ராஜா ராணி:: விமர்சனம்!!!

29th of September 2013
சென்னை::காதலிச்சு ஏதோ ஒரு வகையில் காதலர்கள் சேராமல் போய்விட்டால் அதன்பிறகு வாழ்க்கையே கிடையாது என நினைக்க கூடாது. அதற்கு பிறகு அமையும் வாழ்க்கையை, வாழ்நாள் முழுக்க சந்தோஷமாக கொண்டு செல்ல வேண்டும். காதல் ‌தோல்விக்கு பிறகும் வாழ்க்கை இருக்கு... காதலும் இருக்கு... என்ற கருத்தை புதிய கோணத்தில் சொல்லியிருக்கும் படம் தான் ராஜா ராணி. இந்த கதையை புதுமுகம் அட்லீ, அவ்ளோ அழகாக சொல்லியிருக்கிறார்.

கதைப்படி ஜான் எனும் ஆர்யாவுக்கும், ரெஜினா எனும் நயன்தாராவுக்கும், பெற்றோர் விருப்பத்திற்காக திருமணம் நடக்கிறது. திருமணம் நடந்தாலும் அவர்கள் கணவன் - மனைவியாக வாழ்வது கிடையாது. எலியும்-பூனையும் போல் எப்போதும் முறைத்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஒருநாள் இரவு நயன்தாராவுக்கு திடீரென வலிப்பு வர குடிபோதையில் இருக்கும் ஆர்யா, எப்படியோ அவரை ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார். அங்கு அவருக்கு கொடுக்கப்படும் சிகிச்சையை பார்த்து கண்ணீர் விடும் ஆர்யா அவர் மீது பாசம் கொள்கிறார். எதனால் இப்படி வலிப்பு ஏற்பட்டது என்று நயனிடம், ஆர்யா விசாரிக்கையில் பிளாஷ்பேக் விரிகிறது. நயன்தாரா ஏற்கனவே சூர்யா எனும் ஜெய்யை காதலித்து, பதிவு திருமணம் செய்யும் வேளையில் ஜெய் திடீரென அமெரிக்காவுக்கு சென்று அங்கு தற்கொலை செய்து கொண்டுவிட்டதாக வந்த தகவலால் அந்த அதிர்ச்சியில் இதுபோன்று ஏற்பட்டுவிட்டதாக சொல்ல, நயன் மீது ஆர்யாவுக்கு இன்னும் அன்பு கூடுகிறது.

இதுஒருபுறம் இருக்க ஆர்யா, நஸ்ரியாவை காதலித்து வீட்டுக்கு தெரியாமல் ஒரு கோயிலில் கல்யாணம் பண்ணி, மறுநாள் அவுட்டிங் போகும் போது எதிர்பாரா விதமாக நஸ்ரியா சாலை விபத்தில் உயிரிழக்கிறார். இதனால் ஆர்யாவும் இடிந்து போய் 4 வருடமாக நஸ்ரியா நினைப்பாகவே இருக்கிறார். ஆர்யாவின் காதல் கதையை கேட்டு நயன்தாராவுக்கும் அவர் மீது பாசம் ஏற்படுகிறது. ஆனால் இந்த பாசத்தை இருவருமே வெளிக்காட்ட நினைக்கும்போது ஒவ்வ‌ொரு முறையும் ஏதாவது ஒரு மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் இவர்களுக்குள் ‌ஏற்படுகிறது. இதற்கிடையே ஜெய், உயிரோடு இருக்க  கடைசியில் நயன்தாரா ஜெய்யுடன் இணைந்தாரா? அல்லது ஆர்யாவுடனேயே தனது வாழ்க்கையை தொடர்ந்தாரா? என்பது மீதிக்கதை!

ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா என நான்கு பேர் இருந்தாலும் நால்வருக்கும் சமமான ரோல் கொடுத்துள்ளார் இயக்குநர். ஆர்யா வழக்கம் போல் தனக்கான பாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார்.

