இதையடுத்து அவருக்கு ‘வெல்கம் பேக் படத்தின் தயாரிப்பாளர் தனியார் பாதுகாப்பாளர்களை நியமித்திருக்கிறார்.
நடிகைகளிடம் ரசிகர்கள் தவறாக நடக்கும் சம்பவங்கள் இதற்குமுன் பலமுறை நடந்திருக்கிறது.சினேகாவை சந்திக்க வந்த ரசிகர் ஒருவர் தன்னை தயாரிப்பாளர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். பின்னர் அவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் பின்தொடர்ந்து சென்று காதலிப்பதாக டார்ச்சர் செய்தார். அவர் மீது சினேகா போலீசில் புகார் செய்து பிரச்னைக்கு தீர்வு கண்டார்.
இதேபோல் நடிகை நமீதாவும் ரசிகர்களின் தொல்லைக்கு ஆளாகி இருக்கிறார். கடை திறப்பு, பொது நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்ளும்போது ரசிகர்கள் சூழந்துகொண்டு அவரிடம் சில்மிஷம் செய்திருக்கின்றனர். அப்போது போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைத்து நமீதாவை மீட்ட சம்பவம் நடந்திருக்கிறது.
அதேபோல் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஐதராபாத்தில் கடை திறப்பு விழாவுக்கு காஜல் அகர்வால் சென்றார். அப்போது கூடிய ரசிகர்கள் கூட்டம் அவரை முற்றுகையிட்டு நெருக்கி தள்ளினர். அப்போது சிலர் அவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த போலீசார் கூட்டத்தை கலைத்து காஜலை மீட்டனர்.
இதுபோல் பல்வேறு ஹீரோயின்கள் அத்துமீறும் சிலரின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது பற்றி திரையுலகினர் கூறும்போது,‘முன்பெல்லாம் இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததில்லை. தற்போது நடிகர், நடிகைகள் டுவிட்டர், பேஸ்புக் மூலம் நேரடியாக ரசிகர்களிடம் தொடர்பு கொள்வதுடன் தான் எங்கு இருக்கிறேன், என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதை வெளிப்படையாக தெரிவிக்கின்றனர்.
அந்த விவரத்தை அறிந்து கொள்ளும் ஒரு சில ரசிகர்கள் இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர் என்றனர்.
Comments
Post a Comment