கதாநாயகர்களுக்கு இணையான கலகலப்பு நாயகர்கள்!!!

8th of October 2013
சென்னை::ஆரம்பகால படங்களில் தமிழும் சமஸ்கிருதமும் கலந்த மணிப்பிரவாள நடையிலான வசனமாக இருந்தாலும், அதனைத் தொடர்ந்து தெள்ளுத் தமிழில் துள்ளி விளையாடிய வசனங்களாக இருந்தாலும் இரண்டையுமே நாடக பாணியில் பேசுவதுதான் நாயக-நாயகிகளின் வழக்கம். ஆனால், மக்கள் பேசும் நடையில் இயல்பாக வசனம் பேசியவர்கள் நகைச்சுவை நடிகர்கள்தான். கதாநாயகர்களுக்கு எந்தவிதத்திலும் திறமையில் குறைவில்லாத நகைச்சுவை நடிகர்களின் பங்கு தமிழ்த்திரை வரலாற்றில் தனி முத்திரை பதித்துள்ளது.
 டி.எஸ்.பாலையா :
 
வசனத்தை காட்சிக்கேற்ற ஏற்றத்தாழ்வுடன் உச்சரிப்பதில் மட்டுமின்றி, அதற்கேற்ற உடலசைவுகளாலும் ரசிகர்களைக் குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைத்தவர் திருநெல்வேலிக்காரரான டி.எஸ்.பாலையா. 
 

அமெரிக்காவிலிருந்து இங்கு வந்து தமிழ்ப்படங்களைத் தந்த எல்லீஸ் ஆர் டங்கனின் இயக்கத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்டோர் அறிமுகமான ‘சதி லீலாவதி’தான் பாலைய்யாவுக்கும் முதல் படம். குணசித்திர வேடம், வில்லன் பாத்திரம், நகைச்சுவை நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட நடிகராகத் தமிழ்த் திரையில் தன் தடத்தை அழுத்தமாகவே பதித்தார் பாலைய்யா.

ஏழை படும்பாடு, ஓர் இரவு, அம்பிகாபதி, மதுரைவீரன், ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் எனப் பல படங்களில் தன் நடிப்பின் பன்முகத்தைக் காட்டிய பாலைய்யாவின் நகைச்சுவை நடிப்பை ‘தில்லானா மோகனாம்பாள்’, ‘காதலிக்க நேரமில்லை’, ‘பாமா விஜயம்’ உள்ளிட்ட பல படங்களில் தமிழக மக்கள் ரசித்தனர். தில்லானா மோகனாம்பாள் படத்தில், அச்சுஅசல் நாதசுரக் கலைஞராக நடிகர் திலகம் சிவாஜி எந்தளவுக்கு சிறப்பாக நடித்திருந்தாரோ அதே அளவிற்கு ஒரு தவில் வித்வானாகத் தன் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் பாலையா. அத்துடன் நகைச்சுவையிலும் அசத்தியிருப்பார். 
 
படத்தில் இடம்பெறும் ரயில் பயணக் காட்சியில், ”ஆட்டம் ரொம்ப ஜாஸ்தியா இருக்கே” என்றபடி பாலைய்யா செய்யும் ரகளைகள் ரயில் பெட்டியைப் போலவே ரசிகர்களையும் குலுங்கக் குலுங்க சிரிக்க வைத்தது. பத்மினியுடன் நேரத்தை செலவிடவேண்டும் என்பதற்காக, சிவாஜி, “நான் திருவாரூரில் இறங்கிக்குறேன்” என்பார். ஏனென்று சக கலைஞர்கள் கேட்க, “அங்கே ஒரு சோடா கடைக்காரனைப் பார்க்கணும்” என்பார் சிவாஜி எரிச்சலாக. உடனே  பாலைய்யா, “நானும் அங்கேயே இறங்கிக்குறேன். நான் ஒரு பீடா கடைக்காரனைப் பார்க்கணும்” என்று பதிலடி கொடுப்பார். 

காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ், தான் எடுக்கப் போகும் சினிமாவின் கதையை விளக்கும்போது அதற்கு பாலைய்யா கொடுக்கும் உணர்ச்சி பாவங்களும், வெளிப்படுத்தும் உடல்மொழியும் மாஸ்டர் பீஸ். அந்தப் படத்தின் கதாநாயகன் பெயர் அசோகன் (ரவிச்சந்திரன்). அவர் சாதாரண ஆள் என அலட்சியப்படுத்தி ஒருமையில் பேசுவார் பாலைய்யா. அந்த அசோகனுக்குத் தான்தான் அப்பா என ஒரு பெரிய பணக்காரர் வந்து சொன்னதும் “அசோகர் உங்க மகரா?” என்று மகனுக்குக்கூட ‘ர்’ விகுதி போட்டு மரியாதையுடன் பாலைய்யா உச்சரிக்கும் இடம் டாப் க்ளாஸ்.