ஆர்யாவைக்காட்டிலும் ஒரு சில நிமிடங்களே வந்தாலும் அசத்தி விட்டார் ஜெய். பயந்தசுபாவம் உடைய ஜெய்யை, நயன்தாரா போனில் கலாய்க்கும் போது அவர் அழுவது தொடங்கி, கடைசி காட்சியில் ஆர்யாவை, ஏய்... போடா என்று சொல்லும் காட்சிகள் வரை தனக்கான ரோலை பக்காவாக பண்ணியிருக்கிறார் மனிதர்.

யாரடி நீ மோகினி படத்திற்கு பிறகு நயன்தாரா நடிப்பில் மிளிர்ந்திருக்கிறார். ஜெய்யுடனான ரொமான்ஸ் காட்சியிலும் சரி, கணவர் எனும் பெயரில் இருக்கும் ஆர்யாவுடன் எப்போதும் முறைத்து கொண்டு திரியும் காட்சிகளிலும் சரி முகத்தில் அவர் காட்டும் எக்ஸ்பிரஷன் சூப்பர். அதிலும் வலிப்பு ஏற்படும் போது, கண்ணின் கருவிழியே தெரியாத அளவுக்கு கண்ணில் அவர் காட்டும் நடிப்பு சூப்பர்ப்...!!

ஏய் ரிங்கா ரிங்கா... எனும் பாட்டுக்கு நைட்டியை மடித்து கட்டி, வாயில் டூத்பிரஸ் உடன் ஆடியபடி அறிமுகமாகும் நஸ்ரியா, தொடர்ந்து பிரதர் பிரதர்... என ஆர்யாவை கடுப்பேற்றும் காட்சிகளிலும் சரி, பின்பு அதே ஆர்யாவுடனான ரொமான்ஸ் காட்சிகளிலும் சரி கொள்ளை அழகு. ஒவ்வொரு காட்சிக்கும் முகத்தில் அவர் காட்டும் எக்ஸ்பிரஷன் ஆஸம்...!

வழக்கம்போல் சந்தானத்தின் டைமிங் காமெடிகள் தியேட்டரை அதிரவைக்கின்றன. சந்தானம் தவிர ஜெய்யின் நண்பராக வரும் சத்யன், நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.

மணிரத்னத்தின் ‘மெளனராகம்’ ஸ்டைல் கதை என்றாலும், அதை இன்றைய காலத்துக்கு ஏற்ற மாதிரி ஸ்டைலாக கொடுத்து இருப்பதில் புதியவர் அட்லீ மிளிர்கிறார்.
‘‘உலகத்துல யாருமே மேட் பார் ஈச் அதரா பொறக்கிறது இல்ல; வாழ்ந்து காட்டுறதுல தான் இருக்கு’’,,‘‘நம்ம கூட இருக்குறவங்க நம்மள விட்டு போய்ட்டாங்கன்னா, நாமளும் போகணும்னு அவசியம் கிடையாது. என்னைக்காவது ஒரு நாள் நாம் ஆசப்பட்ட மாதிரி லைப் மாறும்’’ போன்ற வசனங்களுக்கு தியேட்டரே எழுந்து நின்று கை தட்டுகிறது.

ஆஸ்பத்திரியில், நயன்தாராவை சேர்த்திருக்கும்போது, டாக்டர் வந்து ஆர்யாவிடம், மனைவி பெயர் என்ன என கேட்கும்‌போது தெரியாது என்று ஆர்யா சொல்வதெல்லாம் ரொம்ப ஓவர். இதேபோல் ஜெய், நயன்தாராவை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டு பதிவு அலுவலகத்திற்கு வராமல், ‌சொல்லாமல் கொள்ளாமல் அமெரிக்கா பறப்பது ஏன், அதற்கான காரணத்தை ஒரு சில காட்சிகளிலாவது டைரக்டர் காட்டியிருக்கலாம், அட்லீஸ்ட்  நயன்தாராவுக்கு ஒரு போனாவது பண்ணியிருக்கலாம் உள்ளிட்ட ஒரு சில குறைபாடுகள் இருந்தாலும், ஜீ.வி.பிரகாஷ் குமாரின் அசத்தல் இசை, ஜார்ஜ் சி.வில்லியம்சின் ரம்மியமான ஒளிப்பதிவு, அந்தோணி எல்.ரூபனின் படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் ராஜா ராணி அழகிய ஓவியமாய் மிளிர்ந்து இருக்கிறது.

