11th of November 2013
சென்னை::தீபாவளிக்குத் திரையிடப்பட்ட பாண்டிய நாடு வெற்றிப் படமாக அமைந்துள்ளது. இதேபோல், பொங்கல் அல்லது அதற்கு முன்பே திரையிடப்படவுள்ள மதகஜராஜாவும் வெற்றிப் படமாக அமையும் என்று நடிகர் விஷால் கூறினார்.
பாண்டிய நாடு திரையிடப்பட்ட திரையரங்குகளில் ரசிகர்களைச் சந்திப்பதற்காக வேலூருக்கு ஞாயிற்றுக்கிழமை அவர் வந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியது:
தமிழகத்தில் பாண்டிய நாடு திரையிடப்பட்ட திரையரங்குகள் அனைத்திலும் பார்வையாளர்கள் நிறைந்தக் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் கூடுதலாக 72 திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது. எனது திரைப்பட வாழ்க்கையில் முக்கியமான படமாக இதை கருதுகிறேன்.
இந்தப் படம் முழுமையான வெற்றி அடைந்துள்ளதற்காக ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும், திரைப்பட இயக்குநர் சுசீந்திரனுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாண்டிய நாடு திரையிடப்பட்டுள்ள திரையரங்குகள் அனைத்துக்கும் சென்று வர ஆசைப்படுகிறேன். கடலூர், சிதம்பரம், புதுச்சேரி, திருவண்ணாமலை மாவட்டங்களுக்குச் சென்றுள்ளேன். இப்போது வேலூர் மாவட்ட திரையரங்குகளுக்கு வந்துள்ளேன். இதையடுத்து, கோவை, திருச்சி, திருநெல்வேலி மாவட்டங்களுக்குச் செல்லவுள்ளேன்.
ஏப்ரலில் "நான் சிவப்பு மனிதன்' திரையீடு: எனது அடுத்தப் படம் "நான் சிவப்பு மனிதன்'. இத்திரைப்படத்தை வரும் ஆண்டு ஏப்ரல் 11-ல் திரையிட திட்டமிட்டுள்ளோம்.
மதகஜராஜா திரைப்படத்தை டிசம்பர் அல்லது ஜனவரியில் திரையிடுவதற்கு முயற்சித்து வருகிறோம் என்றார் விஷால். இதையடுத்து, இயக்குநர் சுசீந்திரன் கூறுகையில், விஷால் நடிக்கும் மற்றொரு படத்தைத் தயாரிக்கும் வாய்ப்புக்கு காத்திருக்கிறேன் என்றார்.
Comments
Post a Comment