3rd of November 2013
சென்னை::'ஆல் இன் ஆல் அழகுராஜா' படத்துக்கு வரிவிலக்கு வழங்கியது தொடர்பாக பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
நடிகர்கள் கார்த்தி, சந்தானம் உள்ளிட்டோர் நடித்த 'ஆல் இன் ஆல் அழகுராஜா' படத்துக்கு வழங்கப்பட்ட வரி விலக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவர் ஆர்.சிங்காரவடிவேலன் (வயது 48) என்பவர் தாக்கல் செய்த அந்த மனுவில், 'ஆல் இன் ஆல் அழகுராஜா படம் வர்த்தக நோக்குடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு தமிழில் பெயர் வைக்கப்படும் திரைப்படங்களுக்கும், தமிழ் வளர்ச்சி மற்றும் கலாசாரத்தை வளர்க்கும் விதமான திரைப்படங்களுக்கும் வரி விலக்கு அளித்து வருகிறது. பத்திரிகை, டி.வி.களில் வெளியாகும் விளம்பரங்களிலும், சாலையோரங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களிலும் 'ஆல் இன் ஆல் அழகுராஜா' என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் படத்தின் பெயரை 'அழகுராஜா' என்று குறிப்பிட்டு, தமிழக அரசிடம் வரி விலக்கு பெறப்பட்டுள்ளார்.
வரி விலக்கு சலுகை வழங்கப்படவில்லை என்றால், இந்த படத்தின் தயாரிப்பாளர் ரூ.18 கோடியை அரசுக்கு வரியாக செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், படத்தின் தலைப்பை மாற்றி, அரசை ஏமாற்றி தயாரிப்பாளர் வரி விலக்கை பெற்றுள்ளார். இதனால், தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே, இந்த படத்துக்கு வரிவிலக்கு அளித்து தமிழக அரசு 29–10–2013 அன்று பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யவேண்டும். இந்தப் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும். இந்த வழக்கு தொடர்பாக தகுந்த உத்தரவினை பிறப்பிக்க வேண்டும்" என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பொது நல மனுவை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நிதிமன்றம், இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக தலைமை செயலாளர், வணிக வரித்துறை கமிஷனர், தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. பின்னர், இம்மனு மீதான விசாரணையை இம்மாதம் 7-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
Comments
Post a Comment