மொத்தத்தில், ‘‘ராஜா ராணி’’ - ரசிகர்களின் இதய அரண்மனையில் ‘மகுடம்’ சூடப்போவது நிச்சயம்!!

நமது தினமலர் இணையதளத்தின் சினிமா பகு‌தியில், பல படங்களின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில் திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...
வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்

தன் கண் முன்னால்   காதலி விபத்தில் இறந்ததைப்பார்த்த காதலன்,  தன் காதலன் இறந்த செய்தியைக்கேட்டு  இடிந்த காதலி  இருவரும் அவரவர் பெற்றோர் விருப்பத்துக்காக திருமணம் செய்தால் என்ன ஆகும்? இதுதான் படத்தின் ஒன் லைன். ஆனால் மேக்கிங்க் ஸ்டைலில் புது. இயக்குநர் அட்லி  ரொம்பவே மெனக்கெட்டு இருக்கிறார்  . அவருக்கு  ஒரு சபாஷ்
மவுன ராகம் படத்தின் லேட்டஸ்ட் வெர்ஷன் தான் . அதில் சந்தேகம் இல்லை . ஷங்கரின் உதவி இயக்குநரான அட்லி, மணிரத்னம் கதைக்கருவை எடுத்தது ஆச்சரியம்.

படத்தில்  அரைமணி நேரமே வந்தாலும் அட்டகாசமான அப்ளாஷ் அள்ளுபவர் ஜெய் தான் . இந்த மாதிரி  ஒரு பயந்தாங்கொள்ளி கேரக்டர்  கிடைத்தால் எல்லா பொண்ணுங்களுக்கும் கொண்டாட்டமே என்னும் சைக்காலஜியில் அந்த கேரக்டர் செம ஹிட் ஆகி விட்டு இருக்கிறது . பாடி லேங்குவேஜ் , டயலாக் டெலிவரி எல்லாவற்றிலும் ஜெய் அசத்தி உள்ளார் . (ஜோடியாக அஞ்சலி வந்திருந்தால் இன்னும் கலக்கலா, நேச்சுரலா  இருந்திருக்கும்)

நயன்தாரா  யாரடி  நீ மோகினி க்குப்பின்  முழுக்க முழுக்க ஸ்கோர் செய்யும் வாய்ப்புள்ள  கேரக்டர் . நல்லா பண்ணி  இருக்கார் . அவர் உதட்டில்  நடு மண்டலத்தில்  உள்ள அந்த மச்சம் செம கிக் .  மாடர்ன் டிரஸ் போட்டாலும் , சேலை கட்டினாலும்  ஒரே வித அழகுடன்  மிளிர்வது நயனின்  தனிச்சிறப்பு.

ஆர்யா,  கார் கம்பெனியில் ஒர்க்  பண்ணும் ஆள் எப்படி  இருப்பாரோ அப்படியே கண்  முன் நிறுத்துகிறார் . அருமையான நடிப்பு , ஆனால்  அவர்  ஆடியன்ஸ் மனம் கவரும் அளவு பிரமாதப்படுத்தவில்லை.

நஸ்ரியாவின்  கியூட்டான  முகபாவங்கள் அழகு , ஆனால் ஆங்காங்கே செயற்கை இழை தட்டுகிறது . ஆர்யா - நஸ்ரியா கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க் அவுட் ஆகி இருக்கு
சந்தானம் காமெடிக்கு , சொல்லவே வேணாம் . அவர் வரும் காட்சிகள் எல்லாம் படத்துக்கு பிளஸ்சே.

சத்யன் கொஞ்சம் சிரிக்க வைக்கிறார் , சத்யராஜ் நயனின் அப்பாவாக வந்து  நிறைவான நடிப்பைத்தந்திருக்கிறார்

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1.  நயன் தாராவுக்கு அதிர்ச்சியான செய்தி கேட்கும்போது  வரும் காக்கா வலிப்பு மாதிரியான  நோய் கட்டத்தில் அவர் கண்கள் சொருகி மயங்கி துடிப்பது  இயல்பான நடிப்பு .

