29th of October 2013
சென்னை::தலைப்பைப் பார்த்துவிட்டு எந்த இயக்குநர் இந்த துஷ்ட வேலையில் ஈடுபட்டார் என்று பட்டியல் போடும் வரை போய்விட வேண்டாம். விஷயம் இதுதான்..!
இந்தியில் வெற்றிகரமாக ஓடிய ‘கஹானி’ படத்தின் தெலுங்கு மற்றும் தமிழ் ரீமேக்கான ‘அனாமிகா’ வை டோலிவுட்டின் முன்னணி இயக்குநர் ‘சேகர் கம்முலா’ எடுத்துக் கொண்டிருப்பது தெரிந்த விஷயம்தானே..? முன்னதில் வித்யாபாலன் ஏற்றிருந்த ஹீரோயின் வேடத்தில் பின்னதில் நயன்தாரா நடிக்க, எதிர்பார்ப்பு ஏறிக் கொண்டது ‘அனாமிகா’ மீது.
சேகர் கம்முலா’ இந்தப்படம் பற்றி வாயைத் திறக்கவில்லை என்றாலும், படம் பற்றி ஏராளமான தகவல்கள் இன்டஸ்ட்ரியை வலம் வர ஆரம்பித்துவிட்டன. அதில் முக்கியமான விஷயமாக சொல்லப்படுவது இந்திப் படத்தின் கலைத்தன்மையை குறைத்து ரீமேக்கில் கமர்ஷியலாக்கி விட்டார் சேகர் என்பதுதான்.
மூலப்படமான ‘கஹானி’யில் வித்யாபாலன் ஒன்பது மாத கர்ப்பத்தை வயிற்றில் தாங்கித் தன் காதலனைத் தேடி வருவது போல நடித்திருப்பார். இதிலும் நயன்தாரா அப்படி கர்ப்பம் சுமக்கப் போகிறார் என்றுதான் எல்லோருமே எதிர்பார்த்தார்கள். ஆனால், அந்த கர்ப்பத்தை கலைத்துவிட்டராம் இயக்குநர் சேகர்.
அந்தப் படத்தை அப்படியே பணக்காரக் களத்தில் மாற்றி இதில் நயன்ஸ், கர்ப்பமெல்லாம் இல்லாமல் தன் காதலனை ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், காஸ்ட்லியான பப்புகள், இரவு விடுதிகளில் தேடுவது போல மாற்றி இருக்கிறார் சேகர் என்கின்றன தகவல்கள். எல்லாம் நயன்ஸுக்குக் கொடுக்கப்பட்ட சம்பளம், ஜீரணம் ஆக வேண்டுமே என்ற கவலையில்தான்.
நய்ன்ஸை கர்ப்ப ஸ்த்ரீயாகப் பார்த்து ரசிகர்களுக்கு அஜீரணம் ஏற்பட்டால் சுமக்கும் துன்பச் சுமையைக் காட்டிலும், நயன்ஸ் சுமக்கவிருந்த கர்ப்பத்தை முன்னரே கலைத்து விடுவது நல்லது என்று நம்பியிருக்கலாம் சேகர். அது உண்மைதானா, அவர் எடுத்த முடிவு சரிதானா என்பது இன்னும் ஒரு மாதத்தில் தெரிந்துவிடும்.
ஆமாம்… படத்தை டிசம்பரில் ‘டெலிவரி’ கொடுத்து விடுவாராம் சேகர் கம்முலா.
Comments
Post a Comment