2nd of November 2013
சென்னை::அமிதாப் பச்சனின் மருமகளும், பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய் நேற்று தனது 40 வது பிறந்த நாளை மும்பையில் கொண்டாடினார். புற்று நோயாளிகளுக்கு நன்கொடை வழங்கி தனது பிறந்த நாளை ஐஸ்வர்யா கொண்டாடினார்.
தனக்கு வாழ்த்துக்களை தெரிவித்த அனைவருக்கும் ஐஸ்வர்யா நன்றி தெரிவித்தார். தீபாவளியையொட்டி தனது பிறந்த நாள் வருவது ஒரு நல்ல பொருத்தம் என்று கூறிய ஐஸ்வர்யா, அதற்காக கடவுளுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். தனக்கு உயிர் கொடுத்த பெற்றோருக்கும் அவர் நன்றி கூறினார். இது குறித்து கூறிய அவர், ஒவ்வொரு ஆண்டும் பிறந்த நாளை முன்னிட்டு நோயாளிகளுக்கு உதவி செய்து வருகிறேன். அதே போல் இந்த ஆண்டும் புற்று நோயாளிகளுக்கு நன்கொடை தந்து பிறந்த நாளை கொண்டாடினேன் என்றார்.
வாழ்க்கையில் அர்த்தத்தோடு எதையும் செய்ய வேண்டும் என்று என்னுடைய பெற்றோர் எனக்கு கற்றுத் தந்தார்கள். அவர்களது போதனையை ஏற்று பல உதவிகளை செய்து வருகிறேன் என்றும் ஐஸ்வர்யா ராய் உணர்ச்சிபூர்வமாக தெரிவித்தார். தனது 17 வயதில் ஒரு மாடலாக வாழ்க்கையை தொடங்கிய ஐஸ்வர்யா நாளடைவில் உலக அழகி பட்டம் பெற்றார். ஜீன்ஸ் படத்தில் நடிகர் பிரசாந்துடன் ஜோடி சேர்ந்து நடித்த இவர், பல ஆண்டுகள் கழித்து சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் எந்திரன் படத்தில் ஜோடியாக நடித்து புகழ் பெற்றார்.
கடந்த 2007 ம் ஆண்டு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை ஐஸ்வர்யா ராய் கரம் பிடித்தார். இவர்களுக்கு ஆராத்யா என்ற ஒரு மகள் உண்டு. ஆராத்யா என்றால் இந்த உலகமே தனக்கு சொந்தம் என்று பொருளாம். இவருடைய பிறந்த நாளான நேற்று ஐஸ்வர்யாவின் மகள் ஆராத்யா அம்மாவுக்காக ஒரு பாட்டு பாடினாராம். அதை பற்றி பெருமையாக குறிப்பிட்டார் ஐஸ்வர்யா. சமுதாய சேவையிலேயே தனக்கு முழு நம்பிக்கை உண்டு என்று குறிப்பிட்ட ஐஸ்வர்யா தனக்கு வாழ்த்து சொன்ன அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்தார்.
Comments
Post a Comment