திருவிளையாடல் படத்தில் ஹேமநாத பாகவதர் எனும் இசை வித்வானாக அவர் காட்டிய ஜபர்தஸ்ஸூம், பாண்டிய மன்னன் அவையில் போட்டி போட முடியாது எனப் புரிந்துகொண்டு மூட்டை கட்டுவதும் அபாரம். பாமா விஜயம் படத்தில் நடுத்தர வர்க்கத்து வீட்டை நிர்வாகிக்கும் பெரியவராக நகைச்சுவையும் பொறுப்புணர்வும் கலந்த பாலைய்யாவின் நடிப்பும், அந்தப் படத்தில் அவர் இடம்பெற்ற ‘வரவு எட்டணா, செலவு பத்தணா’ பாடல் காட்சியும் இன்றளவும் நடுத்தர வர்க்கத்தினருக்கு நகைச்சுவை கலந்த பாடம்.

ஜே.பி. சந்திரபாபு :

தமிழில் ஓர் ஆங்கில பாணி நடிகர் என்று சொல்லக்கூடிய அளவிற்கு அசாத்திய திறமையுடன் மக்களை சிரிக்கவைத்து படங்களை ரசிக்க வைத்தவர் சந்திரபாபு. தூத்துக்குடியில் பிறந்தவர். இவருடைய அப்பா இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர்.
 
 
சொத்துகளை பிரிட்டிஷ் அரசாங்கம் பறிமுதல் செய்தது. சந்திரபாபுவின் அப்பா நடத்திய ‘சுதந்திர வீரன்’ என்ற பத்திரிகையும் முடக்கப்பட்டது. இதனால் சந்திரபாபுவின் குடும்பம் கொழும்புக்குச் சென்றது. அவரது தந்தையாரின் விடுதலைக்குப்பிறகு சென்னையில் குடியேறியதால், கலையார்வம் மிக்க சந்திரபாபு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகளைத் தேடியலைந்தார். அவருடைய நண்பர் கணபதி என்பவர்தான் ஆதரவாக இருந்தார். சரியான வாய்ப்புக் கிடைக்காமல் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு கைதாகி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட சந்திரபாபு, அங்கே ஷேக்ஸ்பியர் நாடக வசனங்களைப் பேசி நீதிபதியை அசத்தி, சிறைக்குப் போகாமல் விடுதலையானாராம்.

ஆங்கில பாணி நடிப்பினால் முன்னணி இயக்குநர்களிடம் தன் திறமையை வெளிப்படுத்திக் காட்டிய சந்திரபாபுவுக்கு 1947ல்  ‘தன அமராவதி’ என்ற படத்தில் சிறுவேடத்தில் அறிமுகம் கிடைத்தது. அதன்பிறகும் அவருக்கு கலையுலகில் போராட்டம்தான். ஜெமினி பட நிறுவன அதிபர் எஸ்.எஸ்.வாசன் இவரது திறமையை அறிந்து 1952ல் ‘மூன்று பிள்ளைகள்’ என்ற படத்தில் வாய்ப்பளித்தார்.  தொடர்ந்து டி.ஆர்.மகாலிங்கத்துடன் ‘சின்னதுரை’ என்ற படத்தில் நடித்து, ‘போடா ராஜா பொடி நடையா’ என்ற பாடலையும் பாடினார். நடிப்பிலும் பாட்டிலும் மேற்கத்திய பாணியைக் கையாண்டார் சந்திரபாபு. மோகனசுந்தரம் என்ற படத்தில் நடிக்கவும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. சம்பளம் 200 ரூபாய். 

சென்னைத் தமிழை திரையில் அழகாகப் பேசி மக்களைக் கவர்ந்த முதல் நடிகரும் சந்திரபாபுதான். ஏ.வி.எம்மின் ‘சகோதரி’ படம்தான் சந்திரபாபுவைத் திரையுலகில் நிலைநிறுத்தியது. படம் தயாரான பிறகு, சந்திரபாபுவின் நகைச்சுவையும் ‘நான் ஒரு முட்டாளுங்க’ என்று அவர் பாடிய பாடலும் சேர்க்கப்பட்டு, அவற்றாலேயே அந்தப் படம் பெரிய வெற்றிப்படமானது. 

நடிகர்திலகம் சிவாஜியுடன் ‘சபாஷ் மீனா’ படத்தில் நடித்த சந்திரபாபுவின் நகைச்சுவை பலத்த வரவேற்பைப் பெற்றது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மெகா ஹிட் படமான ‘நாடோடி மன்னன்’ படத்திலும் சந்திரபாபுவின் நடிப்பு பலரையும் கவர்ந்தது. 200 ரூபாய் சம்பளம் வாங்குவதற்கே போராடிய சந்திரபாபு ஒரு கட்டத்தில் 1 லட்ச ரூபாய் சம்பளம் கேட்டுப் பெறும் நிலைக்கு வளர்ந்தார்.

