23rd of November 2013
சென்னை::திருமணம் செய்து கொள்வதாகக் கூறி நடிகையிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்த நபரைக் கைது செய்யுமாறு காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை புகார் அளிக்கப்பட்டது.
சென்னை, சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் ராதா (30). இவர் சுந்தரா டிராவல்ஸ்,
காத்தவராயன், மானஸ்தன், அடாவடி உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு படவாய்ப்புகள் இல்லாத நிலையில் வெள்ளிக்கிழமை காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு வந்த அவர், பரபரப்புப் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஒருவர், தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டதாகவும், ரூ.50 லட்சம் பணம், நகைகளை மோசடி செய்து விட்டதாகவும் புகார் தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் ராதா கூறியது:-
கடந்த 2008-ல் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பைசூல் என்பவர் எனக்கு அறிமுகமானார். தான் ஒரு வைரவியாபாரி என்றும், விரைவில் ஒரு புதுப்படம் தயாரிக்க உள்ளதாகவும் என்னிடம் தெரிவித்தார்.
அதில் என்னை கதாநாயகியாக நடிக்க வைப்பதாகவும் கூறினார். இது தொடர்பாக அவர் அடிக்கடி என்னைச் சந்தித்து வந்தார். சில மாதங்களுக்குப் பிறகு அவர் என்னை மிகவும் நேசிப்பதாகவும், என்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறினார்.
இதை நம்பி நானும் அவருடன் பழகி வந்தேன். இந்நிலையில் தனக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும், அதனை ஈடுகட்ட பணம் தேவைப்படுவதாகவும் என்னிடம் கூறினார். அதிலிருந்து மீண்ட பிறகுதான் திருமணம் செய்து கொள்ள முடியும் என்று பைசூல் கூறினார்.
இதனால், என்னிடம் இருந்த ரூ.40 லட்சத்து 50 ஆயிரம் பணம் மற்றும் தங்க நகைகளை அவரிடம் கொடுத்தேன். அதன் பிறகும் அவர் என்னைத் திருமணம் செய்யத் தயங்கியதால் சந்தேகமடைந்து அவரைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினேன்.
அப்போது தான் பைசூலுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்ட விஷயம் எனக்குத் தெரிந்தது. மேலும் அவர் சட்ட விரோதமான தொழில்களில் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்தது.
இது குறித்து அவரிடம் கேட்ட போது எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். எனவே பைசூல் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எனது பணத்தை மீட்டுத் தரவேண்டும் என்று நடிகை ராதா தெரிவித்தார்.
Comments
Post a Comment