பாடல் காட்சியில் நடித்தது நான் இல்லை என்று சொல்லத் தயாரா? நஸ்ரியாவுக்கு சற்குணம் சவால்!!!

8th of October 2013
சென்னை::நய்யாண்டி  திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் நஸ்ரியா ஒரு பாடல் காட்சியில் தனக்கு பதில் வேறு ஒரு பெண்ணை வைத்து முழு பாடலையும் எடுத்திருப்பதாகவும், அந்த பாடல் காட்சி மிகவும் கவர்ச்சியாக காட்டப்பட்டிருப்பதாகவும் புகார் அளித்துள்ளார்.
 
இதுகுறித்து விளக்கம் அளித்த அப்படத்தின் இயக்குநர் சற்குணம், 'இனிக்க இனிக்க...’ பாடல் காட்சியில் நான் எந்த இடத்திலும் டூப்பை பயன்படுத்தவில்லை. அதில் நடித்திருப்பது நஸ்ரியாதான், வேறு யாரும் இல்லை என்று கூறியுள்ளார்.
 
மேலும் அவர் கூறுகையில், படத்தை எடிட்டிங் செய்யும் போது ஒரு காட்சியில் க்ளோஸ் அப் ஷாட் தேவைப்பட்டது. இதற்காக அவரை அழைத்த போது, "நான் கேரளாவில் இருந்து வரமுடியாது; வேறு யாரையாவது வைத்து  எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார். தற்போது டிரைலரில் வரும் அந்த க்ளோஸ் அப் ஷாட் உறுத்தலாக இருந்தால் அதை நீக்கவும் தயார். ஆனால் நஸ்ரியாவால் மீடியா நண்பர்களுடன் அமர்ந்து படம் பார்த்து விட்டு, பாடல் காட்சி முழுவதும் நான் நடிக்கவில்லை என்று சொல்ல முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
 
மேலும் இந்தப் படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது என்பதையும் தான் கூறிக்கொள்ள விரும்புவதாக அந்தப் படத்தின் இயக்குநர் சற்குணம் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Comments