கார்த்தியின் அடுத்தப் படம் 'காளி'!!!

23rd of September 2013
சென்னை::'அட்ட கத்தி' படத்தை இயக்கிய பா.ரஞ்சித், இயக்கத்தில், ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் புது படத்திற்கு 'காளி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

பருத்தி வீரன் துவங்கி தங்களது தரமான படைப்புகளால், ரசிகர்களின் பேராதரவை பெற்று தொடர் வெற்றிகளை குவித்து கொண்டிருக்கிறது கே.இ.ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம்.  இதன் அடுத்தடுத்த படைப்புகளாக தீபாவளிக்கு 'ஆல் இன் ஆல் அழகு ராஜா'வும், பொங்கலுக்கு 'பிரியாணி' யும் வெளிவர உள்ளன.

இதற்கிடையில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தனது அடுத்தப் படத்தை அறிவித்துள்ளது. இப்படத்திற்கு 'காளி' என்று தலைப்பு வைக்கபப்ட்டுள்ளது. பா.ரஞ்சித் இயக்கும் இப்படத்தில் கார்த்தி, வட சென்னை வாலிபராக நடிக்கிறார். கார்த்திக்கு ஜோடியாக, தெலுங்கு ஹீரோயின் கத்ரினா தெரேசா நடிக்கிறார். இவர்களுடன் நாசர், பாலாசிங், ரமா போன்ற பிரபல நடிகர்களுடன் புதுமுகங்கள் பலரும் இப்படத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தில் நடிக்க உள்ள புதுமுகங்களுக்கு கடந்த ஒரு மாதமாக நடிப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

'அட்டகத்தி' படத்தின் மூலம் சென்னை புறநகர் மக்களின் வாழ்க்கையையும், இளைஞர்களின் காதலையும் வெளிச்சம் போட்டுக் காட்டிய பா.ரஞ்சித், 'காளி' படத்தின் மூலம் வட சென்னை மக்களின் வாழ்க்கையை திரையில் காட்ட உள்ளார்.

இப்படத்தைப் பற்றி கூறிய இயக்குநர் பா.ரஞ்சித், "வடசென்னை என்றதுமே பழுப்பேறிய கட்டடங்கள், அழுக்கு மனிதர்கள், வன்முறை தோய்ந்த வாழ்க்கை போன்றவைதான் இதுவரை படங்களில் காட்டப்பட்டு வந்துள்ளன. அவை யாவும் மிகைப்படுத்தப்பட்ட பிம்பங்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

வடசென்னை மக்களின் வாழ்க்கையில் உள்ள வீரம்,ஈரம்,பாசம்,காதல் இதுவரை தமிழ் சினிமா காட்டியது போலிருக்காது.

நான் இப்படத்தில் வடசென்னை மக்களின் வியர்வை தெறிக்கும் உழைப்பை,  மயிலிறகு மனசை,பச்சையம் மாறாத பாசத்தை, கட்டுக்கடங்காத கலைரசனையை கனவு பொங்கும் காதலை அப்படியே நிஜமாக சொல்ல இருக்கிறேன். நான் அம்மக்களிடம் கண்டு ரசித்தவை வியந்தவை ஏராளம்.

தெருவுக்கு ஒரு இசைக்குழு,வீதிக்கு வீதி விளையாட்டு குழு,வாத்தியக் குழுஇருக்கும் என நாலு தெருவுக்குள் நிச்சயம் ஒரு நடனக் குழுவாவது இருக்கும்.

விளையாட்டு,இசைக்கச்சேரி, நடனம், வீரக்கலை என எதுவாக இருந்தாலும் முழு மூச்சாக இருந்து மூர்க்கமான ஊக்கத்துடன் கற்றுக் கொள்ளும் இளைஞர்களின் ஆர்வம் நம்மை வியப்பூட்டும். பெரும்பாலும் இவர்கள் யாருக்கும் குருநாதர்களே கிடையாது. அவ்வளவு கலைகளையும் தங்கள் முயற்சியின் மூலமே கற்றுக் கொள்வார்கள்.

அப்படி ஒரு வடசென்னை வாலிபன் தான் காளி. அவன் படித்த இளைஞன், பாசக்கார கலைஞன், பல கலைகளின் ரசிகன். அவனும், அவன் குடும்பமும், அவன் சார்ந்த மக்களும், அவர்களின் கொண்டாட்டமும் குதூகலமும் தான் 'காளி' திரைப்படம்.

பெரம்பூரில் தொடங்கும் இப்படம் வடசென்னையின் வார்த்தெடுப்பாக வண்ண திரையில் விரியும்." என்றார்.

முரளி.ஜி, இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இவர் புனே திரைப்படக் கல்லூரியில் படித்தபோதே தேசிய விருது வென்றவர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி தொடங்குகிறது. 

Comments