மகாதேவி, பெண், கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, புதையல், குலேபகாவலி, அன்னை, பதிபக்தி, போலீஸ்காரன் மகள், மணமகன் தேவை, பாத காணிக்கை, ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட படங்களில் அவர் பாடிய பாடல்கள் அனைவராலும் ரசிக்கப்பட்டன. ‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை’, ‘உனக்காக எல்லாம் உனக்காக’, பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாலே’, ‘பொறந்தாலும் ஆம்பளையா பொறக்கக்கூடாது’, ‘சிரிப்பு வருது. சிரிப்பு வருது’ என சந்திரபாபு பாடிய பாடல்களில் நகைச்சுவை உணர்வுடன் வாழ்க்கைத் தத்துவங்களும் வெளிப்பட்டன. பெரும்பாலான பாடல்கள் கவியரசர் கண்ணதாசன் எழுதியவை.

திரை வாழ்ககையிலும் சொந்த வாழ்க்கையிலும் பல கசப்பான அனுபவங்களை சந்தித்தவர் சந்திரபாபு. ஆனால், அந்த சோகங்கள் எதுவும் இன்றைய தலைமுறைக்குத் தெரியாதபடி இன்றும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பழைய பாடல்களிலும் நகைச்சுவை காட்சிகளிலும் சிரிக்க வைத்துக்கொண்டிருக்கிறார் அவர்.

டணால் கே.ஏ. தங்கவேலு :

“எழுத்தாளர் பைரவன் நீங்கதானே?”
“சாட்சாத் நான்தான்”
“போராட்டம்னு ஒரு கதை எழுதுனீங்களே?”
”ஆமா.. அது பெரிய போராட்டமாச்சே.”
“அதிலே ஏன் சார் கடைசியா கதாநாயகி செத்துப்போனா?”
“கடைசியாத்தானே செத்தா.. அவ தலைவிதி செத்தா. ஆளை விடுங்க”

நாடக மேடையிலிருந்து திரைக்கு வந்த நகைச்சுவை நடிகர்களில் கே.ஏ.தங்கவேலு வசன உச்சரிப்பாலும் விழி அசைவுகளாலும் ரசிகர்களைக் கவர்ந்தவர். ‘டணால்’ தங்கவேலு என அழைக்கப்பட் இவர் இன்றைய புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர். சந்திரபாபு புகழ்பெற்றிருந்த காலத்திலும் பின்னர் நாகேஷ்  கோலோச்சிய காலத்திலும் தனது நகைச்சுவைக்கெனத் தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்தவர் தங்கவேலு.

‘கல்யாணப் பரிசு’ படத்தில் மன்னார் அண்ட் கம்பெனி மேனேஜர், எழுத்தாளர் பைரவன் என்று ப்ளாக் அண்ட் ஒயிட் காலத்திலேயே கலர் கலராக நகைச்சுவை ரீல் விட்டு கலக்கியவர். ‘அறிவாளி’, ‘கைதி கண்ணாயிரம்’ ‘எங்க வீட்டுப் பிள்ளை’ போன்ற படங்களிலும் தங்கவேலுவின் நகைச்சுவை பெரிதும் கவர்ந்தது.
 
தில்லானா மோகனாம்பாள் படத்தில் நட்டுவாங்கக்காரராக நடித்திருப்பார். சிவாஜி ட்ரூப்பில் பாலைய்யாவின் கலக்கல் என்றால், பத்மினி ட்ரூப்பில் தங்கவேலு கலக்குவார். தங்கவேலும் அவர் மனைவியும் நடிகையுமான எம்.சரோஜாவும் பல படங்களில் இணைந்து நடித்து கலகலப்பாக்கினர். திராவிட இயக்கக் கொள்கைகளில் பற்றுள்ளவரான தங்கவேலு, கடைசிவரை தி.மு.ககாரராக இருந்தார். அவர் இறந்தபோது தி.மு.க கொடிகள் அரைக்கம்பத்தில் பறந்து அவருக்கு அஞ்சலி செலுத்தின.

தமிழ்த்திரைப்பட வரலாற்றின் தொடக்கத்திலிருந்தே நகைச்சுவைக்குத் தனி இடம் உண்டு. புளிமூட்டை ராமசாமி, ஏ.கருணாநிதி, குலதெய்வம் ராஜகோபால் உள்ளிட்ட பலரும் ரசிகர்களைக் கவர்ந்தனர். கலைவாணர், சந்திரபாபு, நாகேஷ், சுருளிராஜன், கவுண்டமணி, விவேக், வடிவேல், சந்தானம் என ஒவ்வொரு கட்டத்திலும் தனி முத்திரை பதித்த நகைச்சுவை நடிகர்கள் ஹீரோக்களுக்கு இணையாக வலம் வந்த பெருமையும் தமிழ்த்திரைக்கே உரியது. அவர்களின் காமெடி தர்பாருடன் இணைந்து கலக்கிய சோ, தேங்காய் சீனிவாசன், எஸ்.எஸ்.சந்திரன், ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.வி.சேகர், செந்தில், சார்லி, தாமு, வையாபுரி, தம்பி ராமைய்யா உள்ளிட்ட ஒரு துணைப் பட்டாளமும் தமிழ்த் திரையை ரசிக்கவைத்துக்கொண்டே இருக்கிறது.  

Comments