திரை விமர்சனம்: ***நய்யாண்டி***!!!

16th of October 2013
சென்னை::சற்குணம் இயக்கியப் படமா இது! என்று ரசிகர்கள் ஆச்சரியத்துடனும், ஆழ்ந்த அனுதாபத்துடனும் வருகிறார்கள் தியேட்டரை விட்டு. அந்த அளவுக்கு கமர்ஷியல் படம் எடுக்கிறேன் என்று, ரசிகர்களை கதறச்செய்கிறது சற்குணத்தின் இந்த 'நய்யாண்டி'.

தனுஷின் மூத்த அண்ணனுக்கு 40 வயது, இளைய அண்ணனுக்கு 38 வயது. இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. ஆனால், கடைகுட்டியான நம்ம ஹீரோ தனுஷுக்கு மட்டும் 26 வயது. (இரண்டு பிள்ளைகளுக்குப் பிறகு சிறு இடைவெளிக்குப் பிறகு தனுஷ் பிறக்கிறாராம். அதுதான் இந்த வயது வித்தியாசம்)
அண்ணன்கள் இருவருக்கும் திருமணம் ஆகவில்லை என்றாலும், தனுஷுக்கு, எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நஸ்ரியாவுடன் காதல் கை கூடுகிறது. அண்ணன்களுக்கு திமணமான பிறகே தனக்கு திருமணம் என்ற முடிவில் இருக்கும் தனுஷ், சூழ்நிலை காரணமாக நஸ்ரியாவை திருமணம் செய்துகொள்கிறார்.

திருமணத்தைப் பற்றி தனது வீட்டில் மறைக்கும் தனுஷ், தனது வீட்டில் நஸ்ரியாவை அனாதை என்று சொல்லி வேலைக்கு சேர்க்கிறார். மறுபுறம் நஸ்ரியாவுக்கு ஏற்பாடு செய்து வைத்திருந்த வில்லன் மாப்பிள்ளை நஸ்ரியாவை தேடுகிறார். இறுதியில் வில்லன் மாப்பிள்ளையிடம் இருந்து நஸ்ரியா எப்படி தப்பித்தார். தனுஷ் பெற்றொருக்கு திருமண விஷயம் தெரிந்ததா இல்லையா என்பதுதான் மீதிக்கதை.

ஹீயோயிசத்தை மையமாக வைத்து கமர்ஷியல் படம் எடுக்கும் இயக்குநர்கள், ஹீரோயிசம் இல்லாமல் ஒரு வித்தியாசமான படம் எடுக்கிறேன் என்று கூறி எடுத்தப் படங்கள் கூட நன்றாக இருக்கும். ஆனால், ஹீரோயிசம் என்றால் என்ன என்பதே தெரியாமல், கதையையும், திரைக்கதையையும் மட்டுமே நம்பி படம் எடுக்கும் இயக்குநர்கள் தீடீரென்று ஹீரோயிசம் உள்ள படங்களை இயக்கினால், எப்படி ஏரியாவே ரனகளப்படும் என்பதை சற்குணம் தனது நய்யாண்டி மூலம் ரொம்ப நல்லாவே காண்பித்துள்ளார்.

கிணற்றை தாண்டி புறா பிடித்துக்கொண்டே ஹீரோ அறிமுகம் என்று தொடங்கி, ஒரு பணைமரத்தில் இருந்து மற்றொரு பணை மரத்தை தாண்டுவது என்று, சுள்ளான் தனுஷை மீண்டும் நமக்கு ஞாபகப்படுத்த முயற்சித்துள்ள சற்குணம், அதே சமயம் தனது கிராமத்து காமெடியையும் சேர்த்து, ஒரு கட்டத்தில் எதை எங்கு, எப்படி சொல்ல வேண்டும் என்பதையே மறந்து புலம்பியிருக்கிறார்.

தனுஷ், எப்போதும்போல காமெடி, நடனம், காதல் என்று தனது வேலையை ரொம்பவே சிறப்பாகவே செய்துள்ளார். இந்திப் படத்திற்குப் பிறகு ஓய்வு எடுக்க நினைத்து, சரி அதற்கு பதில் இந்த படத்தில் நடிக்கலாம் என்று நினைத்து தனுஷ் இந்த படத்தை தேர்வு செய்திருப்பார் போல, அந்த அளவுக்கு ரொம்ப சாதரணமாக நடித்துள்ளார்.

நஸ்ரியா நேரம் படத்தில் கொஞ்ச நேரம் நடித்தார். அதன்பிறகு ராஜா ராணியில் கொஞ்சம் நேரம் நடித்தார். இந்த படத்தில் தான் முழு நேரமும் நடித்துள்ளார். அழகு இருக்கும் அளவுக்கு நஸ்ரியாவிடம் நடிப்பு இருக்காது போலிருக்கிறதே!

இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு என்ன ஆனது என்றே புரியவில்லை. அந்த அளவுக்கு புரியாத வகையில் பாடல்களை கொடுத்துள்ளார்.

கமர்ஷியல் படங்களின் பலமே பாடல்களும், நகைச்சுவையும், சண்டைக்காட்சிகளும் தான். ஆனால் இயக்குநர் சற்குணம் அந்த மூன்றையுமே தொலைத்துவிட்டார். படத்தில் ஒரே ஒரு ஆறுதல் என்றால், அது ஸ்ரீமன், சத்யன் ஆகியோர் இடம்பெறும் காட்சிகள் தான். மற்றபடி நய்யாண்டியால் தயாரிப்பாளர் கதிரசேசன் போண்டியாகத்தான் போகிறார்.

Comments