16 வயதினிலே: ரஜினி - கமல் டிரெய்லரை வெளியிட்டனர்!!!

5th of October 2013
சென்னை::16 வயதினிலே படம் டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் ரிலீசாகிறது. சென்னையில் நேற்று நடந்த இதன் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ரஜினியும், கமலஹாசனும் பங்கேற்றனர்.
 
16 வயதினிலே படத்தில் ரஜினியும் கமலும் இணைந்து நடித்தனர். ஸ்ரீதேவி, கதாநாயகியாக வந்தார். பாரதிராஜா இயக்கினார், இப்படம் 1977_ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. ஸ்டூடியோக்களில் முடங்கி கிடந்த சினிமாவை இந்த படம் மூலம்தான் கிராமங்களுக்கு கொண்டு சென்றார் பாரதிராஜா. இதில் கமல் கோவணம் கட்டி சப்பாணி கேரக்டரில் நடித்தார்.
 
ரஜினி பரட்டை கேரக்டரில் வில்லனாக வந்தார். "இது எப்படி இருக்கு'' என்று ரஜினி இப்படத்தில் பேசிய பஞ்ச் வசனமும் பத்த வச்சிட்டியே பரட்ட என்று கவுண்டமணி பேசும் வசனமும் பிரபலம். இளையராஜா இசையில் சோளம் விதைக்கையிலே, ஆட்டுக்குட்டி முட்டையிட்டு, செந்தூரப் பூவே, மஞ்சக்குளிச்சு அள்ளி முடிச்சு போன்ற இனிமையான பாடல்கள் இதில் உள்ளன.
 
இப்பாடல்கள் தமிழகமெங்கும் மூலை முடுக்கெல்லாம் ஒலித்தது. செந்தூரப்பூவே பாடலை பாடிய எஸ்.ஜானகி சிறந்த பாடகிக்கான தேசிய விருதை பெற்றார். ரஜினி, கமல் இணைந்து நடித்த நினைத்தாலே இனிக்கும் படம் நேற்று ரிலீசாவதை தொடர்ந்து 16 வயதினிலே படமும் டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு விரைவில் ரிலீஸ் செய்யப்படுகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா வடபழனி கமலா தியேட்டரில் நேற்று காலை நடந்தது. ரஜினி, கமல், பாரதிராஜா,ஙிபாக்கிராஜ், பார்த்திபன், கமலாஸ் அதிபர்கள் சீத.நாகப்பன், சீத.வள்ளியப்பன், கணேஷன் உள்ளிட்ட பல சினிமா உலக பிரமுகர்கள் கலந்துக்கொண்டனர். 

Comments