28th of September 2013
சென்னை::விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் இணைந்த முதல் படமான ‘துப்பாக்கி’ சில சர்ச்சைகளை சந்தித்தாலும் மாபெரும் வெற்றி வெற்றது. விஜய் சமீபத்தில் நடித்த படங்களில் இப்படம் பிரம்மாண்டமான படைப்பாக இருந்ததால் முருகதாஸ் மீது விஜய்க்கு தனி மரியாதையும் ஏற்பட்டது. ஆகையால், முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் நடிக்கலாம் என முடிவெடுத்தார் விஜய்.
துப்பாக்கி’யைத் தொடர்ந்து ‘தலைவா’, ‘ஜில்லா’ ஆகிய படங்களுக்கு நடிக்க ஒப்புக்கொண்டிருந்த விஜய், ‘தலைவா’ வெளியானதைத் தொடர்ந்து தற்போது ‘ஜில்லா’ படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இப்படத்தை முடித்ததும் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வந்தன.
மிகப்பெரிய கதைக்களத்துடன் உருவாகும் அப்படத்திற்கு அதிரடி என பெயர் வைத்துவிட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், முருகதாஸ் படத்திற்கான தலைப்பை மறுத்துவிட்டார். ஆனால், இவருடைய இயக்கத்தில் விஜய் நடிக்கப் போகிறார் என்பதற்கு எந்தவித பதிலும் கூறவில்லை.
இந்நிலையில், விஜய் அடுத்து முருகதாஸ் இயக்கத்தில்தான் நடிக்கப் போகிறார் என்பது உறுதியாகியுள்ளது. இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. ஆனால் கதாநாயகி தேர்வு நடந்துவிட்டது. இப்படத்தில் விஜய்-க்கு ஜோடியாக சமந்தா நடிக்கவிருக்கிறாராம். மேலும், ‘கொலவெறி’ புகழ் அனிருத் இசையமைக்கிறார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவை கவனிக்கிறார். இவர் ஆர்யா, நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ராஜாராணி’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் இந்த புதிய படம் டிசம்பர் மாதத்தில் தொடங்கப்படும் என தெரிகிறது.
Comments
Post a Comment