சவாலான எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் நடிக்க தயார்: ஜெயம் ரவி!!!

16th of October 2013
சென்னை::திரை உலகில் பொதுவாக போலீஸ் அதிகாரியாக பெரும்பாலான படங்களில் நடிப்பவர்களுக்கு ஒரு போலீஸ் அதிகாரிக்கான இமேஜ் உண்டாகி விடும் . அதை போலவே தன்னுடைய 15 படங்களில் நான்கு படங்களில் விளையாட்டு வீரராக நடித்து வருபவர் ஜெயம் ரவி. (தாஸ் படத்தில் கால் பந்தாட்ட வீரராக , குமரன் சன் ஒப் மகாலட்சுமி படத்தில் குத்து சண்டை வீரனாக , பேராண்மை படத்தில் என் சி. சி. பயிற்சியாளராக , தற்போது முடியும் தருவாயில் உள்ள பூலோகத்தில் குத்து சண்டை வீரர்) என பெரும்பாலும் இத்தகைய கதாபாத்திரத்தில் நடித்து வருவதால் அவருக்கு ஒரு விளையாட்டு வீரருக்கான இமேஜ் உருவாகி இருக்கிறது.

இதை பற்றி ஜெயம் ரவி கூறுகையில், "எனக்கு சிறு வயதில் இருந்தே விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் அதிகம். அந்த ஆர்வம் என்னுள் தணியாத ஊக்கத்தையும், ஒழுக்கத்தையும் கற்று தந்தது என்றால் மிகை ஆகாது. நான் என்னுள் ஒரு விளையாட்டு வீரன் இருப்பதை உணருகிறேன். ஒரு விளையாட்டு வீரனுடைய மன நிலையில் தான் நான் வெற்றி தோல்வி இரண்டையும் எதிர் கொள்கிறேன். இந்த பக்குவத்துக்கு என்னுடைய விளையாட்டு ஆர்வம் மிகவும் உதவியது. விளையாட்டு துறைக்காகவும், விளையாட்டு போட்டியாளர்களை ஊக்குவிக்கவும் என்னுடைய  கணிசமான நேரத்தையும், சக்தியையும்  செலவிட இருக்கிறேன்.

எனக்கு பெரும்பாலான படங்களில் விளையாட்டு வீரனாக பாத்திரம் அமைவது திட்டமிடப்பட்டது அல்ல. நான் எனக்கு சவாலான எந்த பாத்திரத்தையும் ஏற்று நடிக்க தயாராகவே உள்ளேன். தற்போது நடித்து வரும் சமுத்திரகனியின் இயக்கத்தில் உருவாகும் 'நிமிர்ந்து நில்' மற்றும் கல்யான் இயக்கத்தில் உருவாகும் 'பூலோகம்' ஆகிய இரு படங்களிலும் எனக்கு சவாலான பாத்திரங்களே. அவை ரசிகர்களை நிச்சயம் கவரும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை." என்றார்.

Comments