அன்று பார்த்த அதே ரஜினிகாந்த் இன்றும்: கமல் பாராட்டு!!!

5th of October 2013
சென்னை::அன்று பார்த்த அதே ரஜினிகாந்த்தே இன்று இருக்கிறார். அன்று தொட்டு இன்று வரை எங்கள் நட்பு இன்னும் மாறவில்லை என்று 16 வயதினிலே டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ரஜினிக்கு கமல் பாராட்டு தெரிவித்தார்.
 
16 வயதினிலே டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கமலஹாசன் பங்கேற்று பேசியதாவது:_
 
16 வயதினிலே அப்போது பெரிய வெற்றி படமாக அமைந்தது. 36 வருடங்கள் கழித்து அந்த படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய இங்கே விழா எடுக்கப்படுகிறது. 16 வயதினிலே அற்புதமான படம். அதில் நடித்த எல்லோரும் சிறப்பாக நடித்து இருந்தார்கள். அதை மீண்டும் நினைவூட்டுவது போல் இவ்விழா இருக்கிறது. இந்த படத்தில் இருந்த எல்லோருமே வெற்றி கண்டு இருக்கிறார்கள்.
 
இளையராஜா இசை சிறப்பாக இருந்தது. நவீன தொழில் நுட்பங்கள் இல்லாத காலத்திலேயே 'ஸ்லோ மோஷன்' காட்சி இப்படத்தில் இருந்தது. தயாரிப்பாளர் எல்லாவற்றையும் கொட்டி இந்த படத்தை எடுத்தார்.
இப்படத்தின் முதல் நாயகன் பாரதிராஜாதான். படம் எடுத்தபோது சிலர் எதிர்மறை கருத்துக்கள் சொன்னார்கள். தயாரிப்பாளர் நிலையை நினைத்து பயந்தேன். ஆனால் படம் வெற்றி பெற்றது. அதை மீண்டும் ரிலீஸ் செய்ய நடக்கும் இது போன்ற விழா அரிதான ஒன்று.
 
துவக்கத்தில் நானும் ரஜினியும் நிறைய படங்களில் ஒன்றாக நடித்தோம். பிறகு முதலீடு காரணமாக பிரிந்தோம். ரஜினி ஆரம்ப காலத்தில் எங்கு தங்கினார் என்று தெரியாது. ஒரு படம் முடிந்ததும் வேறு படத்துக்கு போக வேண்டி வரும். வண்டியிலேதான் தங்கினாரா என்று நினைக்க தோன்றியது. 16 வயதினிலே படத்தில் நடித்தபோது எங்களுக்கு சில ஆயிரங்கள்தான் சம்பளம் கிடைத்தது. அப்போது ரஜினி எப்படி இருந்தாரோ அப்படித்தான் 10 வருடங்களுக்கு முன்பும் இருந்தார். இன்றும் அப்படியே தான் இருக்கிறார்.
 
இடைத்தரகர்கள் பலர் இருந்தும் எங்கள் நட்பு அப்படியே இருக்கிறது. இதற்கான பெருமை எங்கள் இருவரையுமே சாரும். நான் உங்களுக்கு செய்த நட்பு நீங்கள் செய்த அன்பின் பலம். இந்த விழாவில் இளையராஜாவும் ஸ்ரீதேவியும் பங்கேற்று இருந்தால் சந்தோஷமாக இருந்து இருக்கும். அவர்கள் சார்பில் நாங்கள் வந்து இருக்கிறோம். எனக்கு நல்ல நண்பர்களும் ரசிகர்களும் இருக்கிறார்கள். இவ்வாறு கமல் பேசினார்.

Comments