ரகசிய திருமணம் செய்து கொண்டேனா? பதில் சொல்கிறார் பூஜா!!!

4th of September 2013
சென்னை::இடி, மழை, புயல், பூகம் பம் எது வந்தாலும், பூஜா மட்டும் தன் போனை எடுத்துப் பேச  மாட்டார்  என்று பரவிய செய்தியே அவருக்கு ஒருவிதத்தில் பலம்தான். நேரில் பார்க்கும்போது, கோபத்தை மாற்றிவிடக் கூடிய வித்தை தெரிந்தவர். கலகலப்பு, செழுமை யான  பேச்சு, புத்திசாலித்தனமான அணுகுமுறை, இதெல்லாம்  அவரது  பிளஸ். ‘விடியும்முன்’ படத்தின் புரமோஷனுக்காக  இலங்கையிலிருந்து சென்னை வந்திருந்த அவரை சந்தித்துப் பேசினோம்.

அடிக்கடி பார்க்க முடியலையே?
எனக்கும் வருத்தம்தான். ‘நான் கடவுள்’, என்னை அப்படியே புரட்டிப் போட்டுடுச்சு. சிறந்த நடிகைக்கான தமிழக அரசு விருது கூட வாங்கிட்டேன். ஆனா, பாலா கொடுத்த பவர்ஃபுல் கேரக்டர் மாதிரி, அடுத்தடுத்த படத்திலும் கிடைக்கும்னு நம்பி காத்திருந்தேன். சாதாரணமான கேரக்டர்களே வந்தது. ஒரு கேரக்டர் பண்ணினாலும், அதை சிறப்பா பண்ணணும்னு காத்திருந்தேன். இப்ப ‘விடியும்முன்’ கிடைச்சிருக்கு.

இதில் என்ன ரோல்?
நானும், மாளவிகா மணிக்குட்டன் என் சிறுமியும் முக்கிய கேரக்டர்கள். நாலு ஆண்கள், மூணு சம்பவங்கள், ரெண்டு பெண்கள், ஒருநாள் நடக்கிற சம்பவங்களை மையமா வச்சு படம் உருவாகியிருக்கு. கோலிவுட்ல எனக்கு ஏற்பட்டிருந்த இடைவெளியை நிரந்தரமா நீக்கும் விதத்துல இந்த படமும், என் கேரக்டரும் அமைஞ்சிருக்கு. ‘பூஜாவா இது?’னு எல்லாரும் மூக்கு மேல விரல் வெச்சு ஆச்சரியப்படுவீங்க.

தொடர்ந்து நடிப்பீங்களா?
இனிமே நிறைய படங்கள்ல நடிப்பேன். சென்னைக்கும், பெங்களூருக்கும் அடிக்கடி பறந்துகிட்டிருந்தாலும், நல்ல கதை கிடைச்சா நடிப்பேன்.

கெஸ்ட் ரோல் கூட பண்றீங்களே?
‘துரோகி’, ‘ஆரஞ்ச்’ படங்கள்ல நடிச்சிருப்பேன். படத்துல என் கேரக்டர் பிடிச்சிருந்தா, கண்டிப்பா ரசிகர்கள்கிட்ட போய் சேரும்ங்கிற நம்பிக்கை ஏற்பட்டா, கெஸ்ட் ரோலா இருந்தாலும் நடிப்பேன். ஆனா, ‘விடியும்முன்’ ரிலீசானதும் என்னை ஹீரோயினா மட்டுமே நடிக்க கூப்பிடுவாங்க.

சிங்களத்துல முன்னணி நடிகையாமே?
இதுவரைக்கும் அங்க 4 படங்கள்ல நடிச்சிருக்கேன். எல்லாமே ஆடியன்ஸ்கிட்ட நல்லா ரீச்சாகி இருக்கு. சமீபத்துல ‘குச பபா’னு ஒரு படம் பண்ணேன். செம ஹிட். அடுத்து ஒரு படம் பண்றேன். இதுவும் பேசப்படும் விதமா இருக்கும்.

ரகசிய கல்யாணம் பண்ணிட்டீங்களாமே?
ஓ. இது வேறயா. நானும், ஒரு சிங்கள ஹீரோவும் ரகசிய கல்யாணம் பண்ணிகிட்டதா சொன்னாங்க. அதுதானே? அது வதந்தி. அதுக்குள்ள கல்யாணத்துக்கு என்ன அவசரம்? இப்ப நடிப்புல மட்டும்தான் கவனம்.

உங்க சமூக சேவை எப்படி போகுது?
பெங்களூர் மக்கள் மத்தியில, சுற்றுச்சூழல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு அமைப்பு சிறப்பா செயல்பட்டுகிட்டிருக்கு. அங்கே நான் தன்னார்வலரா சேர்ந்து ஒர்க் பண்றேன். புகை பிடிப்பது தீங்கான விஷயம்னு சொல்லும் குறும்படத்துலயும் நடிச்சிருக்கேன். நமக்கு யாரு, என்ன உதவி செய்தாங்கன்னு பார்க்கிறதை விட, நாம் யாருக்கு, என்ன உதவி செய்திருக்கோம்னு பார்க்கணும். அதுதான் மனிதத்தன்மை. நான் மனிதநேயமுள்ள மனுஷியா இருக்க ஆசைப்படறேன்.

Comments