யா யா - திரைப்பட விமர்சனம்!!!

24th of September 2013
சென்னை::தமிழ் சினிமாவின் தற்போதைய காமெடி மன்னன் என்ற பட்டத்தோடு வலம் வரும் சந்தானம், நேற்று பெய்த மழையில் தீடீரென்று பூத்த காமெடி ஹீரோக்களில் ஒருவரான மிர்ச்சி சிவா, சமீபத்திய தமிழ் சினிமா காமெடி கலவரக்காரரான பவர் ஸ்டார் இவர்களை ஒப்பந்தம் செய்துவிட்டால் போதும், மற்றபடி கதை, திரைக்கதை, காட்சியமைப்பு என்று எதைப் பற்றியும் ரசிகர்கள் யோசிக்க மாட்டார்கள், சிரித்து விட்டு நமது கல்லாவை நிரப்பி விடுவார்கள்! என்று யோசித்து, இந்த கூட்டணியை வைத்து தயாரிப்பாளர் எம்.எஸ்.முருகராஜ் இந்த 'யா யா' படத்தை தயாரித்திருப்பார் போலிருக்கிறது. அவருடைய போதத காலம் 'யா யா' பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு வெளியே வரும் ரசிகர்கள் 'ஐய்யோ ஐய்யோ' என்று புலம்புகிறார்கள்.

சிவாவும், சந்தானமும் நண்பர்கள், ஆளுக்கு ஒன்று என்று இவர்களுக்கு இரண்டு ஜோடிகள், சிவாவுக்கு தன்ஷிகா, சந்தானத்திற்கு சந்தியா. இவர்கள் காதல் காட்சிகள் ஒரு பக்கம் காமெடியாக இருந்தாலும் (சிரிப்பு வராது), காமெடி காட்சிகளோ, ரொம்ப கொடுமையாக இருக்கிறது. இப்படியே சயின் லூசான சைக்கிள் போல, பல இடங்களில் நின்று நின்று நகரும் படம், இறுதியில் ரசிகர்களை "ஐய்யோ ஐய்யோ எங்களை கொல்றாங்க..." என்று கலங்க வைக்கிறது. (சிலர் பாதியில் வெளியேறிவிட்டார்கள்)

மிர்ச்சி சிவா, ஆக்ஷன் ஹீரோவாக வேண்டாம், அட காமெடி படங்களிலேயெ, வேற மாதிரியான ஜானர் படத்தையும், நடிப்பிலும், எக்ஸ்பிரஸ்ன்லையும் கொஞ்சமாவது வித்தியாசத்தை காண்பிக்க முயற்சியாவது செய்திருக்கலாம். அடுத்தப் படத்திலையாவது கொஞ்சம் நடிங்க பாஸ்.

காமெடி மன்னர் சந்தானம் இந்த படத்தில் ஒரு சிப்பாய் அளவுக்கு கூட தனது பலத்தை பயன்படுத்தவில்லை. மற்ற படங்களில் நிராகரித்த சிலவற்றை, இந்த படத்தில் பயன்படுத்தி துட்டு பார்த்துவிட்டார் போலிருக்கிறது மனுஷன்.

தன்ஷிகா, சந்தியா இரண்டு நாயகிகளுக்கும் பெரிதாக சொல்லும்படி வாய்ப்பில்லை என்றாலும், கமர்ஷியல் படங்களில் பயன்படுத்தும் அளவுக்கு கூட இவர்களை பயன்படுத்தாமல் ஏன் தான் விட்டுவிட்டார்களோ.

காமெடிப் படத்திற்கு எதற்கு கதை, சிரிக்கும்படியான காமெடி இருந்தாலே போதாதா! என்பது நமக்கு புரிகிறது. ஆனால், காமெடி என்ற பெயரில், நம்மை கடுப்பாக்கினால் என்ன செய்வது. கடுப்பேத்தினாலும் பரவாயில்லை மய்லாட், இந்த பவர் ஸ்டாரை காட்டி அடிக்கடி பயமுறுத்துகிறார்களே அதைதான் மய்லாட் பொருத்துக்கவே முடியலை.

இயக்குநர் ராஜசேகரனுக்கு இது தான் முதல் படம். பாவம், இதுவே கடைசி படமாக ஆகிவிடுமோ என்று நினைக்க தோன்றும் அளவுக்குப் படத்தை எடுத்திருக்கிறார்.

Comments