2. ஜெய் - நயன்  இடையே மலரும்   கஸ்டமர் கேர் லவ் ஸ்டோரி படத்துக்கு பெரிய  பூஸ்ட் அப் . ஆரவாரமான காட்சிகள் , பிரமாதமான  திரைக்கதை   ஏரியா

3. நான் கடவுள்  வில்லனை காமெடியாகப்பயன் படுத்தி  இருப்பது  இயக்குனரின் சாமார்த்தியம்

4. சந்தானத்தின்  காமெடி டிராக் படத்தின்  கதையோடு  ஒன்றி வருவது 

5.  நஸ்ரியாவுக்கு ஏற்படும் விபத்து படமாக்கப்பட்ட விதம் ஷங்க்ரை நினைவு படுத்துது , குட் ஒர்க்

6. ஜார்ஜ் விலியம்சின் ஒளிப்பதிவு அழகு , ஜி வி பிரகாஷின் இசை  குட் , பின்னணி இசை ஆங்காங்கே அண்ணன் எங்கியோ சுட்டிருக்கிறார் என எண்ண வைக்கிறது

இயக்குநரிடம்  சில  கேள்விகள்

1.என்ன தான் ஆர்யாவுக்கு நயனைப்பிடிக்கலைன்னாலும் மேரேஜ் ஆகி 10 நாள் ஆகி அவர் பேரு , போன் நெம்பர் கூடத்தெரியாம  இருக்குமா? ஹாஸ்பிடலில்  நயன் பேரென்ன என டாக்டர் கேட்க  ஆர்யா  தெரியாது என்பது  கேலிக்கூத்து

2. ஜெய்  ரெஜிஸ்டர் ஆபீஸ்க்கு வர்ரேன்னு சொல்லிட்டு வர்லை . 6 மணீக்கு ஆபீஸ்  முடியுது . அப்போ அப்பா சத்யராஜ் கார்ல வந்து  நயனை  ஜெய் வீட்டுக்கு  கூட்டிட்டுப்போறார் , அப்போ அவர் வாட்ச்ல மிட் நைட் 12 17  காட்டுது , அதுக்குள்ளே 6 மணி நேரம் ஆகி இருக்குமா? மீறி மீறிப்போனா  8 மணி தான் ஆகி இருக்கும் , பேக்  கிரவுண்ட் ஷாட்டும் மிட் நைட் மாதிரியே கலரிங்க்

3. ஜெய்   ரெஜிஸ்டர் மேரேஜ் வரை ஓக்கே சொன்னவர்  பின் மனம் மாறுவதற்கு காட்சி ரீதியாக விளக்கம் வைத்திருக்கனும் . ஜஸ்ட்  ஒரு டயலாக்கில் அப்பா எதிர்த்தார் என்பது எல்லாம் பத்தாது

4.  நயன்தாரா  தன் அப்பா மடியில் சாய்ந்து  கண்ணீர்  விடும்போது  கண்ணீர்  பச்சைக்கலரில் , நேவி  புளூ கலரில் வருது . காட்சியின்  சீரியசை காமெடி ஆக்குது . அந்த  சோக சீனில் மட்டும்   மேக்கப்பை குறைச்சு கண்ணீரை  வெள்ளை ஆக்கி இருக்கலாம்.

5. படம்  முழுக்க  கண்ணியமான்  உடையில்  வரும் நயன்  முக்கியமான சோக காட்சியில்    சிவப்புக்கலர்  புடவையில் அவ்வளவு  லோ ஹிப்பில் வர வேண்டுமா?

6. பாடல் காட்சிகளில்  இன்னும்  மணிரத்னத்தனம் வேண்டும் , சுமார்தான்

7. கிளைமாக்ஸில் இறந்ததா சொல்லப்படும்  ஜெய்   உயிரோடு வருவது  திரைக்கதைக்குத்தேவை  இல்லாத ஒன்று

சி பி கமெண்ட்
 
காதலர்கள்  , நஸ்ரியா  நயன்  ரசிகர்கள்   என இளைஞர்களுக்குப்பிடிக்கும் , படம் போர் அடிக்காம போகுது . பெண்களையும்  இது கவரும்  , கடைசி 30  நிமிடங்கள் மட்டும்  கொஞ்சம் போர் , ஏ , பி செண்ட்டர்களீல்  ஹிட் ஆகிடும் , சி செண்ட்டர்களீல்  சுமாராத்தான் போகும்

Comments