14th of October 2013
சென்னை::தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் வாங்கிய கடனை திருப்பித் தராததால், அவர் தயாரித்துள்ள "ஆரம்பம்' திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை, ஷெனாய் நகரைச் சேர்ந்த பி.ராஜேஸ்வரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: எனது மகன் பி.ஆனந்தகிருஷ்ணன் சார்பில் இந்த மனுவை நான் தாக்கல் செய்துள்ளேன். சினிமா தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் கடந்த 2005-ஆம் ஆண்டு மே மாதம் 11-ஆம் தேதி, "கேடி' என்ற திரைப்படத்தைத் தயாரிப்பதற்காக எனது மகனிடமிருந்து ரூ. 1.50 கோடி கடன் வாங்கினார்.
இந்தப் பணத்தை 2006-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருப்பித் தருவதாக அவர் வாக்குறுதி அளித்தார். ஆனால், அவர் கூறியபடி பணத்தை திருப்பித் தரவில்லை.
தற்போது நடிகர்கள் அஜித், நயன்தாரா, ஆர்யா உள்பட பலர் நடித்துள்ள "ஆரம்பம்' திரைப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார். வரும் தீபாவளியன்று இந்தப் படத்தை வெளியிடப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், என் மகனிடம் இருந்து வாங்கிய கடன் ரூ. 1.50 கோடி மற்றும் அதற்குரிய வட்டித் தொகையுடன் சேர்த்து ரூ. 4.60 கோடி தரவேண்டும் என அக்டோபர் 5-ஆம் தேதி அவருக்கு நோட்டீஸ் அனுப்பினோம். அந்த நோட்டீஸூக்கு இதுவரை பதில் அளிக்கவில்லை.
அதனால், என் மகனிடம் வாங்கிய கடனை திருப்பித் தராமல் "ஆரம்பம்' படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
மனுதாரர் சார்பில் வழக்குரைஞர்கள் நித்தேஷ் நட்ராஜ், வைபவ் ஆர்.வெங்கடேஷ் ஆகியோர் ஆஜராகினர்.
இந்த மனு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்கு இரண்டு வாரத்துக்குள் பதில் அளிக்க ஏ.எம்.ரத்னத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை அக்டோபர் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Comments
Post a Comment