நேற்று நஸ்ரியா…இன்று சரண்யா மோகன்…நாளை யாரோ?!!!

24th of October 2013
சென்னை::நேற்று நஸ்ரியா…இன்று சரண்யா மோகன்…நாளை யாரோ ? என்ற விதத்தில்தான் மலையாளத் திரையுலகில் இருந்து வரும் நடிகைகள் நினைக்க வைக்கிறார்கள்.
 
நய்யாண்டி’ படத்தில் என்னை ஆபாசமாக காட்ட முயற்சித்தார் என அந்த படத்தின் நாயகி நஸ்ரியா இயக்குனர் சற்குணம் மீது காவல் துறையிடம் புகார் அளித்து, பின்னர் சமாதனமாகிப் போனார்.
 
அடுத்து ‘கோலகலம்’ என்ற படத்தின் நாயகியான சரண்யா மோகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு விமான டிக்கட், நட்சத்திர ஹோட்டலில் தங்கும் வசதி ஆகியவற்றை அப்படத்தின் தயாரிப்பாளர் செய்து கொடுத்தும், கடைசி நிமிடத்தில் வர முடியாது என்று சொல்லிவிட்டார் என அப்படத்தின் தயாரிப்பாளரே விழா மேடையில் கூறுமளவிற்கு நடந்து விட்டது.
 
இதன் மூலம் இனி விழாவுக்கு வராத நடிகைகள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி முடிவெடுக்க இருக்கிறோம் என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார்  சொல்ல வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டார்கள்.
 
முன்பெல்லாம் திரையுலகில் பணத்தை முதலீடு செய்யும் தயாரிப்பாளர்களை முதலாளிகளாகப் பாவித்த மரியாதை இருந்தது. ஆனால், இன்று தயாரிப்பாளர்கள் அவர்களிடம் கெஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளதற்கு யார் காரணம் ?
 
ஒரு பக்கம் இம்மாதிரியான நடிகையர் வேண்டாம் என ஒரு சிலர் மறுத்தாலும், மறு பக்கம் வேறு சிலர் அவர்களை புதிய படங்களில் ஒப்பந்தம் செய்வதும் நடந்து வருகிறது.
 
நாளை, வேறு யாராவது பிரச்சனை ஏற்படுத்தும் வரை இதைப் பற்றி யாருமே பேசாமல்தான் இருப்பார்கள்.

Comments