26th of November 2013
சென்னை::2014 பொங்கல் போட்டி களத்தில் அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய படங்கள் மட்டும்தான் முதலில் இருந்தது என்னமோ உண்மை.
ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் திடீரென ரஜினியின் கோச்சடையான் படமும் இந்த போட்டி களத்தில் குதித்தது. ஜனவரி 10-ந்தேதி கோச்சடையான் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இப்படி ஒரே சமயத்தில் மூன்று பிரபலங்கள் படங்கள் வெளியாவது என்பது ரசிகர்களுக்கு வேண்டுமானால் மகிழ்ச்சியளிக்கக் கூடிய விஷயமாக இருந்தாலும் விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்களுக்கு பெரிய தலைவலியாக இருந்தது.
காரணம், இது வசூல்ரீதியாக பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் தியேட்டர் ஒதுக்குவதிலும் குழப்பதை உண்டு பண்ணியது. இந்நிலையில் ‘கோச்சடையான்’ படத்தை தனியாக களம் இறக்கினால் நன்றாக இருக்கும் என யோசித்து வருகிறார்களாம்.
ரஜினி படம் ரிலீஸாவது என்பதே ஒரு திருவிழா கொண்டாட்டம் மாதிரிதான். அந்த நேரத்தில் மற்ற பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸானால் அந்தக் கொண்டாட்டத்தை பாதியிலேயே மறைத்துவிட வாய்ப்பு இருக்கிறது.
இருந்தாலும், ஆடியோ ரிலீஸ் நடக்க இருக்கும் ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி எது உண்மை என்பது தெரிந்துவிடும்.
Comments
Post a Comment